Friday, 22 November 2019

மந்து  எனும் சீமந்தம்
புராதான கால இந்தியாவில், ஆண்களும், பெண்களும் தாராளமான பாலியல் சுதந்திரம் அனுபவித்தார்கள். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில், இன்று வாழும் மேலை தேய மக்கள் கூட, இந்தியர்கள் அளவுக்கு பாலியல் சுதந்திரம் அனுபவிக்கவில்லை. மேலைத்தேய நாட்டவர்கள், இருபதாம் நூற்றாண்டில் தான் பாலியல் கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்து கொண்டனர். இந்திய கலாச்சாரத்தில், அது தொன்று தொட்டு பின்பற்றப் பட்டு வந்து இருக்கிறது. 

மொகலாயர்களும், ஆங்கிலேயர்களும் இந்தியர்களின் பாலியல் சுதந்திரத்தை பறித்து, "நாகரீகமடைந்த ஒழுக்கசீலர்களாக" மாற்றினார்கள் என்பது தான் வரலாற்று சமூகவியலாளர்களின் கருத்து. குறிப்பாக பிரிட்டனில் விக்டோரியா மகாராணி விதித்த ஒழுக்கநெறிகளை,நாம் இன்றைக்கும் "தமிழ் கலாச்சாரம்" என்ற பெயரில் பின்பற்றி வருகின்றோம். 

இன்றைக்கும் இந்தியாவில் வாழும், பழங்குடி இனங்கள் மத்தியில் பாலியல் சுதந்திரம் நிலவுகின்றது என்பதாகத்தான் இந்திய வாழ்வு முறை பற்றி ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். இந்தத் தகவலை பார்க்கையில் பலருக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகக் கூட இருக்கக்கூடும். ஆனாலும் இதில் அதிர்ச்சி அடைய ஏதும் இல்லை என்றுதான் தோன்றுகிறது. 

நமது வாழ்க்கை வட்டச் சடங்குகள் ஆழ்ந்து நோக்கினால் அவை நமக்கு புரியவரும். சீமந்தம் என்பது நமது பண்பாட்டில் கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு முக்கியமான சடங்காகும். இது ஒரு பெண் முதல் கர்ப்பமுற்ற ஏழாவது மாதம் கணவன் வீட்டில் வைத்து நடத்தப்படும் ஒரு சடங்காகும்.   சீமந்தத்தின் உண்மையான தாத்பரியம் நம்மில் பலருக்கும் இன்று தெரியாமல் இருக்கிறது.

 பழங்குடி வாழ்வு முறையில் வயதுக்கு வந்த ஆணும் பெண்ணும் திருமணத்திற்கு முன்னமயே நெருங்கி பழகுவார்கள். ஊர் மன்றில் உள்ள மந்தை என்னும் மந்தில் தான் இரவுகளில் இருவரும் தங்குவர். மந்தை என்பது பொது நிகழ்வுகளுக்கு முடிவெடுக்க அனவரும் கூடும் பொது இல். ஆணும் பெண்ணும் இந்த இல்லத்தில் தங்கி பழகி மூன்று மாதத்தில் கருவுற்றால் தான் இருவருக்கும் ஊர் பெரியவர்களால் திருமணம் நடத்தி வைக்கப்படும். அவ்வாறு பெண் கருவுறாவிட்டால் அவர்களுக்குத் திருமணம் நடக்காது. இப்படி அந்தப் பெண் கருவுற்றால் ஏழாவது மாதம் ஊர் கூடி சீமந்தம் என்ற சடங்கை சிறப்பாக செய்து இருவருக்கும் திருமணம் நடத்தி வைப்பர். மந்தையில் அதாவது மந்தில் இருவரும் கூடியதால் நிகழ்ந்த நிகழ்வு சீமந்தம் ஆனது. சீ என்பது சீர், மேன்மை, சிறப்பு என்ற பொருளில் முன்னொட்டானது. 

இதன் எச்சம் தான் நமது பண்பாட்டில் சீமந்தம் அல்லது வளைகாப்பு என்கிற சடங்காக ஒட்டிக்கொண்டு இன்று வரை தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. முதல் குழந்தையை சீமந்தபுத்திரன் அல்லது சீமந்தபுத்திரி என்று சொல்லும் வழக்கம் இன்றும் நம்மிடையே உண்டுதானே.
சீமந்தம் என்று இன்றைய சமூகத்தில் பரவலாக நடத்தப்பட்டு வரும் சடங்கின் ஆதிமூலம் இப்படித்தான் இருந்தது என்றபடியே புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது

Monday, 31 August 2015


தென்னை மர நிழடியில் புதையுண்டு தூங்கும் தொன்மை நகரம்.
-வெள் உவன்.

