Sunday, 27 October 2013


 ஓய்ந்து கொண்டிருக்கும்
உளியின் சத்தம்
படைத்தலுக்கு என ஒரு தெய்வத்தை படைத்திருக்கிறது மனிதனின் இறைநம்பிக்கை. ஆனால் படைத்தல் என்பதை பல லட்சம் ஆண்டுகளாக செய்து கொண்டிருக்கிறான் மனிதன். இழைத்து, வார்த்து, வளைத்து உடைத்து, தட்டி, சுட்டு என பல்வேறு வழிகளில் தனக்குத் தேவையான பொருட்களை படைத்துக் கொண்டிருக்கிறான் மனிதன். கல்லை கல்லால் செதுக்கி கல் ஆயுதம் கண்டான். இரும்பை கண்டடைந்த பின் கல்லை உளியால் செதுக்கி  கலை ஆக்கினான். இவனது உளியின் ஓசையில் உயிர் பெற்ற சிலைகள் ஆயிரம் ஆயிரம். 

அவை தமிழரின் கலை செழுமைக்கு காலம் காலமாக மௌன சாட்சிகளாக நின்று கொண்டிருக்கின்றன. 

தந்தையின் உளி சத்தத்தை பின் தொடர்ந்து சிலை வடித்த மகனின் கதையை சொல்லிக் கொண்டிருக்கிறது கழுகுமலை வெட்டுவான் கோயில். 


இப்படி உயிர் சிற்பங்களை உருவாக்கிக் கொண்டிருந்த உளியின் சத்தம் இன்று அடங்கி போனது காலத்தின் கோலம் தான். எந்திரங்களின் செயல்பாட்டு வளர்ச்சி அது செயல்படும் தளத்தை விரித்திருக்கிறது. அதன் விளைவு சிலை வடிவப்பதில் உளியினை ஒரங்கட்டிவிட்டு அந்த இடத்தை எந்திரங்கள் ஆக்கிரமித்து கொண்டன. உடலுழைப்பை எந்திரங்கள் எளிமையாக்கியிருந்தாலும் உளியின் நேர்த்தியும் கைவண்ணமும் காணாமல் போயிருப்பது என்னவோ நிஜமே. எந்திரத்தனம் எப்போதும் சலிப்பை உண்டாக்கும் தானே.

Friday, 25 October 2013

 ரசமட்டம்

 ஒரு பரப்பின் சமதளத்தை கண்டுபிடிக்க பயன்டும் கருவியே ரசமட்டம் ஆகும். தச்சாசாரி, கொத்தனார், தளக்கல் பாவுபவர் போன்றவர்களால் நமது மரபில் இக்கருவி பயன்படுத்தப்பட்டு வந்தது. எட்டு அங்குல நீளமும், ¾ அங்குல அகலமும், ½ அங்குல உயரமும் கொண்ட ஒரு செதுக்கப்பட்ட மரத்துண்டில் குடைந்த பகுதியில் கிட்டத்தட்ட இரண்டு அங்குல் நீளம் கொண்ட கண்ணாடி குழல் ஒன்று பதிக்கப்பட்டு அந்தக் கண்ணாடி குழல் கண்ணுக்கு தெரியும் விதத்தில் வடிவமைக்கப்பட்ட மெல்லிய பித்தளை தகட்டை பிரி ஆணி கொண்டு முறுக்கி மூடப்பட்டிருக்கும். அந்தக் கண்ணாடி குழலுக்குள் பாசி பிடிக்காமல் இருக்கும் விதத்தில் சுத்தப்படுத்தி பதப்படுத்தப்பட்ட தண்ணிர் குமிழ் ஒன்று குழலுக்குள் அங்குமிங்கும் ஓடும் விதத்தில் அடைக்கப்பட்டிருக்கும். ரசமட்டத்தில் மையம் குறிக்கப்பட்டிருக்கும். இந்த மையபுள்ளியில் கண்ணாடி குழலுக்குள் இருக்கும் நீர்குமிழ் பொருந்தும் நிலையைக் கொண்டு பரப்பின் சமதளத்தை கணக்கிடுவர். இந்த ரசமட்டம் தான் நமது மரபுவழியில் இருந்து வந்த சமதளத்தைக் கணக்கிடும் கருவியாகும். இன்றைய நாளில் சாராயம் (alcohol) அடைக்கப்பட்ட அலுமனியத்தினாலான நவீன கருவியை பயன்படுத்துகின்றனர். இதனை ஆங்கிலத்தில் spirit level என்பர். ரசமட்டத்தில் கிடைத்தத் துல்லியம் இந்த நவீன கருவியில் கிடைப்பத்தில்லை என்பது அனுபவம் வாய்ந்த ஆசாரிகள் மற்றும் கொத்தனார்களின் கருத்தாக இருக்கிறது.
Friday, 18 October 2013


