Wednesday, 27 June 2012     ஆதிச்சநல்லூர் அகழாய்வு                     உண்மைகள்
மறைக்கப்படுகின்ற.................................வா? 
            திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலையில் 24 கிமீ தொலைவில் தாமிரபரணியாற்றின் வலப்பக்கம் உள்ள ஒரு குன்றில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்கத் தாழிக்காடு தான் ஆதிச்சநல்லூர் . இது ஆற்றங்கரை நாகரிகத்தை வெளிப்படுத்தும்  சான்றுகளை நிறைய தன்னகத்தே கொண்டிருக்கிறது. சிந்து வெளி நாகரிகத்திற்கும் காலத்தால் முந்தியதாக விளங்குவது இந்த பொருநை நாகரிகம். பண்டை தமிழ் மக்களின் அத்தனை கூறுகளையும் உள்ளடக்கியதாக இந்த நாகரிகம் திகழ்கிறது. இதற்கான சான்றுகள் ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வில் கிடைதுள்ளன.


                     சிந்துவெளி ஆய்வு 1922இல் நடந்தது. அதன் பெருமையை உலகு அறியும். ஆனால் 1876ஆம் ஆண்டு தொடங்கி பலமுறை அகழ்வாய்வு நடந்த ஆதிச்சநல்லூர் பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்? இங்கு கிடைத்திருக்கும் செப்புப் பொருட்கள், மட்கலங்கள், பொன் அணிகலங்கள், அரப்பன் நாகரிக உருவ அமைப்பில் ஓர் எண்(ஐந்தாக இருக்கலாம்) பானை ஓடு ஒன்றில் குறியீடாக வரையப்பட்டிருப்பது, தாழியின் உட்பக்கத்தில் எழுதப் பெற்றுள்ள தொன்மை தமிழ் வாசகம், தாய்த்தெய்வச் செப்புத் திருமேனி ஆகியவை, ஆதிச்சநல்லூர் புதிய கற்காலக் காலத்திலிருந்து பெருங்கற்காலம் முடிய மிகச் சிறந்த உள்நாட்டு வணிகத் தலமாகத் திகழ்திருக்கிறது என்று மெய்ப்பிக்கின்றன.                                                                           
                     பெருங்கற்காலத்திற்கு முன்பிருந்தே தமிழர்கள்  கல்வியறிவிலும், செப்புத்திருமேனிகள், வெண்கல கலன்கள், இரும்புப் பொருட்கள், சங்கு வளையல்கள், சுடுமண் அணிகலன்கள் ஆகியவற்றை உருவாக்குவதில் கைதேர்ந்தவர்களாக விளங்கியிருக்கின்றனர் என்பதை இங்கு கிடைத்திருக்கும் சான்றுகள் நமக்கு புரிய வைக்கின்றன.

ஆதிச்சநல்லூரில்  நடத்தப்பட்ட அகழ்வாய்வில் இரும்புப் பொருட்கள், வெண்கல பொருட்கள், மட்பாண்டங்கள், தாழிகள், மனிதர்களின் மண்டையோடுகள் போன்றவை பெருமளவில் கிடைத்திருக்கின்றன. புதியகற்காலம்,
பெருங்கற்காலம் இவையோடு சம்பந்தப்பட்ட இரும்புகாலம் என்று அறியப்படுகிற தொல்வரலாறு குறித்த ஏராளமான சான்றுகள் இவ்வகழ்வாய்வுகள் மூலம் கிடைத்திருக்கின்றன. இரும்பு கிட்டத்தட்ட 10000 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்ட ஒன்று. தங்கத்தை விட அதிகப் பயன்பாடுள்ள அருமையும் பெருமையும் பெற்ற உலோகம் இது.
இதனை மிகப் பழமையான காலத்திலேயே தமிழர்கள் எகிப்து, ஆப்பிரிக்கா, சுமேரியா,  கிரீஸ் முதலிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்துள்ளனர். கி.பி. 4ஆம் நூற்றாண்டிலேயே ஊட்ஸ் (wootz) என்ற பெயரில் செய்யப்பட்ட எஃகை இங்கிருந்து ஐரோப்பிய நாடுகள் இறக்குமதி செய்துள்ளன என்று வரலாறு கூறுகிறது. wootz என்ற ஆங்கில சொல்லிற்கு steel made in India from ancient times by carbonaceous matter பொருள் சொல்லுகிறது ஆங்கில அகராதி.. எஃகை கடினமாக்கும் முறையை பிற நாட்டினர் நம்மிடமிருந்தே அறிந்து கொண்டனர் என்பது வரலாற்றில் மறுக்க முடியாத ஓர் உண்மை.. அறிவியல் வளர்ச்சி பெறாத பண்டைய காலத்திலேயே தமிழர்கள் இரும்பு தாதுகளை சேகரித்து தோல் துருத்தியின் மூலம் சூடு உண்டாக்கக் கூடிய சிறிய களிமண் உலையில் இட்டு இரும்பை உருக்கி வந்தனர். இதற்கு அதிக வெப்பம் தர கூடிய கருங்காலி மரத்தின் கரியை பயன்படுத்தி உள்ளனர் என்று சொல்லப்படுகிறது. ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வில் ஏராளமாக இரும்பு கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

