Friday, 15 June 2012முப்பாட்டியின் பல்லாங்குழி
                                    நமது பண்பாட்டில் பாரம்பரிய விளையாட்டுகள் நிறைய இருக்கின்றன. அதில் பல்லாங்குழி விளையாட்டிற்கு ஓரு தவிர்க்க இயலாத இடம் உண்டு. இந்த விளையாட்டை பெரும்பாலும் பெண்களே  விளையாடுவது வழக்கம்.   இந்த விளையாட்டிற்கு பயன்படுத்தும் பலகை பதினானங்கு குழிகளை கொண்டிருப்பதால் இந்த விளையாட்டு பல்லாங்குழி ஆட்டம் என்று அழைக்கப்படுகிறது. பல குழிகளை கொண்ட பலகையில் ஆடும் ஆட்டம் என்பதாலே இந்த சொல் உருவானது என்று கருதுபவர்களும் உண்டு. இது பொழுதுபோக்குக்காக விளையாடப்பட்டாலும் இதை இப்படித் தட்டையாகப் பார்க்க முடியாது என்றே தோன்றுகிறது. இடர்பாடான ஒரு சூழலை அல்லது சிக்கலை கையாள்வதற்கான திறனை வளர்க்கும் பயிற்சியாகவும் இது மறைமுகமாகவும் செயல்படுகிறது. மேலும் இந்த விளையாட்டை விளையாடுபவர்கள் தங்களின் சமயோசிதப் புத்தியையும் செயல் திற நுட்பத்தையும் வளர்த்துக் கொள்ள இது பெரிதும் துணை புரிகிறது. பெரும்பாலும் நமது பாரம்பரிய விளையாட்டுகளில் பலவும் இந்த சிறப்புத் தன்மைகளை உள்ளடக்கிய விதத்திலேயே நமது முன்னோர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளன என்பது நம்மில் பலராலும் புரிந்து கொள்ளப்படாத ஓர் உண்மை. இன்று play school என்ற பெயரில் நடத்தப்படுகிற பள்ளிகளில் விளையாட்டுகளின் மூலம் சிறுகுழந்தைகளின் அறிவுத்திறன்களை வளர்க்கும் பயிற்சிகளை தருவது போல நமது முப்பாட்டன்கள் பொழுதுபோக்கு விளையாட்டுகளின் வழியே அறிவுதிறன்களை நாம் பெறுகிற விதத்தில் அவற்றை வடிவமைத்துக் கொடுத்து விட்டுப் போயிருக்கிறார்கள்  என்பதை நினைக்கையில் கொஞ்சம் வியப்படையாமல் இருக்க முடியவில்லை. இது போன்ற விளையாட்டுகள் சடங்குகள் வடிவதில் பண்பாட்டின் ஊடேயும் கலந்திருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. திருமணம், சடங்கு போன்ற பலவற்றிலும் வெவ்வேறு வடிவத்தில் இவை மறைந்திருக்கின்றன. திருநெல்வேலி பகுதியில் உள்ள் இஸ்லாமிய மக்களிடையே பல்லாங்குழி ஆட்டம் திருமண சடங்கின் ஒரு பகுதியாக இன்றும் இருந்து வருகிறது. திருமணம் முடிந்த ஐந்தாம் நாள் புது மண தம்பதிகளால் இந்த விளையாட்டு ஒரு சடங்காக விளையாடப்படும். விளையாடுவதற்கு 25 பைசா நாணயங்களே காய்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நாணயங்களை மணப்பெண்ணின் தந்தை தான் கொடுக்க வேண்டும் என்பது மரபு.
 

                                  இது எனது அம்மாவின் பாட்டி அதாவது எனது பூட்டி பாட்டி விளையாடிய பல்லாங்குழி. ஏறத்தாழ 150 ஆண்டுகள் பழமையானது . இதில் இன்னும் ஒரு சிறப்பும் உண்டு. பொதுவாக பல்லாங்குழி மரம் மற்றும் பித்தளை போன்ற உலோகத்தில் செய்வது தான் வழக்கம். எவர்சில்வர் என்கிற stainless steel புழக்கத்திற்கு வந்த பிறகு அதிலும் செய்வது வழக்கமாகியது.
                             . இந்தப் பல்லாங்குழிக்குப் பழமையான ஒன்று என்பதோடு கூட கூடுதலாக இருக்கிற மற்றொரு சிறப்பு என்னவென்றால் இது கல்லினால் அதுவும் கிரானைட் கல்லினால் ஆனாது என்பது தான். கல்லினால் ஆன பல்லாங்குழி என்பது வழக்கத்திற்கு மாறான அபூர்வமான ஒன்றே. இதை வடித்த அந்த சிற்பியின் கலைத் திறமை எவ்வளவு அழகாக வெளிப்பட்டிருக்கிறது என்பதை இந்தப் பல்லாங்குழியை பார்ப்பவர்கள் ஒவ்வொருவரும் உணர்வார்கள். இதன் எடை கிட்டத்தட்ட 10 கிலோ வரை இருக்கும். எனவே இதை இங்கேயும் அங்கேயும் நகர்த்துவது என்பது கொஞ்சம் கஷ்டமான ஒன்று. அதுவும் பெண்களுக்கு இன்னும் சிரமம். எனவே இந்த சிரமத்தைப் போக்கும் விததில் பல்லாங்குழிக்கு நான்கு சிறிய இரும்புச் சக்கரங்கள் பொருத்தபட்டிருக்கின்றன்.எனவே ஒரு வண்டியை போல இதை எங்கேயும் உருட்டிச் செல்ல முடியும்.ஒரு சிறிய விளையாட்டு சாமானை கூட கலைஅம்சம் பொருந்தியதாகப் படைத்து வந்த நாம் போலியும் பகட்டுமாக ஏமாற்றுகிறவற்றையே சிறந்த கலை பொருள் என்று கொண்டாடி ஏமாந்துக் கொண்டிருக்கிறோம்
  


                                                     இந்தப் பல்லாங்குழியின் அடிபாகத்தில் மிகுந்த கலை நேர்த்தியுடன் தோகை விரித்தாடும் ஒரு மயிலின் அழகிய வடிவம் செதுக்கப்பட்டிருப்பதையே மேலே படத்தில் காண்கிறோம்.
.

No comments:

Post a Comment