வாழைப்பூ விளக்கு
இருளை விரட்ட மனிதனால் உருவாக்கப்பட்ட சாதனமே விளக்கு. இருளில் உள்ள பொருள்களை தனது ஒளிவிடும் சுடரினால் விளங்கும்படி செய்வதனால் அது விளக்கு என்று ஆயிற்று. அகல் விளக்கு, தொங்கு விளக்கு,
காமட்சி விளக்கு, குத்து விளக்கு என வகைகள் பல இருப்பினும் தமிழ் மரபில் குத்து விளக்குக்குத் தனி இடமுண்டு. இவ்விளக்கு சமய சடங்குகள், வாழ்க்கைவட்ட சடங்குகள் மற்றும் பொது விழாக்களில் இடம் பெறுவது சம்பிரதாயம். இது போன்ற நிகழ்வுகள் எல்லாம் குத்து விளக்கு ஏற்றப்பட்டு தொடங்குவது என்பது மரபு. பொதுவாக குத்து விளக்குத் தயாரிப்பில் பயன்படும் மரபுவழியான உலோகம் பித்தளையே ஆகும். வெள்ளி போன்ற மதிப்புமிக்க உலோகங்களிலும் இவ்விளக்குகள் உருவாக்கப்படுவது உண்டு. எவர்சில்வர் என்கிற ஸ்டென்லெஸ் ஸ்டீல் பயன்பாட்டிற்கு வந்த பின் அதிலும் விளக்குகள் தயாரிக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. பெரும்பாலும் சிறிய விளக்குகளே இதனால் செய்யப்படுகின்றன. இத்தகைய விளக்குகள் விலை குறைவாக இருந்தாலும் தோற்றத்தில் பித்தளை விளக்குகளுக்கு இணையாகாது. மேலும் இந்த உலோகத்தில் இரும்பு கலப்பு இருப்பதால் பொதுவாக மரபுவழியில் அது ஏற்கப்படுவதில்லை.
குத்துவிளக்குகள் வாழைப்பூ விளக்கு, காய் விளக்கு, கம்பி விளக்கு, லட்சுமி விளக்கு, தூண்டாமணி விளக்கு என பலவகைளில் தயாரிக்கப்படுகின்றன. நாச்சியார்கோயில், கும்பகோணம் சுவாமிமலை, வாகைக்குளம் போன்ற ஊர்களில் தயாரிக்கப்படும் குத்துவிளக்குகள் பிரசித்திப் பெற்றவையாகும். வாழைப்பூ விளக்கு தயாரிப்பில் நாகர்கோயில் கோட்டாறு பெயர் பெற்றதாகும். பொதுவாக வாழைப்பூ விளக்கு என்பது மலையாள மரபு என்கிற கருத்து உண்டு. இருந்தாலும் நெல்லை, குமரி மாவட்டங்களின் சில பகுதிகளில் வாழைப்பூ விளக்கு பயன்படுத்தும் வழக்கம் இன்றும் இருந்து வருகிறது. இந்த விளக்குகள் கோட்டாறு பகுதியில் தயாரிக்கப்படுகின்றன. மலையாள மரபில் பயன்படுத்தப்படுகிற வாழைப்பூ விளக்கிற்கும் இதற்கும் வடிவில் வேறுபாடு உண்டு. வாழைப்பூ போன்ற தலைப் பகுதி தண்டுடன் பொருந்தும் இடத்தைச் சுற்றிய பகுதி குழிவாக அமைக்கப்பட்டிருக்கும். இதுவே இவ்விளக்கின் எண்ணெய் தாங்கியாகும். மலையாள மரபு வகை விளக்கில் இந்த எண்ணெய் தாங்கியில் திரி போடுவதற்கு என்று மூக்கு என்கிற தனி பகுதி கிடையாது. எண்ணெய் தாங்கியின் எந்த பகுதியிலும் எத்தனை திரிகள் வேண்டுமானலும் போட்டுக் கொள்ளலாம். ஆனால் நெல்லை பகுதியில் பயன்படுத்தப்படும் வாழைப்பூ விளக்கில் திரி போடுவதற்கென தனியாக மூக்கு என்ற அமைப்பு உண்டு.


