Thursday, 20 December 2012

 
                              பாம்டம்
பாம்படம் என்பது ஒரு காதணி. காதில் உருவாக்கும் பெரிய துளையில் இதை மாட்டி இருப்பர். சிறுவயதிலேயே காது குத்தி அந்த சிறிய துளையில் பனை ஓலையை சுருட்டிவைத்து, குனுக்கு எனும் கனமான ஈயகுண்டை தொங்கவிட்டு, என்று பல முறைகளை கையாண்டு சிறிய துளையை கொஞ்சம் கொஞ்சமாக பெரிது படுத்துவர். இந்த முறைக்கு காது வடித்தல் என்று பெயர். இது திராவிடர் பண்பாட்டை சார்ந்ததாகும். கௌதம புத்தர் கூட காது வடித்திருப்பார்.. அவர் சிலைகளில் இதை காணலாம். இது திராவிடர்களுக்கிடையேயான பொது வழக்கமாகும். 

ர்வதேச விருதுகள், தேசிய விருதுகள் என்று பல விருதுகளை பெற்ற பிரபல ஓவியரும் சென்னை கவின் கல்லூரி(madras fine arts college) முன்னாள் முதல்வரும் எனது இனிய நண்பருமான ஓவியர் சந்ரு அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த ஒரு சந்தர்ப்பத்தில் பாம்படம் பற்றியும் அதன் வடிவ சிறப்பைப் பற்றியும் அவர் சொன்ன சில கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். பாம்படத்தின் வடிவமைப்பு (design) வேறு எந்த நாகரீகத்திலும் பார்க்க முடியாத ஒன்று. பந்து, கனசதுரம், முக்கோணம், வளையம் மற்றும் எதிர் எதிர் பக்கங்களும், கோணங்களும் ஒன்றாக இருக்கும் இணைவகவடிவங்களும் கொண்ட வடிவயியல் உருவங்களால் (geometrical figures) செய்யப்பட்டிருக்கிறது. 
இது போன்று வடிவமைக்கப்பட்ட ஓர் அணிகலன் உலகில் வேறு எங்கும் காணப்படவில்லை என்று ஓவியர் சந்ரு சொன்னார். நமது செவிமடலின் கீழ் பகுதியில் உள்ள சில புள்ளிகள் அழுத்தப்பட்டால் மூளையின் நினைவாற்றல் செல்கள் தூண்டப்படும் அதனால் நினைவாறல் சக்தி அதிகரிக்கும் என்பது வர்மகலை பாடம். இந்த கருத்து இன்றைய அறிவியலாலும் நிருபணமாகியிருக்கிறது. அந்தகாலத்தில் பள்ளிகூடத்தில் சரியாக படம் படிக்காத மாணவனை தோப்புகரணம் போடும்படி ஆசிரியர் சொல்வாராம். இந்தசெய்தியும் எனது பாட்டியின், அம்மாவின் நினைவாற்றல் திறன்களும் என் நினைவிற்கு வந்து போகிறது. இப்படி உடல் ரீதியான மருத்துவ தன்மையும் கலை அம்சத்தில் ஒரு தனித்துவமும் (uniqe) ஒருங்கே அமையும் விதத்தில் பாம்படத்தை வடிவமைத்த நமது முன்னோர்களின் அறிவு செழுமையை என்னவென்று சொல்வது. 
ஒரு பறவை அல்லது பாம்பு போல தோற்றம் அளிக்கும்.அரிதுளுவன், பன்னீர் செம்பு, தாமரை கால் ,சுண்ணாம்பு கலயம் என்று பாம்படத்தில் பல வகைகள் உண்டு. வெகு சில பாட்டிமார்கள் மட்டுமே பாம்படம் அணிந்து இன்று நம்மோடு இருகிறார்கள் ..இன்னும் சிலவருடங்கள் கழித்து போனால் இதை நாம் புகைபடத்தில் மட்டுமே நாம் காணமுடியும் .Sunday, 7 October 2012  சீனிமிட்டாய்
                 என்ற
            வீதிமிட்டாய்        
                                     என்ற
                     சுத்துமிட்டாய்.       


          திருநெல்வேலி மாவட்டத்திற்கு உரிய சிறப்பு இனிப்பு பலகாரம் இது. வீதி மிட்டாய், தேங்காய் எண்ணெய் மிட்டாய், சுத்து மிட்டாய், சீனிமிட்டாய்என்றெல்லாம் இதைக்குறிப்பிடுவர். ஆரம்ப கட்டத்தில் திருவிழாக் காலங்களில் வீதிகளில் முளைக்கும் திடீர் மிட்டாய் கடைகளில் விற்பனை செய்யப்பட்டதால் இது வீதிமிட்டாசி ஆனது.