 இது பற்றி ஒர் ஆய்வு கட்டுரை ஆங்கிலத்தில் இவ்வாறு பேசுகிறது: The blades used so-called wootz steel, smelted with a technique developed 2000 years ago in India, where craftsmen added wood and other organic debris to their furnaces. The resulting carbon-laced steel, hard but flexible, was soon celebrated across the ancient world. மேலும் அந்தக் காலத்தில் ஐரோப்பாவில்  மன்னர்களாலும்   போர்வீரர்களாலும்    மிகவும் விரும்பப் பட்ட ஆயுதம் இந்த ஊட்ஸ் எஃகினால் செய்யப்பட்ட வாட்களே. 
                           ஆதிச்சநல்லூரில் முதுமக்கள் தாழிகள் நூற்றுக்கணக்கில் எலும்புகளோடு கிடைத்திருக்கின்றன. ஆதிச்சநல்லூரில் ஒரு தாழியில் இருந்த மட்கலத்தில் பதிக்கப் பெற்றிருக்கும் மிக சிறந்த வேலைப்பாடுடைய ஒரு காட்சி நம்மையெல்லாம் வியப்பில் ஆழ்த்துகிறது. 1920களில் சிந்துவெளி ஆய்வுகள் பற்றி பரவலாகவும் பரபரப்பாகவும் பேச்சுகள் வரலாயின. 1930களில் மொகஞ்ச்தாரோ, ஹாரப்பா பகுதிகளில் நடத்தப்பட்ட அகழாய்வுகளில் கிடைத்த சான்றுகளின் அடிபடையில் அங்கு வாழ்ந்த மக்கள் தொடர்பான விவாதங்கள் தொடங்கின. ஹிராஸ் பதிரியார் சிந்து வெளிப் பகுதிகளில் வாழ்ந்தவர்கள் திராவிடர்களே என்று தனது நீண்ட நாள் ஆய்வுகளில் கண்ட சான்றுகளின் அடிப்படையில் வெளிப்படுத்தினார். பின்லாந்து அறிஞர் அஸ்கோ பர்ப்பொலா போன்ற பிற அறிஞர்களும் சிந்துவெளிக் குறியீடுகளை திராவிட மொழியின் முன் எழுத்து வடிவம் என்றே  கூறுகின்றனர். ஐராவதம் மகாதேவன் போன்றவர்களும் இக் கருத்தினை உறுதிப்படுத்துகின்றனர்.

ஆதிச்சநல்லூரில்அண்மையில் நடந்த அகழாய்வுகளில் கிடைத்துள்ள பொருட்களுக்கும் நூறு ஆண்டுகளுக்கு முன்பு கண்டெடுக்கப்பட்ட பொருட்களுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருந்தாலும் இப்போது கிடத்துள்ளவை புதிய வரலாற்றுத் தரவுகளை வெளிக் கொண்டு வருவதாக அமைந்திருக்கின்றன.தென் இந்திய வரலாற்றை ஆய்வு செய்த ஆய்வாளர்களில் சிலர் பொதுவாக இங்கு இரும்பு காலம்  கிட்டத்தட்ட கி.மு.5000-ம் ஆண்டுவாக்கில் நிகழ்ந்திருக்கலாம் என்று கூற்கின்றனர். ஆனல் தெனிந்திய வரலாற்றினை பல்வேறு உயர்ந்த நோக்கோடு ஆய்வு செய்த அறிஞர்கள் இங்கு இரும்பு காலம் என்பது கி.மு.    8000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்திருக்கலாம் என்று மதிப்பிடுகின்றனர்.
இவ்வளவு சிறப்புகள் கொண்ட இந்த தொல் நாகரிகம் தொடர்பான அகழ்வாய்வுகள் மத்திய அரசின் இந்திய தொல்லியல் துறை(ASI)யால் 2004ல் தொடங்கி தொடர்ந்து நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் ஆகியும் இன்னும் அந்த ஆய்வு முடிவுகள் அதிகாரபூர்வமாக இன்று வரை வெளியிடப்படவில்லை. ஆய்வில் கண்டடைந்த உண்மைகள் வெளிவந்தால் தமிழனின் தொன்மை ஆதாரபூர்வமாக நிரூபிக்கபட்டுவிடும், உலகின் தொல் நாகரிகம் என்ற பெருமையும் தமிழுக்கு-தமிழனுக்கு- கிடைத்துவிடும் என்பதால் இதையெல்லாம் விரும்பாத ஒரு கும்பலும் ,வரலாற்றை வடக்கிலிருந்து படிப்பத்தற்கு மாறாக தெற்கிலிருந்து  படிக்க விரும்பாதவர்களும் அப்படி ஒரு உண்மை அறிக்கை வெளிவருவதை வெகு சாமர்த்தியமாக தடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லாவகையிலும் இளிச்ச வாயன்களாய் இதுவரை இருந்தது போதும். இதிலாவது தெளிவுடனும் துணிவுடனும் செய்லபடுவோம். ஆதிச்சநல்லுர் அகழ்வாய்வு அறிக்கையை விரைவில் வெளியிட ஒன்றுபட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுபோம்.