பொதுவாக குத்துவிளக்குகளில் ஒற்றை மூக்கு, நாலு மூக்கு, ஐந்து மூக்கு என்று பல வகைகள் உண்டு. நெல்லைப்பகுதியில் பயன்படுத்தப்படும் வாழைப்பூ விளக்கு ஒற்றை மூக்கு கொண்டதாகவே இருக்கும். பொதுவில் வீடுகளில் ஒரு மூக்கு விளக்கினையே பயன்படுத்துவது மரபு. ஒன்றுக்கு மேற்பட்டு திரி போடும் வசதியுள்ள விளக்குகளை கோயில்களில் பயன்படுத்துவதே பெரு வழக்காக இருக்கிறது. குத்து விளக்கு தெய்வீகமானது, தெய்வ அம்சம் பொருந்தியது, மங்களத்தைக் குறிக்கும் தத்துவம் என்பதான கருத்துகளும் தமிழர் மரபில் உண்டு. விளக்கின் அடிப்பாகம் பிரம்ம அம்சம் என்றும், நீண்ட நடுப்பகுதி மகாவிஷ்ணு அம்சம், மேற்பகுதி சிவ அம்சம் எனவும் விளக்கப்படுகிறது. விளக்கில் ஊற்றும் நெய் – நாதம், திரி – பிந்து, சுடர் – அலை மகள், சுடர் – கலை மகள், தீ - மலை மகள் என்பதாக விளக்கப்படுவதுடன் இவை அனைத்தும் சேர்ந்ததே குத்து விளக்கு என்பதாகும் என்று கொள்ளப்படுகிறது. குத்துவிளக்கை நன்கு துலக்கி, குங்குமமிட்டு, பூ போட்டு அலங்காரம் செய்யவது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் வழக்கம். விளக்கு ஏற்றுவதில் உள்ள வேறுபாடுகளும், குத்து விளக்கு ஏற்றுவதனால் ஏற்படும் பலன்கள் என்னென்ன என்பது பற்றிய விளக்களையும் முன்னோர்கள் சொல்லி வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. எந்த திக்கு நோக்கி விளக்கின் திரி இருக்க வேண்டும் அதன் பலன் என்ன என்பது பற்றியும் விளக்கம் உண்டு. குத்து விளக்கின் தீபம் கிழக்கு முகமாக ஏற்றினால் துன்பங்கள் நீங்கி வசீகரம் உண்டாகும். மேற்கு முகமாக தீபம் ஏற்றினால் கிரக தோஷம் பங்காளி பகை உண்டாகும். வடக்கு முகமாக தீபம் ஏற்றினால் கல்வி மற்றும் சுப காரியங்களில் ஏற்படும் தடைகள் நீங்கும்; திரண்ட செல்வம் உண்டு. தெற்கு முகமாக விளக்கு ஏற்றினால் அப சகுனம்; பெரும் பாவம் உண்டாகும். அது போல் எத்தனை முகம் அல்லது திரி ஏற்ற வேண்டும்என்பது பற்றியும் அதனால் உண்டாகும் பலன்களும் சொல்லப்பட்டிருக்கிறன. குத்து விளக்கில் ஒரு முகம் ஏற்றினால் மத்திம பலன். இரு முகம் ஏற்றினால் குடும்ப ஒற்றுமை. மும்முகம் ஏற்றினால் புத்திர சுகம், கல்வி கேள்விகளில் விருத்தி. நான்கு முகம் ஏற்றினால் சர்வ பீடை நிவர்த்தி, ஐஸ்வர்ய லக்ஷ்மி கடாட்சம் ஆகியவை பெருகும். தாமரைத் தண்டில் திரி போட்டால் மூன்று ஜென்ம பாவங்கள் போகும். வாழைத் தண்டு நூலில் திரி போட்டால் குல தெய்வ
குற்றமும், சாபமும் போகும். புது மஞ்சள் சேலைத் துண்டில் திரி போட தாம்பத்ய தகராறு நீங்கும். புது வெள்ளை வஸ்திரத்தில் பன்னீரை விட்டு உலர விட்டு போட்டால் வீட்டில் லக்ஷ்மி கடாட்சம் வரும். நெய் விளக்கு ஏற்றினால் லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும். இலுப்பை எண்ணெய் கொண்டு விளக்கு ஏற்றினால் பூஜிப்பவருக்கும், பூஜிக்கப்படும் இடத்திற்கும் விருத்தி. விளக்கு எண்ணெய் கொண்டு விளக்கு ஏற்றினால் துன்பங்கள் விலகும். நல்லெண்ணெய் கொண்டு விளக்கு ஏற்றினால் மிகுந்த பலன் இல்லை, மத்திம பலனே. கடலை எண்ணையோ இதர தரம் குறைந்த சமையல் எண்ணைகளையோ விளக்கில் உபயோகிப்பது மூதேவி ஆராதனையாகக் கருதப்படுவதால், அவற்றை நீக்குவது நன்மை தரும். இவ்வாறெல்லாம் விளக்குப் பற்றிய நம்பிக்கைகள் மக்களிடையே இருந்து வருகின்றன. 