கருப்பட்டியில் செய்த இந்த மிட்டாய் துண்டை இரண்டாக உடைத்தால் நடுவில் குழல் போன்ற பகுதியிலிருந்து கருப்பட்டிப்பாகு தேன் போல ஒழுகும். அதனால் தேன் ஒழுகும் மிட்டாய் என்று குறிப்பிடப்பட்ட இது காலப்போக்கில் தேங்காய் எண்ணெய்மிட்டாசி என்று திரிந்து போனது. சுட்டு தட்டில் வட்டமாய்  சுற்றி அடுக்கப்படுவதால் இது சுத்துமிட்டாசி ஆனது. சீனிபாகுவில் தோய்ப்பதால் சீனிமிட்டாசி. இந்த பழமையான இனிப்பு, முன்னர் கருப்பட்டியில் தயார் செய்யப்பட்டது 
                      ஒரு காலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் பனைமரங்கள் அதிகம் இருந்தன. அதனால் இந்த பகுதியில் பனைபடு பொருளான கருப்பட்டியின் பயன்பாடு அதிகம். காலப்போக்கில் பனைமரங்கள் குறைந்து போயின. கூடவே கருப்பட்டி உற்பத்தியும்தான். உற்பத்தியில்லாமல் அதன் விலை உயர்ந்தது. எனவே இப்போது கருப்பட்டிக்குப் பதில் சர்க்கரை. அதாவது சீனிதான் பயன்படுத்தப்படுகிறது.. மற்றபடி செய் முறை, சேர்மானங்கள் மாறவில்லை. பண்டிகை காலங்களில் வீடுகளில் செய்து சுவைக்கப்பட்ட இந்த இனிப்பு காலப்போக்கில் கடைகளில் விற்பனைக்கு வந்தது.
செய்யும் முறை:
தோல் அகற்றிய உளுந்தை  அதாவது குத்துப்பருப்பை திருகையில் வைத்து திரித்து மாவாக்க வேண்டும். மாவில் புளிப்புத் தன்மை ஏற்ற முதல் நாள் இரவு, 100 கிராம் உளுந்து மாவை கெட்டியாகப் பிசைந்து வைக்க வேண்டும். மறுநாள் புளிக்க வைத்த மாவோடு கூடுதலாக 100கிராம் உளுந்து மாவு சேர்த்து, அதோடு 1 கிலோ பச்சரிசி மாவைக் கொட்டி, தோசை மாவு பதத்தைவிட சற்று மேலான குழைவில் அடித்துப் பிசைய வேண்டும். இந்தக் கலவை 4 மணி நேரம் புளிக்க வேண்டும்.   

அடியில் காலணா அளவுக்கு சிறிய ஓட்டை போட்ட பித்தளை அல்லது வெண்கலச் சொம்பு தான் இந்த மிட்டாசியை வார்க்கும் வார்ப்புக்கருவி      சுத்து மிட்டாய்            வார்க்க, 2 அடுப்பும், 4 ஆட்களும் தேவை. ஒரு  அடுப்பில் கடலை எண்ணெய் . இன்னொரு அடுப்பில் பதமான சர்க்கரைப் பாகு.   எண்ணெய் சூடேறிய பின்  வார்ப்பு சொம்பில் மாவை ஊற்றி எண்ணெய்  சட்டியில் பூ வடிவத்தில் சுற்ற வேண்டும்.. சட்டியின் விளிம்பை ஒட்டியே சுற்றினால் தான் வட்டமாக அடுக்கி அழகு செய்ய முடியும் . மேலும்,சுற்று பொடிச்சுற்றாக இருக்க வேண்டும்..  .  
                    வெந்து  வெண்மை மாறா நிலையில் அள்ளி, அதே சூட்டோடு அருகில் கொதிக்கும் சர்க்கரைப் பாகில் போட வேண்டும். இரண்டு நிமிட பாகுக் குளியலுக்கு பின்  அதே வேகத்தில் அள்ளி, தட்டில் வட்டவடிவமாக அடுக்கி, மேல் புறத்தில் பெயிண்ட் அடிக்கிற பிரஷால் பாகைத்தொட்டு பூசவேண்டும்.  இது தான் அடுக்கும் தொழில்நுட்பம். இப்போது தயாராகிவிட்டது தேன் ஒழுகும் வீதி மிட்டாசி. சுவைத்துப் பார்த்தவர்களால் அதன் சுவையை ஒரு போதும் மறக்கவே முடியாது .