  உலகின் தொன்மையான மொழிகளில் தமிழ் மொழி முதன்மையானது. அது போலவே தமிழர்களின் நாகரிகமும் பண்பாடும் தொன்மையானதே. இவற்றை நிரூபிக்கும் இலக்கியச் சான்றுகளும் வெளிநாட்டவரின் குறிப்புகளும் நிறையவே உள்ளன. கூடவே தொல்லியல் சான்றுகளும் பல கிடைத்துள்ளன. உலக நாகரிகங்களில் சிறப்பானதும் பழைமையானதுமான சிந்து வெளி நாகரிகத்தை ஹாரப்பாவில் நடத்தப்பட்ட அகழ்வாய்வுகளே வெளிக் கொணர்ந்துள்ளன. அது போலவே தமிழர்களின் நாகரிகத்தின் தொன்மையை நிறுவ தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட அகழ்வாய்வுகள் துணை புரிந்திருக்கின்றன. தமிழ்நாட்டில் நடந்த அகழ்வாய்வுகளில் தலையானது ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வுகளே. அவை தமிழர்களின் நாகரிகத் தொன்மையைப் பலவாறு நிறுவி உள்ளன. அது போலவே கொடுமணல், அழகன்குளம், மாமல்லபுரம், பூம்புகார், பொருந்தல், மாங்குடி, உக்கிரன்கோட்டை என்று தமிழ்நாட்டின்  பல்வேறு இடங்களில் தொடர்ந்து அகழ்வாய்வுகள் நடந்து வந்து கொண்டிருக்கின்றன. இந்த அகழ்வாய்வுகள் மூலம் கிடைத்துள்ள தொல்லியல் சான்றுகள் பல தமிழரின் தொன்மையை நிறுவ உதவி வருகின்றன.
  தமிழ் நாட்டில் நெடுங்காலமாக சிறப்புப் பெறுகிற நகரங்கள் பல உள்ளன. அவற்றில் மதுரை நகர் முக்கிய இடத்தைப் பெறும்.   மதுரை நகரின் தொன்மையை ஏராளமான எழுத்துச் சான்றுகள் பேசுகின்றன. கிரேக்க அறிஞர்களான பிளினி, தாலமி மற்றும் மாவீரன் அலெக்ஸாண்டரின் தூதரான மெகஸ்தனிஸ் போன்ற வெளி நாட்டவரின் எழுத்துக் குறிப்புகளிலும் நமது சங்க இலக்கியங்களின் பாடல் வரிகளிலும் காணப்படுகிற தகவல்கள் இந்நகரம் 2500 ஆண்டுகளுக்கும் மேலான பழமையையும் இந்தியாவின் தொன்மை நகரங்களில் ஒன்று என்பதையும் காட்டித் தருவது உண்மை தான். இருந்தாலும் மதுரை மாநகரைப்   பற்றிய  சொல்லும்படியான தொல்லியல் புதைபொருள் சான்றுகள் இதுவரை எதுவும்  கிடைக்கவில்லை என்றே சொல்லப்பட்டு வருகிறது. இன்று மதுரை நகர் சார்ந்து நமக்குக் கிடைக்கக் கூடிய பெரும்பாலான வரலாற்றுச் சான்றுகள் அந்நகரின் வரலாற்றைக் கி.பி. பத்தாம் நூற்றாண்டுக்கு முந்தைய காலக் கட்டத்திற்கு நகர்த்துவற்குத் தோதான வலுவான ஆதாரங்கள் எதையும் கொண்டிருக்கவில்லை என்பதே அதிகமான வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து.

  இதுவரை மதுரையிலோ அல்லது அதைச் சுற்றிய பகுதியிலோ பெரிய அளவிலான அகழ்வாய்வுகள் எதுவும் நடைபெறவில்லை. அதற்குக் காரணம் அந்நகரத்தின் நீண்ட நெடிய தொடர்ந்த உயிர்துடிப்பும் வளர்ச்சிப் போக்கின் விளைவாய் உண்டாகும் வரலாற்றுச் சான்றுகளின் குலைவும் ஆகும்.

  இந்தப் பெரும் குறையைப் போக்கும் வகையில் மதுரைக்கு அருகில் உள்ள கீழடி என்னும் இடத்தில்  மத்திய தொல்லியல் துறைlயினரால் (Archaeological Survey of India) நடத்தப்பட்ட அகழ்வாய்வில் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு புதையுண்ட நகரத்தின் பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டம் திருபுவனம் வட்டம் சிலைமான் அருகில் கீழடி சந்தை புதூரில்  ஊரிலிருந்து கிழக்கே ஒரு கிலோமீட்டர் தூரத்தில் மணலூர் கண்மாயின் மேற்குக் கரையில் பள்ளிசந்தை திடல் என்று அழைக்கப்படும் இடத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கிற அகழ்வாய்வில் தான் புதையுண்டு போன தொன்மை நகரத்தைப் பற்றிய உண்மைகள் தெரிய வந்து கொண்டிருக்கின்றன..