                                                                  

Monday, 14 October 2013

 மைகூடும் 
                இறகு தூவலும்


மனிதனை பேசத் தெரிந்த மிருகம் என்று சொல்வது உண்டு. பேச்சு என்பது வாயின் மூலம் சத்தம் எழுப்புவது ஆகும். மனிதர்கள் இப்படி ஒலி எழுப்பி அதாவது சத்தத்தை உண்டாக்கி ஒருவருக்கொருவர் தகவல்களை, கருத்துக்களை பரிமாறி கொள்கின்றனர். இந்த ஒலி எழுப்புதல் சில இலக்கண விதிகளுக்கு உட்பட்டு வரைமுறை படுத்தும் போது அது மொழியாக பரிணமிக்கிறது. இன்று உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கில் மொழிகள் புழக்கத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த மொழி என்பது நிலப்பரப்பு, இனம், குழு, என்ற பல்வேறு விதங்களில் மாறுபட்டு தனிதனி மொழியாக உருபெற்றதாகவும் சொல்கிறார்கள். ஒரு கட்டத்தில் இந்த பேச்சு மொழி எழுத்து மொழியாக பரிணாமம் பெறும் பொழுது எழுத்து என்கிற குறியீடுகள் உருவாயின. எழுத்து, மொழிக்கு மொழி வேறுபடும். எழுத்து கல், மண், செப்பு, ஓலை, புல், தாள் என்று பலவகை ஊடகங்களில் எழுதப்பட்டது. காகிதம் என்கிற தாளில் மையை தொட்டு எழுதும் முறை நடைமுறையில் இருந்து வருகிறது. இன்று நாம் தாளில் எழுதுவதற்கு எளிதாக கையாளும் விதத்தில் இருக்கிற வகை வகையான பேனாக்களை பயன்படுத்துகிறோம். ஆனால் சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை மாணவர்கள் இந்த பேனாவோடு மல்லாடி வந்தது பெரிய சோகக்கதை. அன்றைய மாணவர்கள் எழுதும் பேனாவோடும் மைக்கூடோடும் ஒரு கடின வாழ்க்கை வாழ்ந்தனர் என்றே சொல்லலாம். அந்தக் காலத்தில் எழுதுவதற்கு இறகு பேனா என்கிற நிப் பேனாவை தான்  பயன்படுத்தி வந்தனர். பாதி தடிமனாகவும் பாதி ஒல்லியாகவும் இருக்கும் ஒரு சாண் நீளம் கொண்ட உருண்டை மரக்கட்டையில் நிப்பை செறுக வேண்டும். நிப்பை செறுகுவதற்கு தோதுவாக பேனா கட்டையின் பருத்த