Friday, 22 June 2012


          
பருத்திப்பெருவழி @             கிரேட்காட்டன்ரோடு        கிரேட் காட்டன் ரோடு தூத்துக்குடி நகரத்தின் பிதான சாலைகளில் ஒன்று. இது மேலும் மேற்கில் WGC ரோடு என்கிற வெஸ்ட் கிரேட் காட்டன் ரோடாகிய மேல பெரிய காட்டன் ரோடு, தெற்கு காட்டன் ரோடு, வடக்குக் காட்டன் ரோடு என்று வளர்ந்து பிரிகிறது. அது என்ன கிரேட் காட்டன் என்கிற கேள்வி நீண்ட நாட்களாய் எனக்கு இருந்து வந்தது. ஒரு சந்தர்ப்பத்தில் தமிழ் நாட்டளவில் சிறந்த சமூக பண்பாட்டாய்வாளரென்று அறியப்படுகிற நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன்அப்போது அவரிடம் இந்தக் கேள்வியை கேட்டேன். பிரிட்டீஸ் இந்தியாவில் திருநெல்வேலி கலக்டராக பணியாற்றியவர் ஆர்தர் காட்டன் என்பவர். அவர் நினைவாக இந்த பெயர் உருவாகி இருக்கலாம் என்று  ஒரு கருத்தைச் சொன்னார்இதில் எனக்கு அவ்வளவாக உடன்பாடில்லை. சர். ஆர்தர் காட்டன் என்ற வெள்ளையர் திருச்சியில் செயல்பட்டு வந்த tank devalepment region என்ற அன்றைய வெள்ளை அரசின் அமைப்பின் தலைவராக செயல்பட்டு வந்தார். எனவே நண்பர் சொன்ன தகவல் எந்த அளவுக்கு சரியாக இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகம் இருந்தது.             
             
                   ஒரு நாள் சில்க் ரோடு என்கிற silk route ஐ பற்றி தெரிந்து கொள்ள நேர்ந்ததுபண்டைய காலத்தில் சீனாவின் பட்டு வணிகத்தின் பொருட்டு உருவான தரை வழிப்பாதையே இது.   சீனாவிலிருந்து மத்திய தரை நாடுகள் வழியே ஐரோப்பாவை இணைக்கிறது இத்தரை வழிப்பாதை. இதன் நீளம் ஏறத்தாழ 4000 மைல்கள் இருக்கும். இந்தப் பாதையின் வழியே சீனாவிலிருந்து பட்டு மட்டும் வெளியிடங்களுக்குச் செல்லவில்லை. பட்டுடன் தேயிலை, பீங்கான் பாத்திரம் போன்று பலவும் சென்றன. மேலும் ஐரோபிய மற்றும் ஆசிய நாடுகளுக்கு இடையேயான கலை, பண்பாடு, அறிவியல் பரிமாற்றத்திற்கும் பெரிதும் உதவியது இது என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கூற்று.    

