Friday, 28 September 2012             கர்ப்போட்டம்
                         என்ற
       கருவோட்டம்
ஏங்க நாளைக்கு கூழ்வத்தலுக்கு அரைக்க அரிசி நனையபோடட்டுமா?மனைவியின் இந்தக் கேள்வி முதலில் எனக்குப் புரியவில்லை.  
“அதை ஏன் எங்கிட்ட கேக்கிற, உன் வசதிபடி செய்யவேண்டியதுதானே   இதுநான்.
என்னை எந்த சீரியலும் பார்க்கவிடாமல் நாள் முழுக்கு நீங்கதானே நியூஸ் சேனலைப் பார்த்துகிட்டே இருக்கீங்க. உங்ககிட்ட தானே கேட்க முடியும்.
நான் நியூஸ் சேனல் பார்க்கிரதுக்கும் நீ கூழ்வத்தல் போடறதுக்கும் என்ன சம்பந்தம்னு எனக்குப் புரியலையே?
உங்களுக்கு என்னக்குதான் எது புரிஞ்சது? இது புரிய....
கொஞ்சம் புரியும்படி தான் சொல்லித் தொலையேன்....
இல்லங்க டி.வி. நியூஸ்ல வானிலை அறிக்கைப் படிப்பாங்கலே, அதுல நாளைக்கு மழை வரும்னு ஏதாவது சொன்னாங்களா? அதை தெரிஞ்சுகிட்டு நனைய போடலாமேன்னு தான் கேட்டேன்.
எனக்கு உடனே சிரிப்புதான் வந்தது.
“இருந்தாலும் உனக்கு டி.வி. வானிலை அறிவிப்பு மேலே ரெம்ப தான் நம்பிக்கை
சின்னத்திரை செய்திகளில் வானிலை மைய இயக்குநர் ரமணன் மழை நிலவரத்தை எப்போதும் போல் இறுகிய முகத்துடன் தந்து கொண்டிருக்கும் காட்சிகள் என் மனத் திரையில் ஓடியது.
அறிவியலும் தொழில் நுட்பமும் வளர்ந்திருக்கிற தற்காலத்தில் வானிலை நிலவரத்தை ஓரளவு துல்லியமாகக் கணித்துக் கூறமுடியும். வானிலை மையம் ஏற்படுத்தப்பட்டு 130 ஆண்டுகள் ஆகின்றன ஆனால் ஒரே ஒருமுறைகூட அந்த மையம் வறட்சியை முன் கூட்டி கணித்துக் கூறியது இல்லை என்ற குறையும் உண்டு. சரி அது ஒருபுறம் இருக்கட்டும்.
வானிலை ஆய்வு மையங்களெல்லாம் வருவதற்கு முன்னால் நம் முன்னோர் மழைய கணிக்க என்ன செய்தார்கள்? அதற்கென ஒருமுறை அந்தக் காலத்தில் இருந்திருக்கிறது. அந்த முறையில் கணித்துக் கூறும் தொழில் நுட்பவாதிகளை வள்ளுவர் என்று சொல்லுவது வழக்கம். வள்ளுவர்கள் மழையை கணிக்கும் இந்த முறைக்கு கர்போட்டம் அல்லது கருவோட்டமென்று பெயர் சொல்கிறார்கள். அதாவது மார்கழி மாதத்தில் கருக்கொள்ளும் மேகத்தின் தென்சார்பான ஓட்டம் என்பதாகக் கொள்ளலாம். நவீன அறிவியலாளர்களும் நில நடுக்கோட்டிற்கு வடக்கே 5 டிகிரியிலும் தெற்கே 5 டிகிரியிலும் ஏற்படுகிற சூழலே பருவக்காற்று தோன்றுவதற்கு காரணம் என்று கண்டறிந்துள்ளனர்.
திருநெல்வேலி, கன்னியாகுமரி பகுதிகளில் கர்ப்போட்ட முறையில் எதிர் வரும் ஆண்டில் ஒவ்வொரு மாதமும் மழையின் தன்மையை முன் கணிக்கும் வழக்கம் இன்று வரை நடைமுறையில் இருந்து வருகிறது. கர்ப்போட்ட முறையில் எதிர் வரும் 12 மாதங்களுக்கான (ஓர் ஆண்டு) மழை நிலவரத்தை முன் கூட்டியே கணித்து விட முடியுமாம்.