  அகழ்வாய்வுகள் நடந்து கொண்டிருகிற இந்தப் பகுதி தரையிலிருந்து சுமார் இரண்டரை மீட்டர் உயரத்திற்கு மேடிட்டுக் காணப்படுகிறது. இந் நிலப்பகுதி இன்றைக்குத் தென்னை மரங்கள் அடர்ந்த தோப்புகளாக இருக்கின்றன. தென்னை மரங்கள் விரித்திருக்கிற நிழற்போர்வைக்குக் கீழே அடி ஆழத்தில் உறங்கிக்கொண்டிருக்கிறது இந்தத் தொன்மை நகரம் .  ஆம்,  தென்னந்தோப்புகள் நிறைந்திருக்கிற இந்தப் பகுதி ஏறத் தாழ 90 ஏக்கர் பரப்பளவைக் கொண்டதாக இருக்கிறது. இத்தனை பெரிய பரப்பில் எங்கு அகழ்ந்தாலும் தொல்லியல் எச்சங்கள் ஏராளமாகக் கிடைப்பதாகச் சொல்கிறார் இந்த அகழவாராய்ச்சியைத் தலைமை ஏற்று நடத்தி வரும்  தொல்லியல் அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணன்.
  இந்த இடம் என்ன காரணத்தினால் அகழ்வாய்வுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது என்ற கேள்விக்கு அவரின் பதில் ‘பொதுவாக நதிக்கரை ஓரங்களில் தான் நாகரிகங்கள் செழித்து வளர்ந்திருக்கின்றன. இது உலக அளவில் உணரப்பட்ட ஓர் உண்மை. அந்த அடிப்படையில் தமிழகத்தின் முக்கிய நீராதரங்களில் ஒன்றான வைகை நதி மேற்குத் தொடர்ச்சி மலை வெள்ளிமலை அருகில் உற்பத்தியாகி தேனி மதுரை சிவகங்கை ராமநாதபுரம் மாவட்டங்களின் வழியே பாய்ந்தோடுகிறது. தொல்லியல் பெருமைகள் பலவற்றை உள்ளடக்கிய இந்தப் பள்ளத்தாககில் குறிப்பிடும்படியான அகழ்வாய்வுகள் இதுவரை நடத்தப்படவில்லை. இந்தப் பள்ளதாக்குப் பகுதியில் மத்திய தொல்லியல் துறை (ASI) 2013-14-ல் நடத்திய கள ஆய்வில் கிட்டத்தட்ட 293 தொல்லியல் எச்சங்களைக் கொண்ட இடங்கள் அடையாளம் காணப்பட்டன. அவற்றுள் மதுரை அருகிலுள்ள கீழடி கிராமத்தில் நிலத்தின் மேற்பரப்பிலேயே காணப்பட்ட தொல்லியல் எச்சங்களின் செழுமையின் காரணமாக தொல்லியல் ஆய்விற்கு இந்த இடம் தேர்வு செய்யப்பட்டது என்பதாக இருந்தது.

  மேலும் இந்த அகழ்வாய்வில் இது வரை கண்டெடுக்கப்பட்ட பொருட்கள், அதன் தன்மை இயல்பு மற்றும் புதையுண்டு போன நகரத்தின் சிறப்பு என்று பலவற்றை அவர் விளக்கினார்.  90 ஏக்கர் அளவில் பரந்து கிடக்கிற இந்த தென்னந்தோப்பு பகுதியில் ஏறத்தாழ ஒன்று முதல் இரண்டு ஏக்கர் பரப்பு தான் அகழந்து ஆய்வு செய்யப்பட்டிருக்கின்றது. இந்த சிறிய பரப்பிலேயே ஏராளமான தொல்பொருட்கள் கிடைத்திருக்கின்றனவாம்.

  தமிழி (தமிழ் பிராமி) எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மற்றும் குறியீடுகளைக் கொண்ட மண்பானை ஓட்டுச் சில்லுகளும் கிடைத்திருக்கின்றவாம். தமிழியில் (தமிழ் பிராமி) எழுதபட்ட சில சொற்களை . ஆதன், திசன், இயனன் என்பதாக படித்திருக்கிறார்கள். மேலும் மணிகள், துளையிடப்பட்ட முத்துகள், கிரிஸ்டல், குவார்ட்ஸில் உருவாக்கப்பட்ட காது வளையம் (தண்டட்டி), தந்தத்திலான முத்திரை, சுடுமண்  சதுரங்கக்காய் (chess coin), சங்கு வளையல், அம்மி, குழவி,  என்று ஏராளாமான பொருட்கள் கிடைத்திருக்கின்றன.

  அது போலவே தமிழ் நாட்டில் இதுவரை நடந்த அகழ்வாய்வில் மக்களின் குடியிருப்பு பகுதிகள் அநேகமாக கண்டுபிடிக்கப்படவில்லை. இது வரையில் நடந்திருக்கிற அகழ்வாய்களில் கண்டடைந்தப் பகுதிகள் கோயில்களாகவோ புத்த விகாரைகளாகவோ ஈமக்காடுகளாகவோ வணிகத் தலங்களாவோ தான் இருந்திருக்கின்றன. ஆனால் இந்த முறை மாறுபாடாக பள்ளிசந்தைத் திடல் தென்னந்தோப்பு அகழ்வுக் களம் முற்றிலும் மக்கள் குடியிருப்புப் பகுதியாக அமைந்து விட்டது. அந்த வகையில் தமிழ் நாட்டில் நடந்த முதல் மக்கள் குடியிருப்பு பகுதியின் அகழ்வாய்வு என்று கூட இதைக் குறிப்பிடலாம். இந்தப் பகுதியில் ஒரு சுடுமண் உறை கிணறும் கண்டுபிடிக்கபட்டுள்ளது. குறிப்பாக இந்தப் பகுதியில் புதையுண்டு போன  செங்கல் கட்டுமானங்களும் (brick  structures)  அகழ்ந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தச் செங்கற்கள் ஹாரப்பா செங்கற்களை ஒத்த செங்கற்களாக இருப்பது கூடுதல் சிறப்பு. 