            சில்க் ரோடு பற்றி எனக்குத் தெரிய வந்த பின் எனது காட்டன் ரோடு தொடர்பான சிந்தனை பல தடத்தில் பயணப்படலாயிற்று. ஒரு சில பழைய குறிப்புகள், சில வயதானவர்கள் சொன்ன செவி வழிச் செய்திகள் போன்றவற்றின் அடிப்படையில் சில வெளிச்சங்கள் தோன்றின. கிழ்க்கிந்திய கம்பெனியைத் தொடர்ந்து ஆட்சி செய்த பிரிட்டீஸ் அரசும் இரும்பு, பருத்திப் போன்ற கச்சாப் பொருட்களை இங்கு மலிவான விலைக்கு கொள்முதல் செய்து தங்கள் நாட்டிற்கு ஏற்றுமதி செய்தும் பின்  அங்கு அவற்றைப் பண்டங்களாக மாற்றி இங்கு இறக்குமதி செய்து கொள்ளை லாபத்திற்கு விற்று நமது நாட்டை சுரண்டி கொள்ளை அடித்தனர். இது நம் பள்ளிகளின்  வரலற்றுப் புத்தகங்கள்  நமக்குச் சொல்லி தருகின்ற பாடம். நமது கரிசல் காட்டில் விளைகின்ற பருத்தியினை மலிவாய் கொள்முதல் செய்து அவற்றை எற்றுமதி செய்ய தூத்துக்குடிக்குக் கொண்டுச் செல்ல அன்றைய வெள்ளை அரசு பயன்படுத்திய பெருவழிதான் தூத்துக்குடி கிரேட் காட்டன் ரோடு. ஸ்ரீவில்லிபுத்ததூர் தொடங்கி சங்கரன்கோவில், கழுமலை, கடம்பூர், விளாத்திகுளம் என்று பல ஊர்களை தொட்டு இந்தப் பாதை தூத்துக்குடி வரை நீண்டது. இந்தப் பெருவழி முக்கியத்துவமும் சிறப்பும் பெற்றிருந்த காலத்தில் அந்தப்பாதையில்  அமைந்திருந்த மேற்படி ஊர்களும் சிறப்புடனும் செழிப்புடனும் விளங்கின.
                        நேஷனல் ஹைவே என்று அழைக்கப்படுகிற தேசிய நெடுஞ்சாலைகள் தோன்ற ஆரம்பித்தப் பின் கிரேட் காட்டன் ரோடு என்கிற பருத்திப் பெருவழியும் தனது முக்கியதுவத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து பைய பைய காணாமலே போய்விட்டது. அதன் தொடர் விளைவாக சிறப்புற்று விளங்கிய மேற்படி ஊர்களும் நலிந்து பொழிவிழந்தன. NH 7 என்கிற காசியையும்  கன்னியாகுமரியையும் இணைக்கிற காசி கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஊர்களும் அந்தப் பாதையின் வளர்ச்சியோடு  வளர்ந்து முக்கியத்துவம் பெற்று  சிறப்புற்றன. கோவில்பட்டி, சாத்துர், விருதுநகர் போன்ற ஊர்கள் அவற்றில் சில. நமது சங்க இலக்கியங்களில் கூட காந்தளூர் சாலை, அதியமான் பெருவழி போன்ற சில பெருவழிகள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.  

        . சமீபத்தில் மதுரைக்குச் சென்றிருந்தேன். அங்கு சங்கிலித் தொடர் உணவகங்கள் நடத்தும் நண்பர் ஒருவரை சந்தித்தேன். பேச்சின் நடுவே அவர் சொன்ன ஒரு செய்தி என்னை சிறிது சிந்திக்க வைத்தது. சமீப காலங்களில் கடைகளில் வியாபாரம் குறைந்து விட்டதாகவும் அதன் விளைவாக தொழிலும் தொய்வடையுமோ என்ற பயம் எற்பட்டிருக்கிறது என்பது தான்  நண்பர் சொன்ன தகவலின் சாரம். தனக்கு மட்டும் இந்த நிலை இல்லை. பெரும்பாலான வியாபார நிறுவனங்களின் நிலையும் இது தான் என்று மேலும் கூறினார். ஊருக்குத் திரும்பும் வழியில் நான் கண்ட சில விஷயங்கள் எனக்கு ஒரு உண்மையை  புலப்படுத்தின. சமீப காலங்களில் தோன்றியிருக்கிற நான்கு வழிப்பாதைகள் நமது பயணத்தை விரைவானதாகவும் பாதுகாப்பானதாகவும் மாற்றி இருப்பது கண்கூடாக காணும் ஒரு யதார்த்தம்தான். இந்தப் பாதைகள் நீண்டப் பயணத்தின் போது நகரங்களுக்குள் செல்லுவதை தவிர்க்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. தேவையில்லாமல் நகரங்களுக்குள் செல்லவேண்டியது  இல்லை. அதனால் நகருக்குள் போக்குவரத்து நெரிசல் குறைந்திருப்பது என்னவோ உண்மைதான். அதே நேரத்தில் மதுரை உணவக நண்பரின் கூற்றுக்கும் இது தான் காரணம் என்பதும் புலப்படுகிறதுஇதை உறுதி செய்வது போல் புறவழிச் சாலைகளிலும்   நான்கு வழி சாலையின் ஆள் அரவமற்றப் பகுதிகளிலும்  புதிது புதிதாக பெரிய பெரிய உணவகங்களும் வியாபார கடைகளும் உருவாகி வருகின்றன. சமீபத்தில் படித்த செய்தி ஒன்று நினைவுக்கு வருகிறது. ரிலையன்ஸ் நிறுவனம் நாடு முழுவது நான்கு வழி சாலைகளில் உள்ள தனது பெட்ரோல் விற்பனை நிலையங்களை ஒட்டி முந்நூறுக்கும் மேற்பட்ட நவீன உணவகங்கள நிறுவ திட்டமிட்டிருப்பதாக வந்த  செய்தி தான் அது.
         காலச் சக்கர சுழற்சியில் பருத்திப் பெருவழிப் பாதை ஊர்களுக்கு ஏற்பட்ட நிலை தேசிய நெடுஞ்சாலை ஊர்களுக்கும் ஏற்பட்டு விடுமோ என்று பயப்பட வேண்டிய தருணம் வந்திருப்பதாகவே தோன்றுகிறது. எந்த ஒரு வினையும் அதற்கு நேர் எதிரான எதிர் விளைவை தன்னுள் வைத்திருக்கும் என்ற மூன்றாவது விதியினை மனதில் கொண்டு பாதிப்புகளை குறைக்கும் வழிகளை தேட வேண்டிய வேளை இது என்று படுகிறது. தவறினால் கிரேட் காட்டன் ரோடும் தேசிய நெடுஞ்சாலைகளும் ஒன்றாகி விடுமோ என்று  கூடத் தோன்றுகிறது.