முனையில் இருக்கும் உலோக ஸ்பிரிங் அமைப்பைக் கொண்ட குடைவான உட்பகுதியில் நிப்பை அழுத்தி செறுகினால் இறுகப் பிடித்துக் கொள்ளும். மை கூடில் இருக்கும்  மையில் பேனாகட்டை நிப்பை தோய்த்துத் தோய்த்து தான் எழுதவேண்டும். இந்த மையை மாணவர்களளே தயாரித்து கொள்வார்கள். காலணாவுக்கு மைபொடி பொட்டலம் பெட்டிக் கடையில் கிடைக்கும். இதை வாங்கி மைகூடில் கொட்டி தேவையான அளவு தண்ணீரை சேர்த்து கலக்கினால் எழுதுவதற்கான மை தயார். நிப்பை மையில் தொட்டு தொடர்ந்து எழுத முடியாது. ஒருமுறை தொட்டு எழுதினால் ஐந்து ஆறு எழுத்துகள் தான் எழுத முடியும். இந்த நிலை மாணவர்களுக்கு கொஞ்சம் சிரமமான ஒன்றாகவே இருந்தது. மேலும்

மைக்கூடு என்பது கண்ணாடி அல்லது பீங்கானால் செய்யப்பட்டிருக்கும். கவனகுறைவால் தவறி கிழே விழுந்தால் நொறுங்கி உடைந்து மையெல்லாம் கொட்டிப்போகும் சாத்தியமும் அதிகம்.  இருந்தது கூடுதல் கஸ்டம். எனவே எப்போதும் மைக்கூடை கவனமாக வைத்திருக்க வேண்டிய நிலை இருந்தது.  வகுப்பறையில் மைகூடை சாய்வுமேசை (desk) மீது தான் வைக்க வேண்டும். அதை ஒரு கையால் பிடித்துக் கொண்டே இருக்க வேண்டும். விட்டால் மேசை அசையும்போது அது தரையில் விழுந்து உடைய வாய்ப்பு உண்டு. (நான் படித்த திருநெல்வேலி இந்து கல்லூரி பள்ளியில் அசம்பாவிதத்தை தவிர்க்க ஒர் உபாயம் கையாளப்பட்டு வந்தது. சாய்வுமேசையின் சமதள பட்டியில் மைகூடு வைப்பதற்கென்று வட்டவடிவில் ஒரு குழியும் பேனாகட்டை வைப்பதற்கென்று ஒரு சாண் நீளத்தில் ஒரு பள்ளமும் தோண்டப்பட்டிருக்கும் அவற்றில் மைகூடையும் பேனாவையும் பாதுகாப்பாய் வைத்துக்கொள்ள முடியும். அறிவியல் வளர்ச்சியின் விளைவாய் அன்றிருந்த இந்த சிரமங்கள் ஏதும் இன்றி சொகுசாய் பலவகை பேனாக்களை இன்று பயன்படுத்தி வரும் நமக்கு மைகூடோடு அல்லாடிய அன்றைய மாணவர்களை நினைத்தால் கொஞ்சம் அனுதாபம் ஏற்பட தானே செய்கிறது.


