Monday, 30 September 2013 பால் கஞ்சி


உயிர் வாழ்தலுக்கு அத்தியாவசிய்மானவற்றில் உணவுக்கு முக்கிய இடமுண்டு. வாழ்தல் என்பது உடல்நலத்துடன் வாழ்வது என்பதான புரிதல் ஆகும். அதற்கு ஆரோக்கிய உணவை தேர்ந்தெடுத்தல் அவசியம்.  நாம் உண்ணும் அனைத்திலும் ஏதேனும் ஒன்று அல்லது பல சத்துக்கள் மலிந்துள்ளன. நம் உடல்நிலைக்கு ஏற்ப, நமக்குத் தேவையான சத்துள்ள உணவுகளை போதுமான அளவிற்கு உண்பதுதான் ஆரோக்கிய உணவு என்பதாகும். நமது உடல் நலத்தை பேணும் விதத்தில் உண்ணும் முறைகள் சிலவற்றை பெரியவர்கள் சொல்லி வைத்திருக்கின்றனர். அளவோடு உண்ணுதல், நேரத்தில் உண்ணுதல் போன்றன அவற்றில் சில. அதுபோல் பால் கஞ்சினை அவ்வப்போது குடிப்பதும் ஒரு முறை. இநத பால்கஞ்சி உடல் நலத்திற்கு பெரிதும் துணை செய்கிறது. குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் கருவுற்ற 5 மற்றும் 7 ஆம் மாதங்களில் பால் கஞ்சி குடிப்பது என்பது கர்ப்பிணி பெண் மற்றும் கருவில் வளரும் சிசுவின் உடல் ஆரோக்கியத்திற்கும் சிக்கலற்ற சுக பிரசவத்திற்கும் பெரிது உதவுகிறது என்றும் சொல்லப்படுகிறது. கருவுற்ற பெண்ணுக்கு பால் கஞ்சி கொடுப்ப்ப்பது ‘கஞ்சி வைத்துக் கொடுத்தல் என்ற பெயரில் ஒரு சடங்காகவே நட்த்தும் பழக்கம் சில பகுதியில் இன்றும் இருந்து வருகிறது. அந்த வகையில் பால் கஞ்சி என்பதை தமிழர் பண்பாட்டோடு கலந்து விட்ட ஒன்று என்று கூட சொல்ல்லாம்.
பால்கஞ்சி வைக்கும் முறை:
ஒரு மடங்கு புழுங்கல் அரிசிக்கு இரு மடங்கு பாலை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் கொஞ்சம் சுக்கு, கொஞ்சம் சாரணவேர், 10 பூண்டுபல், ஒரு கைபிடி அளவு முருங்கை பூ, இரண்டு மூன்று அச்சுவெல்லக் கட்டி போன்றனவும் தேவை. பாலில் அரிசியை நன்றாக குழைய வேக விட வேண்டும். கூடவே பூண்டு பற்களையும் வேக விட வேண்டும்.
சுக்கையும் சாரணவேரையும் தண்ணீர் விட்டு மையாக அரைத்து கஞ்சி பாதி வெந்து கொண்டிருக்கும் போது அதில் ஊற்றி நன்றாக கலக்கி விட வேண்டும். எடுத்து வைத்திருக்கும் கைபிடி அளவு முருங்கை பூவையும் கஞ்சியில் போடவும். அரிசி நன்றாக குழைந்து வெந்த பின் இறக்கவும். கர்ப்பிணி பெண் பால்கஞ்சி குடிக்கும் அன்று காலையில் எண்ணெய் தேய்த்து குளித்து விட்டு தான் கஞ்சி குடிக்க வேண்டும். கஞ்சி குடிக்கும் போது சுவைக்குஅச்சு வெல்லத்தைக் கடித்து கொள்ளலாம். கஞ்சி குடித்த பின் இரண்டு மணி நேரத்திற்கு தண்ணீர் குடிக்க்க் கூடாது. பின் புளியில்லா கறி வைத்து மதிய சாப்பாடு சாப்பிட வேண்டும்  என்பது சொல்லப்பட்டிருக்கிற நடை முறை. ஆரோக்கியமான வாழ்வுக்கு இப்படி எத்தனை வழிமுறைகளை சொல்லி வைத்திருக்கின்றனர் நமது பெரியவர்கள். இந்த எளீய, சிறந்த வழி முறைகளை உதாசீனபடுத்துகிற மன நிலையில் தான் இன்று நம்மில் பெரும்பாலோர் இருக்கிறோம்.

Sunday, 22 September 2013பா

பாசன அமைப்புகளின் 
                  பரிதாப நிலை....