                                                                                                                              

Thursday, 21 June 2012


 
விடாதுத் துரத்தும் வாங்கு
 வாங்கு சத்தம் என்ற சொல்லை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். இது பள்ளிவாசலில் தொழுகைக்கு மக்களை அழைக்கும் ஒலி. முஸ்லீம்கள் ஒரு நாளில் ஐந்து வேளை தொழுவது என்பது அவர்களின் மத நம்பிக்கை. ஒவ்வொரு வேளையும் தொழுகைக்கும் அழைக்கும் அழைப்பே வாங்கு. தமிழில் வாங்கு என்றால் 'அழை' என்றொரு அர்த்தம் உண்டு. இந்த வாங்கு சத்தம் சிறு வயதிலிருந்தே என்னை துரத்திக் கொண்டு இருக்கிறது. இதை நினைத்துப் பார்த்தால் எனக்கு ஆச்சரியமாகாவும் புதிராகவும் இருக்கிறது. சிற்றூரான எங்கள் கிராமத்திலிருந்து இது என்னைத் தொடர்கிறது. குறைந்த மக்கள் தொகை கொண்ட எங்கள் ஊரில் சில முஸ்லீம் குடும்பங்கள் உண்டு. இவர்களுக்கு ஒரு பள்ளிவாசலும் உண்டு. அந்த பள்ளிவாசலிலிருந்து தொடங்கியது எனது வாங்கு சத்தம் கேட்கும்  தலையெழுத்து. படிப்பெல்லாம் முடித்து வேலைக்குச்
சேர்ந்தேன். எனது அலுவலகத்திற்கு அருகில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்திருந்தது ஒரு பள்ளிவாசல். வாங்கு சத்தத்துக்குத் தப்பமுடியாமல் இங்கேயும் மாட்டிக் கொண்டேன். காலம் கழிந்து கொண்டிருந்தது.
                               Decentralization என்ற பெயரில் திடீரென்று ஒரு நாள் எங்கள் அலுவலகம் நான்கைந்துப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. நான் மேலப்பாளையம் பகுதி அலுவலகத்திற்கு மாற்றப்பட்டேன். மேலப்பாளையம் தமிழ் நாட்டிலேயே  முஸ்லீம்கள் அதிகம் வாழும் பகுதிகளில் ஒன்று. அந்த ஊரில் தெருவுக்கு ஒரு பள்ளிவாசலாவது இருக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட பள்ளிவாசல்கள் உள்ள தெருக்களும். உண்டு. கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட  பள்ளிவாசல்கள் அந்த ஊரில் இருந்தன.  வாங்கு சத்தத்தின் ஒலி எந்த அளவுக்கு  அந்த ஊரில் இருக்குமென்று. இப்போது நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். 

