Monday, 14 October 2013

 மைகூடும் 
                இறகு தூவலும்


மனிதனை பேசத் தெரிந்த மிருகம் என்று சொல்வது உண்டு. பேச்சு என்பது வாயின் மூலம் சத்தம் எழுப்புவது ஆகும். மனிதர்கள் இப்படி ஒலி எழுப்பி அதாவது சத்தத்தை உண்டாக்கி ஒருவருக்கொருவர் தகவல்களை, கருத்துக்களை பரிமாறி கொள்கின்றனர். இந்த ஒலி எழுப்புதல் சில இலக்கண விதிகளுக்கு உட்பட்டு வரைமுறை படுத்தும் போது அது மொழியாக பரிணமிக்கிறது. இன்று உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கில் மொழிகள் புழக்கத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த மொழி என்பது நிலப்பரப்பு, இனம், குழு, என்ற பல்வேறு விதங்களில் மாறுபட்டு தனிதனி மொழியாக உருபெற்றதாகவும் சொல்கிறார்கள். ஒரு கட்டத்தில் இந்த பேச்சு மொழி எழுத்து மொழியாக பரிணாமம் பெறும் பொழுது எழுத்து என்கிற குறியீடுகள் உருவாயின. எழுத்து, மொழிக்கு மொழி வேறுபடும். எழுத்து கல், மண், செப்பு, ஓலை, புல், தாள் என்று பலவகை ஊடகங்களில் எழுதப்பட்டது. காகிதம் என்கிற தாளில் மையை தொட்டு எழுதும் முறை நடைமுறையில் இருந்து வருகிறது. இன்று நாம் தாளில் எழுதுவதற்கு எளிதாக கையாளும் விதத்தில் இருக்கிற வகை வகையான பேனாக்களை பயன்படுத்துகிறோம். ஆனால் சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை மாணவர்கள் இந்த பேனாவோடு மல்லாடி வந்தது பெரிய சோகக்கதை. அன்றைய மாணவர்கள் எழுதும் பேனாவோடும் மைக்கூடோடும் ஒரு கடின வாழ்க்கை வாழ்ந்தனர் என்றே சொல்லலாம். அந்தக் காலத்தில் எழுதுவதற்கு இறகு பேனா என்கிற நிப் பேனாவை தான்  பயன்படுத்தி வந்தனர். பாதி தடிமனாகவும் பாதி ஒல்லியாகவும் இருக்கும் ஒரு சாண் நீளம் கொண்ட உருண்டை மரக்கட்டையில் நிப்பை செறுக வேண்டும். நிப்பை செறுகுவதற்கு தோதுவாக பேனா கட்டையின் பருத்த முனையில் இருக்கும் உலோக ஸ்பிரிங் அமைப்பைக் கொண்ட குடைவான உட்பகுதியில் நிப்பை அழுத்தி செறுகினால் இறுகப் பிடித்துக் கொள்ளும். மை கூடில் இருக்கும்  மையில் பேனாகட்டை நிப்பை தோய்த்துத் தோய்த்து தான் எழுதவேண்டும். இந்த மையை மாணவர்களளே தயாரித்து கொள்வார்கள். காலணாவுக்கு மைபொடி பொட்டலம் பெட்டிக் கடையில் கிடைக்கும். இதை வாங்கி மைகூடில் கொட்டி தேவையான அளவு தண்ணீரை சேர்த்து கலக்கினால் எழுதுவதற்கான மை தயார். நிப்பை மையில் தொட்டு தொடர்ந்து எழுத முடியாது. ஒருமுறை தொட்டு எழுதினால் ஐந்து ஆறு எழுத்துகள் தான் எழுத முடியும். இந்த நிலை மாணவர்களுக்கு கொஞ்சம் சிரமமான ஒன்றாகவே இருந்தது. மேலும்

மைக்கூடு என்பது கண்ணாடி அல்லது பீங்கானால் செய்யப்பட்டிருக்கும். கவனகுறைவால் தவறி கிழே விழுந்தால் நொறுங்கி உடைந்து மையெல்லாம் கொட்டிப்போகும் சாத்தியமும் அதிகம்.  இருந்தது கூடுதல் கஸ்டம். எனவே எப்போதும் மைக்கூடை கவனமாக வைத்திருக்க வேண்டிய நிலை இருந்தது.  வகுப்பறையில் மைகூடை சாய்வுமேசை (desk) மீது தான் வைக்க வேண்டும். அதை ஒரு கையால் பிடித்துக் கொண்டே இருக்க வேண்டும். விட்டால் மேசை அசையும்போது அது தரையில் விழுந்து உடைய வாய்ப்பு உண்டு. (நான் படித்த திருநெல்வேலி இந்து கல்லூரி பள்ளியில் அசம்பாவிதத்தை தவிர்க்க ஒர் உபாயம் கையாளப்பட்டு வந்தது. சாய்வுமேசையின் சமதள பட்டியில் மைகூடு வைப்பதற்கென்று வட்டவடிவில் ஒரு குழியும் பேனாகட்டை வைப்பதற்கென்று ஒரு சாண் நீளத்தில் ஒரு பள்ளமும் தோண்டப்பட்டிருக்கும் அவற்றில் மைகூடையும் பேனாவையும் பாதுகாப்பாய் வைத்துக்கொள்ள முடியும். அறிவியல் வளர்ச்சியின் விளைவாய் அன்றிருந்த இந்த சிரமங்கள் ஏதும் இன்றி சொகுசாய் பலவகை பேனாக்களை இன்று பயன்படுத்தி வரும் நமக்கு மைகூடோடு அல்லாடிய அன்றைய மாணவர்களை நினைத்தால் கொஞ்சம் அனுதாபம் ஏற்பட தானே செய்கிறது.


No comments:

Post a Comment