Friday, 22 June 2012


          
பருத்திப்பெருவழி @             கிரேட்காட்டன்ரோடு        கிரேட் காட்டன் ரோடு தூத்துக்குடி நகரத்தின் பிதான சாலைகளில் ஒன்று. இது மேலும் மேற்கில் WGC ரோடு என்கிற வெஸ்ட் கிரேட் காட்டன் ரோடாகிய மேல பெரிய காட்டன் ரோடு, தெற்கு காட்டன் ரோடு, வடக்குக் காட்டன் ரோடு என்று வளர்ந்து பிரிகிறது. அது என்ன கிரேட் காட்டன் என்கிற கேள்வி நீண்ட நாட்களாய் எனக்கு இருந்து வந்தது. ஒரு சந்தர்ப்பத்தில் தமிழ் நாட்டளவில் சிறந்த சமூக பண்பாட்டாய்வாளரென்று அறியப்படுகிற நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன்அப்போது அவரிடம் இந்தக் கேள்வியை கேட்டேன். பிரிட்டீஸ் இந்தியாவில் திருநெல்வேலி கலக்டராக பணியாற்றியவர் ஆர்தர் காட்டன் என்பவர். அவர் நினைவாக இந்த பெயர் உருவாகி இருக்கலாம் என்று  ஒரு கருத்தைச் சொன்னார்இதில் எனக்கு அவ்வளவாக உடன்பாடில்லை. சர். ஆர்தர் காட்டன் என்ற வெள்ளையர் திருச்சியில் செயல்பட்டு வந்த tank devalepment region என்ற அன்றைய வெள்ளை அரசின் அமைப்பின் தலைவராக செயல்பட்டு வந்தார். எனவே நண்பர் சொன்ன தகவல் எந்த அளவுக்கு சரியாக இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகம் இருந்தது.             
             
                   ஒரு நாள் சில்க் ரோடு என்கிற silk route ஐ பற்றி தெரிந்து கொள்ள நேர்ந்ததுபண்டைய காலத்தில் சீனாவின் பட்டு வணிகத்தின் பொருட்டு உருவான தரை வழிப்பாதையே இது.   சீனாவிலிருந்து மத்திய தரை நாடுகள் வழியே ஐரோப்பாவை இணைக்கிறது இத்தரை வழிப்பாதை. இதன் நீளம் ஏறத்தாழ 4000 மைல்கள் இருக்கும். இந்தப் பாதையின் வழியே சீனாவிலிருந்து பட்டு மட்டும் வெளியிடங்களுக்குச் செல்லவில்லை. பட்டுடன் தேயிலை, பீங்கான் பாத்திரம் போன்று பலவும் சென்றன. மேலும் ஐரோபிய மற்றும் ஆசிய நாடுகளுக்கு இடையேயான கலை, பண்பாடு, அறிவியல் பரிமாற்றத்திற்கும் பெரிதும் உதவியது இது என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கூற்று.    

            சில்க் ரோடு பற்றி எனக்குத் தெரிய வந்த பின் எனது காட்டன் ரோடு தொடர்பான சிந்தனை பல தடத்தில் பயணப்படலாயிற்று. ஒரு சில பழைய குறிப்புகள், சில வயதானவர்கள் சொன்ன செவி வழிச் செய்திகள் போன்றவற்றின் அடிப்படையில் சில வெளிச்சங்கள் தோன்றின. கிழ்க்கிந்திய கம்பெனியைத் தொடர்ந்து ஆட்சி செய்த பிரிட்டீஸ் அரசும் இரும்பு, பருத்திப் போன்ற கச்சாப் பொருட்களை இங்கு மலிவான விலைக்கு கொள்முதல் செய்து தங்கள் நாட்டிற்கு ஏற்றுமதி செய்தும் பின்  அங்கு அவற்றைப் பண்டங்களாக மாற்றி இங்கு இறக்குமதி செய்து கொள்ளை லாபத்திற்கு விற்று நமது நாட்டை சுரண்டி கொள்ளை அடித்தனர். இது நம் பள்ளிகளின்  வரலற்றுப் புத்தகங்கள்  நமக்குச் சொல்லி தருகின்ற பாடம். நமது கரிசல் காட்டில் விளைகின்ற பருத்தியினை மலிவாய் கொள்முதல் செய்து அவற்றை எற்றுமதி செய்ய தூத்துக்குடிக்குக் கொண்டுச் செல்ல அன்றைய வெள்ளை அரசு பயன்படுத்திய பெருவழிதான் தூத்துக்குடி கிரேட் காட்டன் ரோடு. ஸ்ரீவில்லிபுத்ததூர் தொடங்கி சங்கரன்கோவில், கழுமலை, கடம்பூர், விளாத்திகுளம் என்று பல ஊர்களை தொட்டு இந்தப் பாதை தூத்துக்குடி வரை நீண்டது. இந்தப் பெருவழி முக்கியத்துவமும் சிறப்பும் பெற்றிருந்த காலத்தில் அந்தப்பாதையில்  அமைந்திருந்த மேற்படி ஊர்களும் சிறப்புடனும் செழிப்புடனும் விளங்கின.
                        நேஷனல் ஹைவே என்று அழைக்கப்படுகிற தேசிய நெடுஞ்சாலைகள் தோன்ற ஆரம்பித்தப் பின் கிரேட் காட்டன் ரோடு என்கிற பருத்திப் பெருவழியும் தனது முக்கியதுவத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து பைய பைய காணாமலே போய்விட்டது. அதன் தொடர் விளைவாக சிறப்புற்று விளங்கிய மேற்படி ஊர்களும் நலிந்து பொழிவிழந்தன. NH 7 என்கிற காசியையும்  கன்னியாகுமரியையும் இணைக்கிற காசி கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஊர்களும் அந்தப் பாதையின் வளர்ச்சியோடு  வளர்ந்து முக்கியத்துவம் பெற்று  சிறப்புற்றன. கோவில்பட்டி, சாத்துர், விருதுநகர் போன்ற ஊர்கள் அவற்றில் சில. நமது சங்க இலக்கியங்களில் கூட காந்தளூர் சாலை, அதியமான் பெருவழி போன்ற சில பெருவழிகள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.  