    
                               இப்படியாக வாங்கு சத்தம் என்னைத் துரத்திகொண்டே இருந்தது. நான் வெளி ஊர்களுக்குச் சென்றிருக்கும் வேளைகளில் உறவினர் வீட்டிலோ தங்கும் விடுதியிலோ இரவுத் தங்கியிருக்கும்  போதுகூட அதிகாலையில் இந்த வாங்கு சத்தம் தவறாமல் என் காதில் ஒலித்து என்னை எழுப்பிவிடும் கொடுமையை நான் சொல்லியே ஆக வேண்டும்.  சில ஆண்டுகளுக்குப் பின் எனக்குத் தூத்துக்குடிக்கு மாற்றல் கிடைத்தது. விடாது கருப்பு என்பது போல் இங்கேயும் என்னை விடவில்லை பள்ளிவாசல் வாங்கு சத்தம்.  தூத்துக்குடி பெரிய பள்ளிவாசலுக்கு மிக அருகில் எனது அலுவலகம் இருந்துத் தொலைத்தது. இரண்டு ஆண்டுகளில் மீண்டும் அங்கிருந்து திருநெல்வேலிக்குப் பணி மாற்றம் கிடைத்தது. மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் பணி. அந்த அலுவலகம் அமைந்திருந்த பகுதியோ  அப்போதுதான் உருவாகி வருகிற  ஒரு புறநகர் பகுதியாகும்.  அலுவலகத்திற்கு சென்ற அன்றே எனக்கு ஓர் அதிர்ச்சிக் காத்திருந்தது.  நான் இந்த அலுவலகத்திற்கு மாற்றல் ஆகி வருவதை முன் கூட்டியே தெரிந்து வைத்திருந்தது போல அலுவலகத்திற்கு எதிரிலேயே புதியதாக  ஒரு பள்ளிவாசல் முளைத்திருந்தது. இங்கும் வாங்கின் துரத்தல் விடாது போலவே என்று எண்ணிக் கொண்டேன்.
                              இதற்கிடையில் வாழ்க்கை என்னைக் கடித்து மென்றுத் துப்பிவிட்டது. எல்லாம் வெறுத்துப் போன நான் விருப்ப ஓய்வு வாங்கிக் கொண்டு , மீதி இருக்கும் காலத்தையாவது கொஞ்சம் நிம்மதியாகக் கழிப்போம் என்று எண்ணி நகரத்தின் ஒதுக்குப் புறமாக அமைந்திருந்த அமைதியான் பகுதியான என்.ஜி.ஓ காலனிக்குக் குடிபோனேன். காலனியில் எனது வீட்டிற்கு   எதிரே உள்ள கட்டடம் என்ன என்பதை சொன்னால் நீங்களே கூட அதிர்ந்துப்  போவீர்கள்  முஸ்லீம்கள் அதிகம் குடியிருக்காதப் பகுதியான என்.ஜி.ஓ. காலனியின் ஒரே பள்ளிவாசல் தான் அது. இது வரை ஏதாவது ஒரு வேளை மட்டும் கேட்டுக் கொண்டிருந்த வாங்கு சத்தம் இபோது  ஐந்து வேளையும்  விடாமல் கணீர் கணீர் என்று காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.  ஆச்சு. இருபது வருசத்துக்கு மேலே காலத்தை ஒட்டியாகி விட்டது தினமும் வாங்கு சத்ததைக் கேட்டபடியே.
                                  எல்லோருக்கும் இயல்பாக நடக்கக் கூடிய ஒரு பொதுவான அனுபவமாகக் கூட இது இருக்கலாம். ஆனாலும் எனக்கும் மட்டும் சிந்தனை இப்படியெல்லாம் ஓடுகிறதே ஏன்?. ஏதும் புரியவில்லை.....