  இந்தப் பகுதியில் தோண்டப்பட்ட ஆய்வு குழிகளில் கருப்பு-சிவப்பு நிறத்தில் சுடுமண்பாண்டங்கள் ஏராளமாகக் கிடைப்பது சற்று வியப்பை உண்டாக்கும் விதத்தில் இருக்கின்றது. கருப்பு-சிவப்பு மட்பாண்டம் என்பது அந்தப் பாண்டம் கருப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் இருப்பதை அந்தப் பாண்டத்தை குறிக்க பயன்படுத்துகிற சொல்லே தெரிவிக்கிறது. தொல்லியலாளர்கள் இதனை black and red ware (BRW) என்றே குறிப்பிடுகின்றனர். 

  இப்படி கருப்பு மற்றும் சிவப்பு நிறங்கள் இரண்டையும் ஒரே பாண்டத்தில் உருவாக்குவது என்பது தமிழருக்கே உரித்தான ஒரு சிறப்பு வாய்ந்த தனித் தன்மையான தொழில் நுட்பத்தால் சாத்தியபட்டிருக்கிறது. ஏனென்றால் இந்தச் சிறப்புத் தன்மை கொண்ட சுட்ட கருப்பு-சிவப்பு மண்பானைகள் தென்னிந்தியாவில் நடத்தப்படுகிற அக்ழாய்வுகளில் மட்டுமே கிடைப்பதாக தொல்லியல் அறிஞர்கள் கருதுகிறார்கள்
.
  மேலும் பிற பகுதிகளில் கிடைக்கிற கருப்பு சிவப்பு பாண்டங்களை இந்த BRW என்கிற கருப்பு-சிவப்பு பாண்டங்களோடு குழப்பிக் கொள்ள கூடாது என்பதும் அவர்களால் எச்சரிக்கைப்படுகிற ஒன்று. குறிப்பாக சிந்து வெளியில் காணப்படுகிற கருப்பு சிவப்பு பாண்டங்களிருந்து வேறுபட்டது தென்னிந்தியாவில் காணப்படும் கருப்பு-சிவப்பு பாண்டங்கள் என்கிறார்கள். பொதுவாகத் தமிழ்நாட்டில் கிடைக்கும் கருப்பு-சிவப்பு பாண்டங்கள் (BRW) உட்பக்கம் கருப்பாகவும் வெளிப்பக்கம் சிவப்பாகவும் இருக்கும். இவ்வாறு ஒரே பாண்டத்தின் உட்பக்கமும் வெளிப்பக்கமும்  வேறு வேறு வண்ணங்களாக இருக்கும்படி உருவாக்க  தலைகீழ் சூடு (inverted firing) என்கிற ஒரு தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். சுட வேண்டிய பாத்திரத்தின் உட்பக்கம் செம்பு (copper) மற்றும் சிலவகை மூலிகைச் சாறுகளை பூசி பாத்திரத்தின் வாயை காற்றுப் புகவோ வெளியேறவோ முடியாதவாறு இறுகப் பொருத்தி அடைத்து உயிர்வளியுடன் இணைவுறச் (oxidization) செய்து இரட்டை சூடுமுறை என்கிற தனித்துவமான முறையில்  சூளையில் தலைகீழாக சுட்டு எடுப்பதே தலைகீழ் சூடு முறையாகும். 

  இந்த முறையில் சுட்டு எடுக்கப்படும் மண் பாத்திரங்கள் மெலியதாகவும் அதே நேரத்தில் உலோகத்தைப் போன்று வலுவுடையதாகவும் இருந்திருக்கின்றன. தமிழர்களுக்கே ஆனதும் இன்று அவர்கள் தொலைத்துப் போக்கியதுமான இந்தச் சிறப்புத் தொழில் நுட்பத்தை மீட்டெடுக்க வழி தெரியாத நிலை தான் தற்போது இருந்து வருவதாகச் சொல்லப்படுகிறது. அதாவது நம் முன்னோர்களின் அரிய தொழில் நுட்பத்தை நாம் தொலைத்துப் போக்கி விட்டோம் என்பது தான் கசக்கும் உண்மை.

  கபாடபுரத்தைக் கடல் கொண்ட பின் வடக்கு நோக்கி நகர்ந்து பொருநை நதிக்கரை மணலூரைத் தலைநகராகக் கொண்டு சில காலம் ஆட்சி செய்த பாண்டியர்கள் பின் மேலும் வடக்காக நகர்ந்து வைகைப் பள்ளத்தாக்கில் மதுரை என்ற நகரை உருவாக்கி அதனையே தலைநகராக்கினர் என்பதான உறுதிபடுத்தப்படாத ஒரு சேதி உண்டு. கூடவே அந்த மதுரை இன்றைய மதுரை அல்ல என்றும் சொல்லும் அந்தச் சேதி. தற்போதைய கீழடி ஊரிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் மணலூர் கண்மாயின் மேல்கரையில் தான் அகழாய்வு நடக்கும் பள்ளிசந்தை திடலின் தென்னந்தோப்பு இருக்கிறது என்பது உள்ளூர் மக்கள் தரும் தகவல். இங்கே தென்னை மர நிழலடியில் புதையுண்டு தூங்குகிற நகரம் தான் மணலூரிலிருந்து வடக்காக நகர்ந்த பாண்டியர்கள் உருவாக்கிய அந்த முதல் மதுரையோ? 
  