Friday, 28 September 2012             கர்ப்போட்டம்
                         என்ற
       கருவோட்டம்
ஏங்க நாளைக்கு கூழ்வத்தலுக்கு அரைக்க அரிசி நனையபோடட்டுமா?மனைவியின் இந்தக் கேள்வி முதலில் எனக்குப் புரியவில்லை.  
“அதை ஏன் எங்கிட்ட கேக்கிற, உன் வசதிபடி செய்யவேண்டியதுதானே   இதுநான்.
என்னை எந்த சீரியலும் பார்க்கவிடாமல் நாள் முழுக்கு நீங்கதானே நியூஸ் சேனலைப் பார்த்துகிட்டே இருக்கீங்க. உங்ககிட்ட தானே கேட்க முடியும்.
நான் நியூஸ் சேனல் பார்க்கிரதுக்கும் நீ கூழ்வத்தல் போடறதுக்கும் என்ன சம்பந்தம்னு எனக்குப் புரியலையே?
உங்களுக்கு என்னக்குதான் எது புரிஞ்சது? இது புரிய....
கொஞ்சம் புரியும்படி தான் சொல்லித் தொலையேன்....
இல்லங்க டி.வி. நியூஸ்ல வானிலை அறிக்கைப் படிப்பாங்கலே, அதுல நாளைக்கு மழை வரும்னு ஏதாவது சொன்னாங்களா? அதை தெரிஞ்சுகிட்டு நனைய போடலாமேன்னு தான் கேட்டேன்.
எனக்கு உடனே சிரிப்புதான் வந்தது.
“இருந்தாலும் உனக்கு டி.வி. வானிலை அறிவிப்பு மேலே ரெம்ப தான் நம்பிக்கை
சின்னத்திரை செய்திகளில் வானிலை மைய இயக்குநர் ரமணன் மழை நிலவரத்தை எப்போதும் போல் இறுகிய முகத்துடன் தந்து கொண்டிருக்கும் காட்சிகள் என் மனத் திரையில் ஓடியது.
அறிவியலும் தொழில் நுட்பமும் வளர்ந்திருக்கிற தற்காலத்தில் வானிலை நிலவரத்தை ஓரளவு துல்லியமாகக் கணித்துக் கூறமுடியும். வானிலை மையம் ஏற்படுத்தப்பட்டு 130 ஆண்டுகள் ஆகின்றன ஆனால் ஒரே ஒருமுறைகூட அந்த மையம் வறட்சியை முன் கூட்டி கணித்துக் கூறியது இல்லை என்ற குறையும் உண்டு. சரி அது ஒருபுறம் இருக்கட்டும்.
வானிலை ஆய்வு மையங்களெல்லாம் வருவதற்கு முன்னால் நம் முன்னோர் மழைய கணிக்க என்ன செய்தார்கள்? அதற்கென ஒருமுறை அந்தக் காலத்தில் இருந்திருக்கிறது. அந்த முறையில் கணித்துக் கூறும் தொழில் நுட்பவாதிகளை வள்ளுவர் என்று சொல்லுவது வழக்கம். வள்ளுவர்கள் மழையை கணிக்கும் இந்த முறைக்கு கர்போட்டம் அல்லது கருவோட்டமென்று பெயர் சொல்கிறார்கள். அதாவது மார்கழி மாதத்தில் கருக்கொள்ளும் மேகத்தின் தென்சார்பான ஓட்டம் என்பதாகக் கொள்ளலாம். நவீன அறிவியலாளர்களும் நில நடுக்கோட்டிற்கு வடக்கே 5 டிகிரியிலும் தெற்கே 5 டிகிரியிலும் ஏற்படுகிற சூழலே பருவக்காற்று தோன்றுவதற்கு காரணம் என்று கண்டறிந்துள்ளனர்.
திருநெல்வேலி, கன்னியாகுமரி பகுதிகளில் கர்ப்போட்ட முறையில் எதிர் வரும் ஆண்டில் ஒவ்வொரு மாதமும் மழையின் தன்மையை முன் கணிக்கும் வழக்கம் இன்று வரை நடைமுறையில் இருந்து வருகிறது. கர்ப்போட்ட முறையில் எதிர் வரும் 12 மாதங்களுக்கான (ஓர் ஆண்டு) மழை நிலவரத்தை முன் கூட்டியே கணித்து விட முடியுமாம்.
