Thursday, 21 June 2012


 
விடாதுத் துரத்தும் வாங்கு
 வாங்கு சத்தம் என்ற சொல்லை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். இது பள்ளிவாசலில் தொழுகைக்கு மக்களை அழைக்கும் ஒலி. முஸ்லீம்கள் ஒரு நாளில் ஐந்து வேளை தொழுவது என்பது அவர்களின் மத நம்பிக்கை. ஒவ்வொரு வேளையும் தொழுகைக்கும் அழைக்கும் அழைப்பே வாங்கு. தமிழில் வாங்கு என்றால் 'அழை' என்றொரு அர்த்தம் உண்டு. இந்த வாங்கு சத்தம் சிறு வயதிலிருந்தே என்னை துரத்திக் கொண்டு இருக்கிறது. இதை நினைத்துப் பார்த்தால் எனக்கு ஆச்சரியமாகாவும் புதிராகவும் இருக்கிறது. சிற்றூரான எங்கள் கிராமத்திலிருந்து இது என்னைத் தொடர்கிறது. குறைந்த மக்கள் தொகை கொண்ட எங்கள் ஊரில் சில முஸ்லீம் குடும்பங்கள் உண்டு. இவர்களுக்கு ஒரு பள்ளிவாசலும் உண்டு. அந்த பள்ளிவாசலிலிருந்து தொடங்கியது எனது வாங்கு சத்தம் கேட்கும்  தலையெழுத்து. படிப்பெல்லாம் முடித்து வேலைக்குச்
சேர்ந்தேன். எனது அலுவலகத்திற்கு அருகில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்திருந்தது ஒரு பள்ளிவாசல். வாங்கு சத்தத்துக்குத் தப்பமுடியாமல் இங்கேயும் மாட்டிக் கொண்டேன். காலம் கழிந்து கொண்டிருந்தது.
                               Decentralization என்ற பெயரில் திடீரென்று ஒரு நாள் எங்கள் அலுவலகம் நான்கைந்துப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. நான் மேலப்பாளையம் பகுதி அலுவலகத்திற்கு மாற்றப்பட்டேன். மேலப்பாளையம் தமிழ் நாட்டிலேயே  முஸ்லீம்கள் அதிகம் வாழும் பகுதிகளில் ஒன்று. அந்த ஊரில் தெருவுக்கு ஒரு பள்ளிவாசலாவது இருக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட பள்ளிவாசல்கள் உள்ள தெருக்களும். உண்டு. கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட  பள்ளிவாசல்கள் அந்த ஊரில் இருந்தன.  வாங்கு சத்தத்தின் ஒலி எந்த அளவுக்கு  அந்த ஊரில் இருக்குமென்று. இப்போது நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். 

    
                               இப்படியாக வாங்கு சத்தம் என்னைத் துரத்திகொண்டே இருந்தது. நான் வெளி ஊர்களுக்குச் சென்றிருக்கும் வேளைகளில் உறவினர் வீட்டிலோ தங்கும் விடுதியிலோ இரவுத் தங்கியிருக்கும்  போதுகூட அதிகாலையில் இந்த வாங்கு சத்தம் தவறாமல் என் காதில் ஒலித்து என்னை எழுப்பிவிடும் கொடுமையை நான் சொல்லியே ஆக வேண்டும்.  சில ஆண்டுகளுக்குப் பின் எனக்குத் தூத்துக்குடிக்கு மாற்றல் கிடைத்தது. விடாது கருப்பு என்பது போல் இங்கேயும் என்னை விடவில்லை பள்ளிவாசல் வாங்கு சத்தம்.  தூத்துக்குடி பெரிய பள்ளிவாசலுக்கு மிக அருகில் எனது அலுவலகம் இருந்துத் தொலைத்தது. இரண்டு ஆண்டுகளில் மீண்டும் அங்கிருந்து திருநெல்வேலிக்குப் பணி மாற்றம் கிடைத்தது. மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் பணி. அந்த அலுவலகம் அமைந்திருந்த பகுதியோ  அப்போதுதான் உருவாகி வருகிற  ஒரு புறநகர் பகுதியாகும்.  அலுவலகத்திற்கு சென்ற அன்றே எனக்கு ஓர் அதிர்ச்சிக் காத்திருந்தது.  நான் இந்த அலுவலகத்திற்கு மாற்றல் ஆகி வருவதை முன் கூட்டியே தெரிந்து வைத்திருந்தது போல அலுவலகத்திற்கு எதிரிலேயே புதியதாக  ஒரு பள்ளிவாசல் முளைத்திருந்தது. இங்கும் வாங்கின் துரத்தல் விடாது போலவே என்று எண்ணிக் கொண்டேன்.
                              இதற்கிடையில் வாழ்க்கை என்னைக் கடித்து மென்றுத் துப்பிவிட்டது. எல்லாம் வெறுத்துப் போன நான் விருப்ப ஓய்வு வாங்கிக் கொண்டு , மீதி இருக்கும் காலத்தையாவது கொஞ்சம் நிம்மதியாகக் கழிப்போம் என்று எண்ணி நகரத்தின் ஒதுக்குப் புறமாக அமைந்திருந்த அமைதியான் பகுதியான என்.ஜி.ஓ காலனிக்குக் குடிபோனேன். காலனியில் எனது வீட்டிற்கு   எதிரே உள்ள கட்டடம் என்ன என்பதை சொன்னால் நீங்களே கூட அதிர்ந்துப்  போவீர்கள்  முஸ்லீம்கள் அதிகம் குடியிருக்காதப் பகுதியான என்.ஜி.ஓ. காலனியின் ஒரே பள்ளிவாசல் தான் அது. இது வரை ஏதாவது ஒரு வேளை மட்டும் கேட்டுக் கொண்டிருந்த வாங்கு சத்தம் இபோது  ஐந்து வேளையும்  விடாமல் கணீர் கணீர் என்று காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.  ஆச்சு. இருபது வருசத்துக்கு மேலே காலத்தை ஒட்டியாகி விட்டது தினமும் வாங்கு சத்ததைக் கேட்டபடியே.
                                  எல்லோருக்கும் இயல்பாக நடக்கக் கூடிய ஒரு பொதுவான அனுபவமாகக் கூட இது இருக்கலாம். ஆனாலும் எனக்கும் மட்டும் சிந்தனை இப்படியெல்லாம் ஓடுகிறதே ஏன்?. ஏதும் புரியவில்லை.....

No comments:

Post a Comment