   தென்னந்தோப்பில் தொடர்ந்து நடந்து வருகிற அகழாய்வு சான்றுகள் வரும் நாள்களில் முதல் மதுரையை நமக்குக் காட்டித் தரட்டுமே.


 உறைக்கிணறு ஆய்வுக்காக அகழப்பட்டிருக்கும் குழி


மண்ணில் புதையுண்டிருக்கும் கருப்பு-சிவப்பு கிண்ணம்

                                                                                                                                                                                                                   

Tuesday, 2 June 2015


 அம்ருதா மே 2015 இதழில் வெளியான கட்டுரை

எட்டிப் பார்க்கும் பிசாசு
                                             
 -வெள் உவன்

தங்க நாற்கர சாலையில் நான் பயணித்த வண்டி விரைந்து 
கொண்டிருக்கிறது. முழுவதுமாக ஏற்றப்பட்ட கண்ணாடிகளுக்கு வெளியே பக்கவாட்டில் சாலையின் எல்லயை தாண்டி விரிகிறது நிலப்பரப்பு. கண்ணுக்கு எட்டிய வரை கட்டாந்தரையாய் விரிகிற பூமியில் ஒரு மரம் கூட இல்லை. ஆனால் குட்டி குட்டியாய் vவெள்ளை அடிக்கப்பட்டு நடப்பட்டிருக்கும் நடுகற்களை நினைவுக்குக் கொண்டுவரும் எல்லை கற்கள், நிலம் மனைப்பிரிவுகளாய் பிரிக்கப்பட்டிருப்பதை காட்டிக் கொண்டிருந்தன. சாலையின் இரு பக்கமும் இது தான் கதை. இந்த நகர், அந்த நகர் என்ற பெயர் பலகைகள் மட்டும் விர் விரென்று கடந்து கொண்டிருந்தன. ஒன்று மட்டும் எனக்குப் புரியவில்லை. இந்த மனைபிரிவுகளுக்கு அருகில்...அருகில் என்ன கண்ணுக்கு எட்டிய தூரம் வரையிலும் எந்த குடியிருப்போ ஊரோ தெரியவில்லையே. அத்துவான காடாய் இருக்கிறதே. எப்படி இங்கே வீடு கட்டி குடியிருப்பார்கள்? என்ற கேள்வி என்னுள் எழுந்தது. கேள்வியை ஒட்டி சில சிந்தனைகளும் கூடவே வந்தன.அந்த காலத்தில் ஓர் ஊரின் அமைப்பு எப்படி இருந்தது தெரியுமா? 
ஓர் ஊர் அமைப்பை பல காரணிகள் நிர்ணயித்தன. அதிலுள்ள மண்ணின் அமைப்பு, முக்கிய பாத்திரம் வகித்தது. மண்ணின் அமைப்புக்கேற்ப நிலத்தை நம் முன்னோர்கள் மூன்று வகைகளாகப் பிரித்திருந்தார்கள். உயர்தரம், நடுத்தரம், கடைத்தரம் என்பனவே அவை. இதை கண்டறிய ஓர் எளிய முறையை கையாண்டனர். நிலத்தில் ஒரு குழிபறித்து மண்ணை வெளியே எடுத்து மீண்டும் அதே மண்ணால் அந்தக் குழியை நிரப்ப வேண்டும். குழி நிறைந்து மண் மீதமிருந்தால் அந்த நிலம் உயர்தரம் என்பதாகவும், மண் மீதமில்லாமல் குழி நிரப்பப்பட்டால் அது நடுத்தரம் என்பதாகவும், தோண்டி வெளியே எடுத்த மண் முழுவதையும் குழிக்குள் கொட்டிய பின்னும் குழி நிரம்பவில்லை என்றால் அது கடைத்தரம் என்பதாகவும் கொள்ளபட்டது. மண்ணின் நிறம், மணம், அது எழுப்பும் ஒலி, அதன் சுவை போன்றவையும் ஊர் அமைப்பில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன.பொதுவாக அந்தக் காலத்தில் சற்று மேடிட்ட இடத்தில் தான் ஊர்கள் உருவாக்கப்பட்டன. ஊரெல்லைக்கு பின் நிலம் சிறிது தாழ்ந்திருக்கும். அதே நேரத்தில் நில அமைப்பின் சாய்வும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. வடக்கை அல்லது வடகிழக்கை நோக்கிச் செல்லும் சாய்வைக் கொண்ட மண்ணின் மீதே குடியிருப்புகள் அமைக்கப்பட்டன. நமது எல்லா ஊர்களிலும் ஒரு பொதுத் தன்மை உண்டு. நகரமாக இருந்தாலும் சிற்றூராக இருந்தாலும் அதன் எல்லையில் ஆறு, ஓடை போன்ற ஏதாவது ஒன்று அந்த ஊரின் சாலையை ஊடறுத்துச் செல்லுவதை நாம் காண முடியும்.வை.கணபதி ஸ்தபதி இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டுக் கையேட்டில் ஊரமைப்புக்கலை' பற்றியொரு விரிவான கட்டுரை எழுதியுள்ளார். அதில் மயமதத்தினொரு பிரிவான சிற்பநூல் சொல்கிற நகரமைப்புப் பற்றியும் விவரிக்கிறார். மயமத அடிப்படையிலமைந்த ஊரமைப்பானது அதன் சுற்றளவின் அடிப்படையில் ஐந்து வகைகளாகப் பிரிக்கப்பட்டிருந்ததையும் அறிய முடிகிறது. 20,000தண்டங்களைச் சுற்றளவாகக் கொண்ட கிராமம் (ஒரு தண்டமென்பது நான்கு தச்சுமுழங்களை அதாவது பதினொரு அடிகளை குறித்தது)., 40,000 தண்டங்களை சுற்றளவாகக் கொண்ட கிராமம், 60,000 தண்டங்களை சுற்றளவாகக் கொண்ட கிராமம், 80,000 தண்டங்களைச் சுற்றளவாகக் கொண்ட கிராமம், 1,00,000 தண்டங்களை சுற்றளவாகக் கொண்ட கிராமம் என கிராமங்கள் பல்வேறு அளவுகளில் அமைக்கப்பட்டன. இவ்விதமான கிராமங்களின் இருபதில் ஒரு பாகத்தில் மட்டுமே வீடுகள் கட்ட ஒதுக்கப்பட்டன. எஞ்சியவற்றில் விளைநிலங்கள், நீர்நிலைகள், மேய்ச்சல் நிலங்கள், விருட்சங்கள், தோப்புகள் போன்றவற்றுக்கென ஒதுக்கப்பட்டன.இவ்விதமாக நகர அமைப்பானது கிராமம், கேடம், கர்வடம், துர்க்கம், நகரம் ,கோநகர் எனபதாக பரிணாம வளர்ச்சியுற்று வந்ததை மேற்படிக் கட்டடக்கலை/நகரமைப்பு நூல்கள் குறிக்கின்றன. மேலும் தெருக்கள் எப்படி எந்த அளவுகளில் இருக்க வேண்டும் என்பது பற்றிய குறிப்புகளும் கிடைக்கின்றன.     