        . சமீபத்தில் மதுரைக்குச் சென்றிருந்தேன். அங்கு சங்கிலித் தொடர் உணவகங்கள் நடத்தும் நண்பர் ஒருவரை சந்தித்தேன். பேச்சின் நடுவே அவர் சொன்ன ஒரு செய்தி என்னை சிறிது சிந்திக்க வைத்தது. சமீப காலங்களில் கடைகளில் வியாபாரம் குறைந்து விட்டதாகவும் அதன் விளைவாக தொழிலும் தொய்வடையுமோ என்ற பயம் எற்பட்டிருக்கிறது என்பது தான்  நண்பர் சொன்ன தகவலின் சாரம். தனக்கு மட்டும் இந்த நிலை இல்லை. பெரும்பாலான வியாபார நிறுவனங்களின் நிலையும் இது தான் என்று மேலும் கூறினார். ஊருக்குத் திரும்பும் வழியில் நான் கண்ட சில விஷயங்கள் எனக்கு ஒரு உண்மையை  புலப்படுத்தின. சமீப காலங்களில் தோன்றியிருக்கிற நான்கு வழிப்பாதைகள் நமது பயணத்தை விரைவானதாகவும் பாதுகாப்பானதாகவும் மாற்றி இருப்பது கண்கூடாக காணும் ஒரு யதார்த்தம்தான். இந்தப் பாதைகள் நீண்டப் பயணத்தின் போது நகரங்களுக்குள் செல்லுவதை தவிர்க்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. தேவையில்லாமல் நகரங்களுக்குள் செல்லவேண்டியது  இல்லை. அதனால் நகருக்குள் போக்குவரத்து நெரிசல் குறைந்திருப்பது என்னவோ உண்மைதான். அதே நேரத்தில் மதுரை உணவக நண்பரின் கூற்றுக்கும் இது தான் காரணம் என்பதும் புலப்படுகிறதுஇதை உறுதி செய்வது போல் புறவழிச் சாலைகளிலும்   நான்கு வழி சாலையின் ஆள் அரவமற்றப் பகுதிகளிலும்  புதிது புதிதாக பெரிய பெரிய உணவகங்களும் வியாபார கடைகளும் உருவாகி வருகின்றன. சமீபத்தில் படித்த செய்தி ஒன்று நினைவுக்கு வருகிறது. ரிலையன்ஸ் நிறுவனம் நாடு முழுவது நான்கு வழி சாலைகளில் உள்ள தனது பெட்ரோல் விற்பனை நிலையங்களை ஒட்டி முந்நூறுக்கும் மேற்பட்ட நவீன உணவகங்கள நிறுவ திட்டமிட்டிருப்பதாக வந்த  செய்தி தான் அது.
         காலச் சக்கர சுழற்சியில் பருத்திப் பெருவழிப் பாதை ஊர்களுக்கு ஏற்பட்ட நிலை தேசிய நெடுஞ்சாலை ஊர்களுக்கும் ஏற்பட்டு விடுமோ என்று பயப்பட வேண்டிய தருணம் வந்திருப்பதாகவே தோன்றுகிறது. எந்த ஒரு வினையும் அதற்கு நேர் எதிரான எதிர் விளைவை தன்னுள் வைத்திருக்கும் என்ற மூன்றாவது விதியினை மனதில் கொண்டு பாதிப்புகளை குறைக்கும் வழிகளை தேட வேண்டிய வேளை இது என்று படுகிறது. தவறினால் கிரேட் காட்டன் ரோடும் தேசிய நெடுஞ்சாலைகளும் ஒன்றாகி விடுமோ என்று  கூடத் தோன்றுகிறது.


                                                                                                                              

No comments:

Post a Comment