Wednesday, 28 May 2014

 கைத்திலா 
                         அல்லது 
                                              ஏற்றம்.
-வெள் உவன்
                   ஆறு மற்றும் வாய்க்கால் பாசனம் இல்லாத இடங்களில் வயலுக்குத் தேவையான நீரை கிணற்றில் இருந்து இறைப்பதற்கு அந்தக் காலத்தில்  பயன்படுத்தப்பட்ட நெம்புகோல் வகையைச் சார்ந்த ஒரு பொறி தான் திலா. இதை ஏற்றம் என்றும் சொல்வர். திலாவில் இரண்டு வகைகள் பயன்பாட்டிலிருந்தன. ஒன்று கைத்திலா . இதை பயன்படுத்தி நீர் இறைக்க ஒருவர் மட்டும் போதும். மற்றொன்று ஆளேறும் திலா அல்லது மிதித்திலா. மிதி மரத்தின் மேல் ஒருவர் இங்கும் அங்கும் நடந்து திலாவை மேலும் கீழும் ஏறி இறங்கும் வித்த்தில் இயக்க, கீழே ஒருவர் சால்பிடித்து நீரைக் மடையில் கவிழ்பார். இது தான் மிதித்திலா இயங்கும் விதம்.


 
 
                            அதிக ஆழமில்லாத கிணறுகளில் இருந்து நீரை எடுப்பதற்கு  கைத்திலா சிறப்பாகப் பயன்படும். கைத்திலாவை பற்றி விரிவாகப் பார்ப்போம். நேராகவும் நீளமாகவும் இருக்கும் ஒரு மரத்துண்டைக் கொண்டு துலா அமைக்கப்படுகிறது. இந்த மரத்துண்டு கிணற்றை ஒட்டி செங்குத்தாக நடப்பட்டிற்கும் மரத்தடியின் மேல் முனையில் மூன்றில் இரண்டு பங்கு கிணற்றை நோக்கியபடியும் மீதியிருக்கும் ஒரு பங்கு எதிர்புறத்திலும் நீளுகிற விதத்தில் இருபக்கமும் ஆடும் தோதில் பொருத்தியிருப்பார்கள். இதில் மேலும் கீழுமாக ஆடும் மரத்துண்டு அச்சுலக்கை எனபடும். அச்சின் இரு முனைகளையும் தாங்குவதற்காகக் உருவாக்கப்படும் செங்குத்தாக நடப்பட்டிற்கும் மரத்தடி ஆடுகால் எனவும் அழைக்கப்படும். கிணற்றை நோக்கி இருக்கும் நீளமான பக்கத்து முனை கிணற்றுக்கு நேராக வரக்கூடியதாகவும் திலா ஆடுகாலில் மீது தாங்கப்படும். கிணற்றுக்கு நேராக இருக்கும் துலாவின் முனையில் நீளமான கயிறு அல்லது இரும்பு சங்கிலி ஒன்றின் ஒரு முனையைக் கட்டி மறு முனையில் ஒரு பாத்திரம் கட்டப்பட்டும். திலாவின் இந்தமுனையை தாழக் கொண்டுவரும்போது பாத்திரம் கிணற்று நீருள் அமிழக்கூடியதாகச் சங்கிலியின்  நீளம் இருக்கவேண்டும். பயன்படுத்தாதபோது திலாவின் கயிறு பொருத்திய முனை மேல் நோக்கி இருப்பதற்கு ஏதுவாகத் துலாவின் மறு முனையில் பாரமான கல் அல்லது  இரும்புத் துண்டுகள் மூலம் சுமை ஏற்றப்பட்டிருக்கும். நீர் எடுப்பதற்குச் சங்கிலியை இழுத்து அதன் முனையில் இருக்கும் பாத்திரத்தை நீருக்குள் அமிழ்த்தி அதனுள் நீரை நிரப்புவர். திலாவின் மறுமுனையில் சுமை இருப்பதால் குறைந்த விசையைப் பயன்படுத்திக் சங்கிலியை மேலே இழுத்து நீர் நிரம்பிய பாத்திரத்தை மேலே கொண்டுவரலாம். இவ்வாறு திலாவின் மூலம் நீர் இறைக்கையில் கிணற்றுக்கு வெளியிலிருந்து நீர் இறைப்பதில்லை. கிண்ற்றின் உட்பகுதியில் ஓர் ஆள் நின்று நீர் இறக்க தோதுவாக கிணற்றின் உட்பகுதியில் குறுக்கு வசத்தில் ஒரு கல் பதிக்கப்பட்டிருக்கும். அதில் நின்று கொண்டு தான் நீர் இறைப்பார்கள். அதற்கு மிதிக்கல் என்று பெயர். கிணற்றிலிருந்து கைத்திலாவை பயன் படுத்தி நீர் இறைக்கும் முறை நமது மரபில் நெடுநாளாய் இருந்து வருகிறது.
 
 
 


Tuesday, 20 May 2014

நெல்லு காய்க்கும் மரம்......!