1. நகரைச் சுற்றி மதில் அமைக்கப்படும்.

2. வடக்கு தெற்காகவும், கிழக்கு மேற்காகவும் செல்லும் வீதிகளால் பிரிக்கப்பட்ட பல சிறு சிறு சதுரங்களை உள்ளடககிய பெரிய சதுரமாக நகர் காணப்படும்.

3. நகரமானது வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்காகச் செல்லும் அகன்ற இரு இராஜ வீதிகளால் பிரிக்கப்பட்டிருக்கும்.

4. இவ்விதம் அமைக்கப்படும் இராஜபாட்டையானது நகரின் தன்மைக்கேற்ப அளவில் வேறுபடும். உதாரணமாக மாநகர்களைப் பொறுத்தவரையில் இந்த இராஜபாட்டை 40 அடி அகலமுடையதாகவும், சாதாரண நகரங்களைப் பொறுத்தவரையில் 30 அடி அகலமுடையதாகவும், வெறும் சந்தையை மட்டுமே கொண்டதாகவிருக்கும் நகரமாயின் 25 அடி அளவுடையதாகவுமிருக்கும்.

5. நகரினைச் சுற்றிவர மதிலின் உட்புறமாகவும் பாதையொன்று அமைக்கப்படும். இராஜபாட்டையின் அகலத்தையொத்ததாக இப்பாதையிருக்கும்.அந்தக் காலத்தில் ஒரு நகரம் அல்லது கிராமம் என்பதில் ஒரு அரண்மனை, கோட்டை, கோவில் ஆகியவற்றைச் சுற்றியே சுகாதாரமான குடியிருப்புகள் அமைத்திருந்தன. கடம்பவனம், புன்னைவனம், சம்பகவனம், பாரிஜாதவனம், அரசவனம், இலுப்பைவனம், மகிழவனம், வேங்கைவனம், அசோகவனம், வன்னிவனம், வேப்பவனம், தில்லைவனம், வில்வவனம், தாழைவனம், மருதவனம் என்ற பெயர்களில் ஊரிலும் ஊரை சுற்றிலும் ஏராளமான நந்தவனங்கள் இருந்தன.