Sunday, 17 June 2012
அம்மாவும் நாங்களும்

  சமீபத்தில் எங்கள் அம்மா அப்பாவுக்கு நூறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. ஆம் இருவருக்கும் ஒரே வயது. இது ஒர் அபூர்வமான ஒன்று தானே. எனவே இந்த நூற்றாண்டு நிறைவை எந்த விதத்தில் எதிர்கொள்வது என்று நாங்கள் சகோதரர்களிடையே விவாதித்துக் கொண்டோம். சகோதரர்கள் என்றால் நானும் என்னுடைய  இரு அண்ணன்களும் தான். அம்மா இறந்து 37 ஆண்டுகள் ஆகி விட்டன. அப்பா இறந்து 30 வருசம் ஆச்சு.   நீண்ட விவாத்திற்கு பின் இருவரின் வாரிசுகள் அதாவது மகள், மகன்கள், பேரன், பேத்திகள் அனைவரும் குறிப்பிட்ட ஒரு நாளில்ரே இடத்தில் கூடுவது என்று தீர்மானிக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு get together போல அது இருக்க வேண்டும். என்று நினைத்தோம்.
               மேலும் இருவரின் நினைவாக வீட்டிலேயே படையல் படைத்து சாமி கும்பிடுவது என்றும் தீர்மானம் ஆனது. இங்கே தான் ஒரு சிக்கல் உருவானது. சாமி கும்பிடுவது என்றால் இருவரின் புகைப்படங்களும் வேண்டுமே. துரதிஷ்டவசமாக அவர்களின் புகைப்படம் ஏதும் தற்சமயம் எங்களிடம் இல்லை. என்னுடைய அம்மா அவருடைய வாழ்நாளில் ஒரு புகைப்படம் கூட எடுத்துக் கொண்டது இல்லை. புகைப்படம் எடுத்துக் கொண்டால் ஆயுள் குறையும் என்று அந்தக் காலத்தில் பரவலாக இருந்தக்  கூற்றின் மேல் அவருக்கு இருந்த அசைக்க முடியாத நம்பிக்கையும் கூட இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் அப்பாவின் புகைப்படம் ஒன்று இருந்தது. அதுவும் நீண்ட நாட்களுக்கு முன்பே செல்லரித்து கெட்டுக் போய்விட்டது. இருவரின் புகைப்படங்களுக்கும் இப்போது என்ன செய்வது என்று புரியவில்லை. நீண்டத் தேடுதலுக்குப் பின் 38 வருசங்களுக்கு முன் நடந்த சின்ன அண்ணன் திருமணத்தில் அப்பா மண்மக்களை ஆசிர்வதிக்கும் போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் கிடைத்தது. குனிந்து மணமக்களை ஆசிர்வதிக்கும் நிலையில் எடுக்கப்பட்ட அந்த படத்தில் அப்பாவின் முகம் அவ்வளவு தெளிவாக இல்லை. என்ன செய்வது ஒன்றும் இல்லாததற்கு இதையாவது வைத்துக் கொள்வோம் என்று முடிவு செய்தோம். ஆனால் புகைப்படமே எடுத்துக் கொள்ளாத அம்மாவின் படத்திற்கு என்ன செய்வது எங்கே போவதுஒன்றும் புரியவில்லை. சின்ன அண்ணன் நீதான் அம்மாவின் படத்தை தயார் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டார். என்னால் எப்படி முடியும் என்று கேட்டேன். அவர் மீண்டும் உறுதியாக சொல்லிவிட்டார் உன்னால் முடியும் தம்பி என்று. என்ன செய்யலாம் என்ற நீண்ட நேர யோசனைக்குப் பின் எனது ஓவிய நண்பர் ஒருவரை சந்திப்பது என்று முடிவு செய்தேன். அவர் தான் பொன்.வள்ளிநாயகம். நல்ல நண்பர். பழகுவதற்கு இனியவர். கலை, இலக்கியம் இவற்றில் எல்லாம் மிகவும் ஈடுபாடு கொண்டவர். மிகுந்த சமூக அக்கறையும் கொண்டவர். முறையாக ஓவியம் கற்றவர். திருநெல்வேலி பகுதியில் உள்ள பல கோவில்களில் அவர் வரைந்த ஓவியங்களை இன்றும் பார்க்கலாம். பாளையங்கோட்டை சேவியர் கல்லூரி வளாகத்திலும் கூட அவர் வரைந்த ஓவியங்கள் இருக்கின்றன. திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் புராணம் மற்றும் கோவில் தல வரலாறு போன்றவற்றின் அடிப்படையில் வரையப்பட்ட பல ஓவியங்கள் பிரகாரத்தில் அங்காங்கே வைக்கப்பட்டிருந்தன. திடீரென்று ஒரு நாள் அத்தனை ஓவியங்களையும் அகற்றி குப்பையை போல ஓர் அறையில் போட்டு பூட்டிவிட்டது கோவில் நிர்வாகம்இதை கேள்விபட்ட வள்ளிநாயகம் மனம் பதைத்து திருநெல்வேலி பகுதியில் உள்ள கலை ஆர்வலர்களை திரட்டி கோவில் நிர்வாகத்தின் அநியாய செயலுக்கு எதிராக  மிகப் பெரிய போராட்டம் ஒன்றை நடத்தினார். அதன் விளைவு நெல்லைப்பர் கோவில் ஆயிரங்கால் மண்டபம், குப்பையாக அறையில் போட்டு பூட்டி வைக்கப்பட்டிருந்த அரிய ஓவியங்கள் அலங்கரிக்கும் அருங்காட்சியகமாக மாறியது. இது போன்று சமூக அக்கறை கொண்டவர் தான் வள்ளிநாயகம்அவரை சந்திக்க வேண்டும் என்று முடிவு செய்த மறு நாளே அவரை போய் பார்த்தேன். இந்த ஆண்டு எனது அம்மா அப்பாவுக்கு நூற்றாண்டு நிறைவு . எனவே அவர்களின் படங்களை நீங்கள் எனக்கு வரைத்து கொடுக்க வேண்டும். என்று கேட்டு கொண்டேன்.   