Tuesday, 21 August 2012

                             வைரமலை

                                             24-07-2012 அன்று உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பின்படி களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகப் பகுதியான பாபநாசம் மலைபகுதிக்குள் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப் பட்டுள்ளன என்று பத்திரிக்கை செய்திகள் சொல்லின. இந்தத் தடை உத்தரவின் விளைவாக அந்தப் பகுதியில் உள்ள பழங்குடியினரான
காணிக்காரர்களுக்கும் அந்த வட்டார பகுதி மக்களுக்கும் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 
காலங்காலமாக இந்த மலைப்பகுதியில் வாழ்ந்து வரும் காணிக்காரர்களின் வாழ்வாதாரம் பொதிகை மலையில் கிடைக்கும் தேனும் மலைவிவசாயத்தில் கிடைக்கும் பொருட்களும் தான். வேட்டை என்பதெல்லாம் அவ்ர்கள் அறியாத ஒன்று. இப்படி அந்த மலையையே நம்பி வாழ்ந்து வரும் இந்தக் காணிக்காரர்களை கடந்த பதினைந்து ஆண்டுகளாக பொதிகை மலையிலிருந்து கிழே இறக்க எல்லா அரசுகளும் முயன்று வருகின்றன. அவர்களுக்கு பல்வேறு நெருக்கடிகளை தொடர்ந்துக் கொடுத்து வருகின்றன. இவர்களை காப்பாற்றும் பொறுப்பும் கடமையும் உள்ள இந்த அரசுகள் இந்தப் பழங்குடி மக்களை அவர்களின் வாழ்விடத்திலிருந்து அப்புறப்படுத்துவதிலேயே குறியாய் இருக்கின்றன. இது தான் ஐயத்தை எழுப்புகிறது. காலங்காலமாக இந்தக்காட்டையும் மலையும் நம்பி வாழ்ந்து வருகிற இந்த மக்களை மலையை விட்டு கீழே இறக்குவதற்கு ஏன் இவர்கள் இவ்வளவு அக்கறை கொள்கிறார்கள்

                                                                       பொதிகைமலை
                 இன்றைக்கு இந்தியா முழுவது பழங்குடி மக்கள் தங்கள் வாழ்விடங்களான காடு மற்றும் மலைகளிலிருந்து அப்புறப்படுத்தப்படுவது என்பது வழக்கமாகி விட்டது. இதற்கு என்ன காரணம் என்று யோசித்தால் இந்த அடர்ந்த காடுகளிலும் உயர்ந்த மலைகளிலும் புதைந்து கிடக்கின்ற கனிம வளங்கள் தான் என்பது புரிய வருகிறது. செயற்கை கோள்களின் வழியே கனிம வளங்கள் புதைந்துக் கிடக்கின்ற பகுதிகளை அடையாளம் கண்டு கொண்ட பன்னாட்டு நிறுவனங்கள் அந்த வளங்களை கொள்ளையிட ஆட்சியாளர்களை துணை சேர்த்துக் கொண்டு திட்டமிடுகின்றன. நமது ஆட்சியாளர்களும் இந்தக் கொள்ளையில் கூட்டு சேர்ந்து கொண்டு கொள்ளைக்குத் தோதுவான சூழ்நிலையை உருவாக்கும் வகையில் சட்டங்களை இயற்றி பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பெரும் முதலாளிகளுக்கும் துணை போகின்றனர்.
இந்தக் கோணத்தில் தான் மேற்குத் தொடர்ச்சி மலையின் களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும் பார்க்க வேண்டியுள்ளது. சில வருடங்களுக்கு முன் களக்காடு மலை பகுதியில் வைரம் கிடைப்பதாகவும் சிலர் அதைத் தோண்டி எடுக்கும் முயற்சியில் ஈடுப்பட்டதாகவும் பத்திரிக்கைகளில் செய்திகள் வந்தன. வனத்துறையினரும் காவல் துறையினரும் அதைத் தடுத்து நிறுத்தினர் என்பது தொடர்ந்து வந்த செய்தி. மேலும் செயற்கைகோள் ஆய்வுகளின்படி இந்த மலை பகுதிகளில் ஏராளமான வைர வைடுரியங்கள் இருப்பதாகத் தெரிய வந்திருப்பதாகவும் செய்திகள் சொல்கின்றன. இதையெல்லாம் வைத்துப் பார்த்தால் நிலக்கரி சுரங்க ஊழல் போல் ஒரு வைரசுரங்க கொள்ளையை அரங்கேற்ற நடக்கும் முயற்சியோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது. பாபநாசம் வனப்பகுதியில் இந்த வட்டார மக்களுக்கான புனித கோவில்களும் தீர்த்தங்களும் நிறைய உண்டு.