இந்த நேரத்தில் எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தையும் பகிர்ந்துகொள்ள தோன்றுகிறது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தை ஒட்டி அமைந்திருக்கிற கேம்ஸ் வில்லேஜில் இரண்டு நாட்கள் தங்கியிருக்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டது. எனது உறவினர் வீடு அங்கு இருக்கிறது. அங்கு தான் தங்கியிருந்தேன். உண்மையில் சென்னை நகருக்குள் இப்படி குடியிருப்பு பகுதி என்பது சற்று வித்தியாசமான ஒன்று நினைத்தேன். ஏனென்றால் சோலையாக அந்த குடியிருப்பு முழுவது பச்சை பசேல் என்று மரங்கள். ஓங்கி வளர்ந்திருக்கும் மரங்களுக்கு ஊடே தான் ஒளிந்து கொண்டிருந்தன அங்கு இருந்த அடுக்குமாடி கட்டடங்கள்.சென்னையிலா இப்படி? ஆச்சரியம் தான். மனதிற்கு இதமாகவும் இன்பமாகவும் இருந்தது. இரவு உறவினரின் வீட்டில் தான் கழிந்தது. இப்படி ஒரு நிசப்தமான இடம் சென்னை நகருக்குள் என்பது நம்ப முடியாமல் இருந்தது. விடிந்தது. சித்தப்பா காப்பி குடியுங்கள் என்ற மகளின் உபசரிப்பில் எழுந்தேன். காபியை குடித்து முடித்தேன். சுவையான காபியின் ருசி இன்னும் நாக்கில் ஒட்டிக் கொண்டிருந்தது. ஒரு நடை போனால் என்ன என்று தோன்றவே சட்டையை எடுத்து போட்டபடியே வெளியே கொஞ்சம் வாக்கிங் போய்ட்டு வரேன் அம்மா என்று சொல்லிவிட்டு வீட்டை விட்டு கிளம்பினேன். வெளியே சாலைக்கு வந்தேன். இதை சாலை என்பதா? தெரு என்பதா? கொஞ்சம் குழப்பமாக தான் இருந்தது. அந்த விடிகாலைக் காற்று முகத்தை லேசாய் தடவிச் சென்ற தன்மை  இதமாக தான் இருந்தது. ஆனால் ஏதோ குறைவதாகத் தோன்றிக் கொண்டே இருந்தது. என்னவாக இருக்கும்? என்னவாக இருக்கும்? மனதிற்குள் குடைச்சல்.எதிரில் சிலர் கடந்து போய் கொண்டிருந்தனர். நடைப்பயிற்சிக்கு தான் சென்று கொண்டிருக்கிறார்கள் போலும். ஒர் இளம் தம்பதியினர் என்னை கடந்து சென்றனர். அந்த பெண் சேலை உடுத்தியிருந்தாலும் காலில் உயர் ரக கேன்வாஸ் சூ அணிந்திருந்தாள். அது ஏன் வாக்கிங் செல்பவர்களில் பெரும்பாலோர் சூ அணிந்து செல்கிறார்கள் என்ற கேள்வி  நெடுநாளாய் இருந்து கொண்டிருக்கும் ஒன்று. அந்த சூழ்நிலைக்கு ஏதோ ஒன்று குறைகிறதே என்ற கேள்வியை  இன்னும் சுமந்தபடி நடந்து கொண்டு இருந்தேன். எதிர்வரிசையில் பருத்தத் தூருடன் அடர்ந்து படர்ந்து ஓங்கி வளர்ந்திருந்தது அந்த மரம். பிரமிப்புடன் அதை அண்ணாந்து பார்த்தேன். என்ன உயரம். என்ன அடர்த்தி. பிரமிப்பு இன்னும் அதிகமானது. அது என்ன மரமாக இருக்கும். யோசித்துப் பார்த்தேன். இது போன்ற மரத்தை இதுவரை பார்த்த மாதிரி இல்லையே. யோசித்துப் பார்த்தேன். இல்லை தான். இல்லை தான்.அப்போது தான் புரிந்தது இது நம்ம ஊர் மரமே இல்லை வெளிநாட்டு மரம் என்று. சுற்றிலும் பார்த்தேன். எல்லாம் வெளிநாட்டு மரம். ஒரு வேப்பமரம் ஒரு புளியமரம் ஒரு மாமரம் ஒரு கொய்யாமரம் என்று ஒன்று கூட அங்கு இல்லை. மருந்துக்கு கூட நம்ம ஊர் மரம் இல்லை. நம்ம ஊரில் ஒரு வேப்பமரம் இருந்தாலே அதில் எத்தனை வகை பறவைகள் வந்து உட்காரும். அணில்கள் எத்தனை மரத்தில் ஏறி ஓடும். இது மாதிரி விடிகாலை நேரங்களில் நம்ம ஊர் மரங்களில் பறவைகளின் கூச்சலும் அணில்களின் கீச்சிடலுமாய் ஒரு இசைக் கச்சேரியே நடந்து கொண்டிருக்குமே.