நான் சொன்னதை கேட்ட அவர்  எனக்கு ரெம்ப சந்தோசமாக இருக்கு   உயிரோடு இருக்கும் அம்மா அப்பாவையே கண்டு கொள்ளதவர்கள் நிறைய இருக்கும் இந்த காலத்தில் அம்மா அப்பாவின் நூற்றாண்டு விழாவை கொண்டாட நினைக்கும் உங்களுக்கு எனது பாரட்டுகள். நீங்கள் கேட்டுக் கொண்டபடி நிச்சயம் நான் படம் வரைந்து தருகிறேன்இருவரின் மாதிரி புகைப்படங்களை தாருங்கள்இரண்டு வாரங்களில் வரைந்து கொடுத்து விடுகிறேன். என்று சொன்னார்நண்பரே அதில் தான் ஒரு சின்ன சிக்கல். என் அம்மா தன் வாழ் நாளில் ஒரு புகைப்படம் கூட எடுத்துக் கொண்டதில்லை  எனவே மாதிரிபடம் எதுவும் என்னிடம் இல்லையே. என்ன செய்ய என்று கேட்டேன்நான் சொன்னதைக் கேட்ட அவர்  என்ன சொன்னீங்க மாதிரிபடம் ஏதும் இல்லையா என்ற திகைப்புடன் தொடர்ந்தார், ஐயா இந்த நாள்  எனது டைரியில் குறித்து வைத்துக் கொள்ள வேண்டிய நாள் ஏன்னா யாரிடமிருந்தும் இப்படி ஒரு வேண்டுகோள் எனக்கு இது வரை வந்ததில்லை. அதனால் தான் சொல்கிறேன். என்றார். எனக்கு அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது  புரிபடவில்லை. குழப்பமாக அவ்ரையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஆமாம் ஐயா என்றவாரே மீண்டும் தொடர்ந்தார், இப்படி மாதிரிபடம் ஏதும் கொடுக்காமல் ஒருவரை படமாக வரைந்துத் தர சொல்வது என்பது ரெம்ப வித்தியாசமாகவும் வியப்பாகவும் இருக்கிறதுஅதனால் தான் இப்படி சொல்கிறேன் என்றார். எனவே இது எனக்கு ஒரு சவால். ஆம் இதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு இந்தப் படத்தை கண்டிப்பாக உங்களுக்கு  வரைந்து கொடுக்கிறேன்நீங்கள் ஒரு காரியம் செய்யுங்கள். அம்மாவின் உருவத் தோற்றத்தை விரிவாக எனக்கு விளக்குங்கள் அதை வைத்துக் கொண்டு படம் வரைய முயற்சிக்கிறேன் என்றார். நானும் அம்மாவின் முகத்தோற்றம் பற்றி அவரிடம் விவரித்தேன். சரி இது போதும் இதை வைத்துக் கொண்டு நான் வரைய முயற்சிக்கிறேன். வரைந்து முடித்து விட்டு தகவல் சொல்கிறேன். வந்து பாருங்கள் மாற்றங்கள் செய்ய வேண்டி இருந்தால்    மாற்றம் செய்து கொள்ளலாம் என்றார். அவரிடம் விடை பெற்றுக் கொண்டு திரும்பினேன். சில நாட்களுக்குப் பின் படம் வரைந்து முடித்து விட்ட தகவல் வர நான் போய் வரைந்து  வைத்திருந்தப் படத்தைப்  பார்த்தேன்எனக்கு அவ்வளவாகத் திருப்தியாக இல்லை. சில மாற்றங்களை சொன்னேன்இப்படியாக நான் மாற்றங்கள் சொல்ல சொல்ல  ஒரு ஐந்து ஆறு முறை வேறு வேறு படங்களை வரைந்து காண்பித்தார். ஒரு வழியாக அம்மாவின் உருவத்தை படத்தில் கொண்டு வந்து விட்டார். எனக்கு ரெம்ப திருப்தியாக இருந்தது . வள்ளிக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டேன். என் மீது அவர் வைத்திருந்த அன்பினால் மட்டுமே இதை அவர் செய்து கொடுத்தார் என்று நான் நம்புகிறேன். தெளிவில்லாத அப்பாவின் புகைப்படத்தை கம்ப்யூட்டரின் உவியுடன் ஓரளவு சரி செய்துப் பயன்படுத்திக் கொண்டோம்.                 படத்தில் பெரிதாக  இருப்பது தான் நான் தெரிவு செய்த என் அம்மா படம். ஒவ்வொரு முறையும் நான் சொன்ன மாற்றங்களின் படி வரைந்தவை தான் சுற்றிலும் இருக்கும் சின்ன படங்கள்.
           குடுமபத்தில் அனவருக்கும் அந்த படம் பிடித்துப் போய்விட்டது . அனைவரும் ஓவியருக்கு நன்றியினையும் பாராட்டையும்  தெரிவித்துக் கொண்டனர்.  


          திட்டமிட்டபடி குறிப்பிட்ட நாளில் சொந்தங்கள் அனைவரும் ஒன்று கூடினோம். எல்லோருக்கும் சந்தோம். மகிழ்ச்சி. அந்த நாளின் நினைவாய் எல்லோரும் சேர்ந்து இருந்து ஒரு புகைப்படமும் எடுத்துக் கொண்டோம். படத்தில் இருப்பவர்கள் அனைவரும் எம் அம்மாவின் உடன்பிறப்புகள், மக்கள், பேரன், பேத்திகள்.