                                                              பாணத்தீர்த்தம்

                        சொரிமுத்தையன்கோவில், வனபேச்சிஅம்மன் கோவில் போன்ற கோவில்களும் பாணத்தீர்த்தம் கல்யாணி தீர்த்தம் போன்ற தீர்த்தங்களும் அவற்றில் முக்கியமானவை. 'வாநாளை கொடுத்து பாணத்தீர்த்தமாடு' என்பது இந்தப் பகுதியில் உள்ள ஒரு சொலவடை. அதாவது அந்த காலத்தில் அடர்ந்த காடுகளையும் உயர்ந்த மலைகளையும் கடந்து பொதிகைமலையில் உள்ள பாணத்தீர்த்தத்தில் நீராடுவது என்பது மிகவும் கடினமான ஒன்று. வன விலங்குகளால் ஆபத்து ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். அப்படி உயிராபத்துகளையும் தாண்டி பாணத்தீர்த்த்தில் நீராட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது இந்த சொலவடை.
                              காட்டுப்பாதை

                  மகாகவி பாரதியாரின் மனைவி செல்லம்மாள் பாரதி இந்தப் பாணத்தீர்த்தத்தில் நீராட சென்ற அனுபவத்தை ஒரு கட்டுரையில் விரிவாக சொல்லியிருக்கிறார். அவர் பாணத்தீர்த்தத்தில் நீராட சென்ற அனுபவத்தை விவரிக்கும் காலத்தில் பாபநாசம் அணை கட்டப்படவில்லை. அந்தக் காலத்தில் பாபநாசத்திலிருந்து கால்நடையாகத் தான் பாணத்தீர்த்தம் செல்ல வேண்டும். அந்தக் காட்டுப்பாதை, வழியில் இருக்கும் ஊர்கள் என்று எல்லாவற்றையும் விரிவாக விவரிக்கிறார். அந்தக் காட்டுப்பாதைகளும் ஊர்களும் அணைக்கட்டப்பட்ட பின் நீரில் மூழ்கிப் போய்விட்டன.அந்த வகையில் செல்லம்மாள் பாரதியின் கட்டுரை சிறப்பிடம் பெறுகிறது. இவ்வளவு சிரமங்கள் இருந்தாலும் இந்த பகுதி மக்கள் தங்களின் பண்பாட்டின் அடிப்படையில் பாணத்தீர்த்தத்தில் நீராடுவதை முக்கிய கடமையாகக் கொண்டிருக்கின்றனர். மேலும் ஒட்டந்தளம் தாண்டி தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள சொரிமுத்தையன் கோவில் இந்தப் பகுதி மக்கள் வழிபடும் முக்கிய கோவிலாகும். இந்தக் கோவிலில் ஆடி அமாவாசை பங்குனி உத்தரம், சித்திரைவிசு போன்ற நாட்களில் வழிபாட்டுக்காக ஆயிரக்கண்க்கில் மக்கள் கூடுவர். அது போல் பொதிகை மலை உச்சியில் அமைந்துள்ள அகத்தியர் கோவிலுக்குப் போய் சித்திரை 1ஆம் நாள் அன்று இந்த வட்டார மக்கள் அகத்தியரை வழிபட்டு வருவது வழக்கம்.

                           அகத்தியர் வழிபாடு
                    கடந்த சில ஆண்டுகளாக இந்த வழிபாட்டிற்கு அரசு தடை விதித்து வருகிறது. இப்போது உச்சநீதி மன்ற தீர்ப்பை காட்டி பாபநாசம் செல்ல விரும்பும் பக்க்தர்கள், சுற்றுலாபயணிகள் என்று யாரையும் மலைப்பகுதிக்குள் செல்ல தடை விதித்துள்ளது அரசு. மேலும் காலங்காலமாக அந்த மலையில் வாழ்ந்து வருகிற காணிக்காரர்களையும் கீழே இறக்க முயற்சித்து வருகிறது. இந்த மலை பிராந்தியத்தில் தான் புகழ் பெற்ற மாஞ்சோலை எஸ்டேட் இருக்கிறது. இது 'தி பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேசன் லிமிடெட்' என்ற பன்னாட்டு நிறுவனத்திற்குச் சொந்தமானது.
                        பாபநாசம் மலைப்பகுதி முழுமையிலும் வாழும் காணிக்காரர்களை விட அதிகமான தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் இந்த டீ எஸ்டேட்டில் வேலை செய்து வருகிறார்கள். ஆனால் உச்சநீதி மன்ற தீர்ப்பு இந்த பன்னாட்டு நிறுவனத்தை எதுவும் செய்யவில்லை. ஆண்டாண்டு காலமாக இந்த மலை பகுதியில் வாழ்ந்துவரும் பாவப்பட்ட காணிக்காரர்களையும், தங்களின் பண்பாட்டுடன் தொடர்புடைய குலதெய்வ கோவில்களுக்கும் புண்ணிய தீர்த்தங்களுக்கும் செல்ல விரும்பும் மக்களையும் தான் உச்சநீதி மன்ற தீர்ப்புக் கட்டுப்படுத்துகிறது. பொதிகை மலையின் கனிம வளத்தை கொள்ளயிடத் துடிக்கும் பன்னாட்டு நிறுவனகளுக்குத் துணை போகத் தருணம் பார்த்துக் கொண்டிருக்கிற மத்திய மாநில அரசுகளுக்கு துணிவை தந்திருக்கிறது உச்ச நீதிமன்றத் தீர்ப்பு. சமவெளி குன்றுகளையும் சிறுமலைகளையும் கிரானைட், ஜல்லி என்று சுரண்டி முடித்தாகி விட்டது. இனி அடுத்து என்ன? இருக்கவே இருக்கிறது மேற்குத் தொடர்ச்சி மலை. அதுவும் வைரமலை. விடுவார்களா?
அந்த அகத்திய சாமிதான் பொதிகைமலையையும் மக்களையும் காப்பாற்ற வேண்டும்.