இதை விளக்கும் பழந்தமிழ் பாடல்: 
“தீயபூ ராடம் வெய்யோன் சேர்ந்திடு நாளில் வட்டம்                   தூயமந் தாரம் தோன்றில் சுடரவன் ஆதி ரைக்கே                  
பாயுநாள் தொட்டு முன்பின் ஒருநாட்கும் பதினாலாக              காயும்வேற் கண்ணாய் சொல்லும் கார்மழை கர்ப்பம் தானே
(சூடாமணி உள்ளமுடையன் என்ற நூலின் 258வது பாடல்) 

              மார்கழி மாதம் தனுர் ராசியில் சூரியன் நகரும் பதிநான்கு நாள்களில் காணப்படும் தட்பவெப்ப நிலையைப் பொருத்து எதிர் வரும் ஆண்டின் குறிப்பிட்ட மாதங்களில் மழைபொழிவு இருக்கும் என்பதே இப் பாடலின் கருத்து.
இந்த முன் கணிப்பு கிட்டத்தட்ட 70% சரியாக இருப்பதாக இந்த முறையில் இன்றும் முன்கணிப்பு செய்துவரும் நெல்லை குமரி பகுதி விவசாயிகள் சொல்லுகிறார்கள். 100% துல்லியம் இல்லாமல் போவதற்கு இன்றைக்கு சுற்றுச்சூழலில் ஏற்பட்டுள்ள பெரும் மாற்றங்கள் தான் காரணம் என்பது அவர்களின் கருத்து. கர்ப்போட்டம் அல்லது கருவோட்டம் என்றால் என்ன என்று விளங்கவில்லையே என்ற கேள்விக்கு வள்ளுவர்கள் சொல்லும் பதில்: சூரியனுடைய சுழற்சியை அடிப்படையாக்க் கொண்ட்து தான் கர்ப்போட்டம். பூமி சூரியனை சுற்றுவதால் சூரியன் தொடர்ந்து சுற்றிக் கொண்டிருப்பது போல் நமக்குத் தோன்றுகிறது. இவ்வாறு சுற்றும் போது ஒவ்வொரு ராசியைக் கடக்க அது 30 நாள்கள் எடுத்துக் கொள்கிறது.
சரி... இதற்கும் கர்ப்போட்டம் என்னும் மழை குறிப்புக்கும் என்ன தொடர்பு?
சூரியன் ஒவ்வொரு ராசியைக் கடக்கும் போதும் அதிலுள்ள நட்சத்திரங்களையும் கடந்து செல்கிறது. இதில் தனுர் ராசியை சூரியன் கடந்து செல்லும் போது அதிலுள்ள பூராடம் நட்சத்திரத்தைக் கடப்பதற்கு 14 நாள்களை எடுத்துக் கொள்கிறது. இது மார்கழி மாதத்தில் நடைபெறுகிறது. இந்த நாள்களில் அதாவது டிசம்பர் 28 முதல் ஜனவரி 11வரை (ஏறக்குறைய) உள்ள நாள்களில் காணப்படுகிற தட்பவெப்ப நிலையை அடிப்படையாக வைத்து அடுத்த ஓராண்டிற்கான மழை கணிக்கப்படுகிறது. இதற்குத் தான் கர்ப்போட்டம் என்று பெயர்.
இந்தப் பதிநான்கு நாள்களிலும் வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தால், லேசான தூறல் இருந்தால், மேகங்கள் வானில் திரிந்தால், வானம் மேகமூட்டமாக இருந்தால் எதிர்வரும் மாதங்களில் நல்ல மழை இருக்கும். கருவோட்ட நாள்களில் நல்ல வெயில் அடித்தால், கனமழை பெய்தால், வானத்தில் வெள்ளை மேகங்கள் திரிந்தால், வானம் வெட்ட வெளியாய் இருந்தால் எதிர்வரும் நாள்களில் மழை பொய்த்துப் போகும் எனபது தான் கருவோட்டப் பலன். இது தான் கருவோட்டம் மூலம் மழை முன்கணிப்பு செய்யும் முறை. குறிப்பிட்ட எதிர்வரும் மாதங்களில் மேகம் சூல் கொள்ளுமா கரு கலையுமா என்று சொல்லக் கூடிய இந்த நமது பாரம்பரிய வானியல் அறிவை நவீன அறிவியலோடு பொருத்தி மேம்படுத்தும் முயற்சியை நாம் மேற்கொள்ளலாமே.