இப்படி எண்ணிக் கொண்டிருக்கும் போது தான் சட்டென்று எனக்கு ஒன்று புரிந்தது. இந்த சூழலுக்கு ஏதோ ஒன்று குறையுதே... குறையுதே என்று குடைந்து கொண்டிருந்த கேள்விக்கு பதிலும் கிடைத்தது. காடாய் கவிந்து கிடக்கிற இந்த இடத்தில் ஒரு பறவையை கூட பார்க்க முடியவில்லையே. எந்தப் பறவையின் சத்தம் கூட இல்லாத நிசப்தமே இந்த சூழலின் குறை என்ற உண்மையும் புரிந்தது. காடாய் இங்கு மரங்கள் மண்டி கிடந்தாலும் ஏன் ஒரு பறவையை கூட காணமுடியவில்லை என்ற கேள்விக்கும் பதில் கிடைத்தது. இங்கு இருக்கும் இத்தனை மரங்களில்  பெருபாலானவை பூக்கவே பூக்காது. அப்படியே பூத்தாலும் காய்க்காது. அப்படியே காய்த்தாலும் பழுக்காது. பின் எப்படி இந்தக் காட்டில் பறவையை பார்க்க முடியும்? வெறும் நிழலுக்கு மட்டும் நம்ம ஊர்களில் மரம் வைப்பது இல்லைங்க. மரம்ன பழம் பழுக்கணும். பறவைங்க நிறைய வரணும். அணில்கள் மரத்தின் ஏறி விளையாடணும். பழம் திங்கணும். பசியாறணும். கூடு கட்டணும். குஞ்சு பொறிக்கணும். இதை எல்லாம் மனதில் வைத்து தான் நம்ம ஊர்களில் மரங்களை வைத்தார்கள். வளர்த்தார்கள். இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் வெளிநாட்டு மரங்களை நட்டு கேம்ஸ் வில்லேஜை காட்டுக்குள் மறைத்து வைத்து ஒரு சிடுகுஞ்சு கூட இல்லாத வனாந்தரமாக்கி என்ன பிரயோஜனம்?      இன்றைய அரசு அலுவலர்கள் போலல்லாமல் மரங்கள் வளர்ப்பதில் நமது முன்னோர்கள் எப்படி திட்டமிட்டும் சில முறைகளை கையாண்டு பல்வேறு வனங்களையும் சிறு காடுகளையும் உருவாக்கி வைத்திருந்தனர் என்பது மேலே கண்ட குறிப்புகளின் மூலம் நம்மால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது. அந்தக் காலத்திலேயே நமது முன்னோர்கள்    சுற்றுச்சூழல் பற்றிய அறிவு அக்கறை விழிப்புணர்வு போன்றவற்றில் எவ்வளவு சிறந்து விளங்கினார் என்பதற்கு சாட்சிகளாய் இருந்து வந்த இந்த வனங்கள் என்கிற சிறு காடுகள் அழிவதற்கு வெள்ளையர் ஆட்சி முக்கிய காரணமாகும்.வீரப்பாண்டிய கட்டபொம்மன் புதுக்கோட்டை பகுதியில் காடுகளில் பதுங்கி இருக்கும் போது எவ்வளவு தேடியும் அன்றைய் வெள்ளை அரசால் அவரை பிடிக்க முடியவில்லை.. இந்தக் காடுகள் தான் கட்டபொம்மனை பிடிக்க இடையூறாக இருக்கின்றன என்று கருதிய வெள்ளையர் அந்தக் காடுகளை அழிக்க ஒரு தந்திரத்தை கையாண்டனர். காடுகளில் உள்ள மரங்களை வெட்டி அழித்தால் வெட்டுபவர்களுக்கு சன்மானம் கொடுக்கப்படும் என்று அறிவித்தனர். மக்களும் இந்த அறிவிப்பில் மறைந்திருந்தத் தந்திரத்தைப் புரிந்து கொள்ளாமல் பணத்திற்கு ஆசைப்பட்டு மரங்களை வெட்டி சாய்த்தனர். இப்படி பல்வேறு காரணங்களினால் நமது ஊர்களை சுற்றி அமைந்திருந்த காடுகள் கொஞ்சம் கொஞ்சமாக காலப்போக்கில் அழிக்கப்பட்டன.இதன் விளைவாய் சுற்றுச்சூழலில் இருந்த சமன் நிலை  குழைந்தது.. இந்தக்  குலைவு மழைக் குறைவு மற்றும் மழை பொய்ப்பு  போன்ற பருவ நிலை மாற்றங்களுக்கு காரணமானது. அன்றைக்கு தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்ள ஊர் வனங்களை அழித்தனர் வெள்ளையர்கள். இன்றோ இயற்கை வனங்களையும் வளங்களையும் சுயநலனுக்காகக் கொள்ளையடிக்கின்றனர் அரசியல்வதிகள் என்ற போர்வையில்  மறைந்திருக்கும் சிலர். இதை நம் கொடும்விதி என்றே எண்ண வேண்டியிருக்கிறது. இப்படி நமது மரபில் இருந்த எத்தனையோ அறிவியல் சார்ந்த நடைமுறைகள் எல்லாம் உதாசீனப்படுத்தப்பட்டு கட்டாந்தரையாய்  கண்ட இடத்தில் எல்லாம் அது களிபூமி கரடு பூமி என்ற எந்தவிதமான வேறுபாடு இல்லாமல் கற்களை நட்டு மனை பிரிவுகளாக ஆக்கிக் கொண்டிருக்கிறோம். இப்படி வரைமுறையற்று உருவாக்கப்படுகிற குடியிருப்புகளில் வாழ்ந்தால் என்ன என்ன கேடுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்குமோ தெரியவில்லை?

எட்டு பேய் தலை விரிச்சி ஆடுற வீட்டுக்குள்ளே எட்டிப் பாத்ததாம் பத்து பிசாசு என்பது போல் கட்டாந்தரையிலும் கல்லை நட்டு வீட்டுமனையாக்கி கூத்தடிக்கும் இங்கே மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்திருக்கிற  நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டம் பகாசுர கார்பரேட்காரர்களின் என்னென்ன கொள்ளைக்கு வழிவகுக்கப் போகிறதோ?