உழுதுண்டு வாழ்வதற்கொப்பில்லை கண்டீர் பழுதுண்டு வேறோர் பணிக்குஎன்கிற அடிப்படை உணர்வில் மகிழ்பவர் தமிழ் மக்கள். இவர்கள் தான் நீர்பாசனம் என்பதன் மூலவரும் கூட. கடந்த 3000 ஆண்டுகளாகத் தொடர்ந்து தமிழ்நாட்டில் பாசனப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் வெளிப்பாடு தான் தமிழ்நாட்டில் காணப்படுகிற ஏரி, குளம், கண்மாய், ஊரணி உள்ளிட்ட நீர் ஆதார அமைப்புக்கள். தமிழகம் மழை மறைவு பிரதேசத்தில் இருப்பதால் தொடர்ச்சியான மழை இருப்பதில்லை. மேலும் .  தமிழகத்தின் புவி மேல் பரப்பு 73 சதவீதத்துக்கும் அதிகமான நிலபரப்பு பாறைகளை கொண்டதாகும். எனவே, நிலத்தடி நீர் சேமிப்பு என்பது நமக்கு சவாலான விஷயம். இருந்தாலும் பெய்யும்போது மழைநீரை தேக்கி ஆண்டு முழுவதும் பயிர் செய்வது இன்றியமையாதது ஆகிவிட்ட்தால் பாசனப் புலமையில் இயற்கையாகவே தமிழர்கள் சிறந்து விளங்கினர். தமிழ் நாட்டில் 40 ஆண்டுகளுக்கு முன் 39000 ஏரிகள், குளங்கள் இருந்தன என்பதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. தமிழ்நாட்டின் பல ஏரிகள் அரிய வரலாற்றுச் சிறப்புக் கொண்டவை. ஏரிகளில் மன்னர்கள் அமைத்த மதகுகளில் செய்திகளை எழுதி வைத்துள்ளனர். இதனால் அது கட்டப்பட்ட ஆண்டினைத் துல்லியமாக அறிய முடிகிறது. ஈரெட்டிமலை ஏரி, ஆமந்தூர் ஏரி, குணமிலி ஏரி, நல்லி ஏரி, ஓங்கூர் ஏரி, வீராணாம் ஏரி போன்றன சில பழமையான வரலாற்று சிறப்புமிக்க ஏரிகளாகும். இந்த ஏரிகளை பராமரிக்க ஏரிவாரியம் என்ற அமைப்பு இருந்ததை உத்திரமேரூர் கல்வெட்டு மூலம் நாம் அறிய முடிகிறது. ஏரிகள் அமைப்பதில் சில தொழில் நுட்பங்களை நமது முன்னோர்கள் கையாண்டு வந்திருக்கின்றனர். ஏரியின் அமைப்பு எட்டாம் பிறை வடிவில் அமைந்திருக்கும். கோடி அல்லது கலிங்கல் என்கிற மறுகால் பாறையின் மீது அமைக்கப்பட்டன. தண்ணீரை விசைகுறைத்துக் கீழே இறக்க பாறைகள் உதவின. செங்கல் கட்டுமானத்தில் கருங்கல் போர்த்துக்கல் ஆணி செருகும் வகையில் பல அணைகட்டுகளும் கலிங்கல்களும் காணப்படுகின்றன. பெரிய கற்களை அடுக்கி இடையில் சுண்ணாம்பு-செங்கல் சல்லி போட்டு நிரப்பும் வகையில் சில உள்ளன. இந்த செங்கல் சுண்ணாம்பு கட்டுமானகளில் பல, பாறை போலக் கட்டியாக இருக்கின்றன. மடை, மதகு, தூம்பு, குமுழி, நாழிகைவாய் என்று அழைக்கப்படுகிற நீர்வழி மிகவும் கெட்டியாக அமைக்கப்பட்டன. இப்படி வரலாற்று சிறப்புமிக்க தமிழ்நாட்டுக் குளங்களின் கட்டமைப்பில் ஏற்பட்டு வரும் சீர்குலைவு, ரியல் எஸ்டேட் புரோக்கர்களின் ஆதிக்கம் உள்ளிட்ட காரணங்களால் 45 சதவீதம் குளங்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் ஏற்பட்டு வரும் ஆக்ரமிப்புகள் மற்றும் நிலப்பயன்பாட்டு முறை, குளங்களின் கட்டுமான அம்சங்கள்,  நீர் பிடி பகுதியின் வனப்பரப்பு போன்றவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், நீர் பயன்பாட்டு முறையில் உண்டான மாற்றங்கள்,  மற்றும் நகர்மயமாதல் உள்ளிட்டவற்றால் குளங்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறன. கடந்த 2008 ம் ஆண்டு கணக்கெடுப்புப்படி தமிழகத்தில்  32202 குளங்கள் இருந்தன. தமிழ்நாடு சுற்று சூழல் கழகம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் இதில், 30 சதவீதம் குளங்கள் நீரை தாங்கி நிற்கும் தன்மையை இழந்துவிட்டது தெரிய வந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் மேலும் 15 சதவீதம் குளங்கள் நீரை தாங்கி நிற்கும் தன்மையை இழந்ததோடு இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டன. தமிழகத்தில் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் குப்பைகளை கொட்டும் திடக்கழிவு மேலாண்மை திட்டம், நீர் நிலை ஆதாரம் உள்ள பகுதிகளிலேயே செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, குளம், கண்மாய் உள்ளிட்ட நீர் நிலை ஆதாரங்கள் மறைந்து வருகின்றன. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் 45 சதவீதம் குளங்கள் தமிழகத்தில் மறைந்துவிட்டது தெரிய வந்துள்ளது. இதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் குளங்கள் அனைத்தும் காணாமல்போய்விடும் அபாய்ம் இருக்கிறது. ஏரி, குளங்களின் மறைவு நிலத்தடி நீர் மட்ட்த்தின் அளவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. நிலைமையின் தீவிரத்தை மனதில் கொண்டு அரசுகள் வேண்டிய நடவடிக்கைகள் எடுக்குமா?