Tuesday, 8 October 2013

கம்மாலை 
என்னும்
கமலை
 வே வேட்டைச்சமூகத்திலிருந்து வேளாண் சமுதாயமாக மாறியது மனித நாகரிகத்தின் பரிணாம வளர்ச்சியில் ஒரு மைல்கல்லாக கொள்ளப்படுகிறது என்கின்றனர் மானுடவியளாலர்கள். வேளாண்மைக்கு அடிப்படை நீர்பாசனம். தொடக்க காலங்களில் நீர்ப்பாசனத்திற்கு ஆறு, பொய்கை போன்ற இயற்கை நீர்நிலைகளையே சார்ந்திருந்த நிலையே இருந்தது. . பின்னர் பாசன முறைகளைப் பல வகையாக மாற்றிக் கொண்டனர். இயற்கை நீர் நிலைகள் இல்லாத இடங்களிலும் பாசன வசதிக்காக ஏரி, குளம், குட்டை, கண்மாய், பள்ளம், கிணறு போன்றவற்றால். பாசனத்திற்குரிய சூழலை உருவாக்கிக் கொண்டனர். இந்த இருவகையான நீர் ஆதாரங்களும் வான்மழையை நம்பியே இருக்கின்றன. சீரான மழை பொழிவிற்கு காடுகளின் பங்கு குறித்த அறிவு நம் முன்னோருக்கு தெளிவாய் இருந்ததன் காரணமாக காடுகளை உருவாக்குவதிலும் பேணுவதிலும் அதிகம் அக்கறை கொண்டிருந்தனர். இதனால் நிலப்பரப்பில் முக்காற் பங்கிற்கு மேலும் மரங்களடர்ந்த காடாயிருந்தமையால் கோடைமழை, காலமழை, அடைமழை, படைமழை ஆகிய நால்வகை மழையும் பொய்க்காமல் பெய்து வந்தன. வம்ப மழை என்கிற அகால மழையும் அவ்வப்போது பெய்தது. இவ்வாறான நிலையினால் நீராதரங்கள் செழுமையாய் இருந்தன. வரத்துநீர் இல்லாத இடங்களில் நிலத்தடியில் நீர் சுரக்குமிடங்களை கண்டறிந்து கிணறுகளை வெட்டிக்கொண்டனர். நிலத்தடி நீரை கண்டறிவது பற்றிய அறிவை -ஞானத்தை- கூவநூல் என்கிற பழந்தமிழ் நூல் பதிவு செய்திருக்கிறது. 

 கிணற்று நீரை வயலுக்கு இறைக்க கம்மாலை போன்ற பொறிகளை கண்டடைந்தனர். அம் என்றால் நீர் என்றொரு பொருள் உண்டு. அம்-கம்=நீர். ஆலுதல்=ஆடுதல், சுற்றுதல். ஆல்-ஆலை=சுற்றிவரும் பொறி. செக்காலை, கரும்பாலை என்றாவது போல் சுற்றி சுழன்று நீர் இறைக்கும் பொறி கம்மாலை ஆனது. இந்தக் கம்மாலை-கமலை-கவலை என்றவாறு திரிந்து இன்று வழக்கில் உள்ளது. மாடுகள் பூட்டி இந்தக் கம்மாலை பொறி இயக்கப்பட்ட்து. அறிவியல் வளர்ச்சியில் இன்று பல வகையான் நீரேற்றிகள் புழக்கத்தில் வந்து விட்டதால் கம்மாலை என்கிற கமலை வழக்கொழிந்து கொண்டிருக்கிறது.