இதை விளக்கும் பழந்தமிழ் பாடல்: 
“தீயபூ ராடம் வெய்யோன் சேர்ந்திடு நாளில் வட்டம்                   தூயமந் தாரம் தோன்றில் சுடரவன் ஆதி ரைக்கே                  
பாயுநாள் தொட்டு முன்பின் ஒருநாட்கும் பதினாலாக              காயும்வேற் கண்ணாய் சொல்லும் கார்மழை கர்ப்பம் தானே
(சூடாமணி உள்ளமுடையன் என்ற நூலின் 258வது பாடல்) 

              மார்கழி மாதம் தனுர் ராசியில் சூரியன் நகரும் பதிநான்கு நாள்களில் காணப்படும் தட்பவெப்ப நிலையைப் பொருத்து எதிர் வரும் ஆண்டின் குறிப்பிட்ட மாதங்களில் மழைபொழிவு இருக்கும் என்பதே இப் பாடலின் கருத்து.
இந்த முன் கணிப்பு கிட்டத்தட்ட 70% சரியாக இருப்பதாக இந்த முறையில் இன்றும் முன்கணிப்பு செய்துவரும் நெல்லை குமரி பகுதி விவசாயிகள் சொல்லுகிறார்கள். 100% துல்லியம் இல்லாமல் போவதற்கு இன்றைக்கு சுற்றுச்சூழலில் ஏற்பட்டுள்ள பெரும் மாற்றங்கள் தான் காரணம் என்பது அவர்களின் கருத்து. கர்ப்போட்டம் அல்லது கருவோட்டம் என்றால் என்ன என்று விளங்கவில்லையே என்ற கேள்விக்கு வள்ளுவர்கள் சொல்லும் பதில்: சூரியனுடைய சுழற்சியை அடிப்படையாக்க் கொண்ட்து தான் கர்ப்போட்டம். பூமி சூரியனை சுற்றுவதால் சூரியன் தொடர்ந்து சுற்றிக் கொண்டிருப்பது போல் நமக்குத் தோன்றுகிறது. இவ்வாறு சுற்றும் போது ஒவ்வொரு ராசியைக் கடக்க அது 30 நாள்கள் எடுத்துக் கொள்கிறது.
சரி... இதற்கும் கர்ப்போட்டம் என்னும் மழை குறிப்புக்கும் என்ன தொடர்பு?
சூரியன் ஒவ்வொரு ராசியைக் கடக்கும் போதும் அதிலுள்ள நட்சத்திரங்களையும் கடந்து செல்கிறது. இதில் தனுர் ராசியை சூரியன் கடந்து செல்லும் போது அதிலுள்ள பூராடம் நட்சத்திரத்தைக் கடப்பதற்கு 14 நாள்களை எடுத்துக் கொள்கிறது. இது மார்கழி மாதத்தில் நடைபெறுகிறது. இந்த நாள்களில் அதாவது டிசம்பர் 28 முதல் ஜனவரி 11வரை (ஏறக்குறைய) உள்ள நாள்களில் காணப்படுகிற தட்பவெப்ப நிலையை அடிப்படையாக வைத்து அடுத்த ஓராண்டிற்கான மழை கணிக்கப்படுகிறது. இதற்குத் தான் கர்ப்போட்டம் என்று பெயர்.
இந்தப் பதிநான்கு நாள்களிலும் வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தால், லேசான தூறல் இருந்தால், மேகங்கள் வானில் திரிந்தால், வானம் மேகமூட்டமாக இருந்தால் எதிர்வரும் மாதங்களில் நல்ல மழை இருக்கும். கருவோட்ட நாள்களில் நல்ல வெயில் அடித்தால், கனமழை பெய்தால், வானத்தில் வெள்ளை மேகங்கள் திரிந்தால், வானம் வெட்ட வெளியாய் இருந்தால் எதிர்வரும் நாள்களில் மழை பொய்த்துப் போகும் எனபது தான் கருவோட்டப் பலன். இது தான் கருவோட்டம் மூலம் மழை முன்கணிப்பு செய்யும் முறை. குறிப்பிட்ட எதிர்வரும் மாதங்களில் மேகம் சூல் கொள்ளுமா கரு கலையுமா என்று சொல்லக் கூடிய இந்த நமது பாரம்பரிய வானியல் அறிவை நவீன அறிவியலோடு பொருத்தி மேம்படுத்தும் முயற்சியை நாம் மேற்கொள்ளலாமே.