                                                                                                                      வெள் உவன்                  அரிசி எந்த மரத்தில் காய்க்கிறது? என்று இன்றைய மெட்ரிக் பள்ளி மாணவன் கேட்டான் என்று வேடிக்கையாய் சொல்வது உண்டு. வேடிக்கைக்காக  சொல்லப்பட்டது என்றாலும் அதில் உண்மை இல்லாமல் இல்லை.   நகரங்களில் வாழும்குழந்தைகள் பலரும் நெல் விளையும் விதம் பற்றி ஏதும் தெரிய வாய்பில்லாமல் தான் இருக்கின்றனர். .    அந்த மாணவனுக்காவது மரத்தில் விளைகிறது என்ற அளவில் தெரிந்திருப்பது கொஞ்சம் ஆறுதலான ஒன்று. ஏனென்றால் அரிசி எந்த ஃபேக்டரியில் செய்கிறார்கள் என்று கேட்பவர்களும் இங்கு இருக்கிறாகளே .விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாத நிலை தான் பெரும்பாலும் இன்று இருக்கிறது.  
  
எனது சிறு வயது கிராமத்து விவசாயம் சார்ந்தவாழ்க்கையின் பசுமை நினைவுகள் மென் காற்றில் அசையும் நெல் நாற்று வயலின் பச்சை அலையாய் எங்கும் பரவுகிறது. . விவசாயத்தில் அதிகம் ஆர்வம் ஊட்டுவத நெல் நடவு தான். . நெல் நடவுக்கான தயாரிப்பே இனிமையானதொரு அனுபவம். மழை பெய்து குளமெல்லாம் நிரம்பும் போது தான் நாற்று பாவுவதற்கான ஆயத்தங்களை செய்ய தொடங்குவர். நடவு செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட மொத்த நிலத்தில், வசதியான ஒரு வயல் நாற்று பாவுவதற்காக தேர்ந்தெடுக்கப்படும். . நாற்றாங்காலின் வரப்புகள் முதலில் மேம்படுத்தப்படும். உறுதியான வரப்புகளை உருவாக்கிய பிறகு, தண்ணீர் நிரப்பப்படும். . வயலில் நன்றாக நீர் ஊறிய பிறகு, வயல் முழுதும் நீர் தேக்கி ஏர் கொண்டு இரண்டு மூன்று முறை சேறு குழையக் குழைய தொழி உழவு உழுவர். . அதன் பின் பனங்கை அல்லது மரப்பலகையை கொண்டு உருவாக்கபட்டிருக்கும் மரம் என்கிற உழவு கருவி கொண்டு நேர்த்தியாக சிறிதும் மேடு பள்ளம் இல்லாமல் சேற்று வயல் சமன் படுத்தப்படும். இதை மரம் அடித்தல் என்பர். பின் கரிநாள், அட்டமி, நவமி, சூலம் ஆகியவை பார்த்து ஒரு நல்ல நாளை தேர்ந்தெடுத்து நாத்து பாவுவார்கள். . முதல் விதையை தூவியதும் அந்த விதை கன்னி மூலையில் ஒதுங்கினால் அது விளைச்சலின் செழுமையை காட்டும் ஒரு நல்ல அறிகுறியாய் கொள்ளப்படுவது மரபு  .


இப்படி தூவிய விதை நெல் சேற்றில் படிந்து மூழ்கியபின், அடுத்த நாள் தேக்கி வைத்த நீர் முழுதும் வடிக்கப்படும். ஈரத்தில் உறங்கும் நெல் சுள்ளென சூரிய ஒளி பட விழித்தெழுந்து தன் இதழ் உடைத்து புதிதாய் ஒரு உயிராய் பிறப்பெடுக்கும். அதன் பின்வரும் நாட்களில் திட்டுத்திட்டாய் இளம் பச்சையாய் முளைக்கும் பயிர், அடுத்து அடுத்த வாரங்களில் அடர்த்தியாய், மிக நெருக்கமாய் பச்சைபசேலென ஆடையுடுத்தி மிக அழகாய் வளர ஆரம்பிக்கும். இந்த மென்மையான மாற்றத்தை உன்னிப்பாக கவனிக்கையில் மனம் கொள்ளும் பரவசம் இருக்கிறதே அது வார்த்தைகளில் அடங்காத ஒன்று. நாற்று வளர்ந்து குறிப்பிட்ட நாளுக்கு பின் நடக்கும் தொடர் செயல்பாடுகளான நடவு, களை எடுப்பு, அறுவடை என்று ஒவ்வொன்றும் சுவராஸ்யமான அனுபவங்கள்.... அனுபவித்தவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் அந்த மன மகிழ்ச்சியை 
.

Friday, 18 April 2014
 ஊட்ஸ் இரும்பும் நவீன தொழில்நுட்பமும்
 வெள் உவன்                            கிறிஸ்து பிறப்புக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் மரபு வழியில் இரும்பு தயாரிக்கப்பட்டதாக வரலாறு சொல்கிறது. அந்த இரும்பு ஊட்ஸ் என்று வழங்கப்பட்டது. அந்த ஊட்ஸ் இரும்பு தென் இந்தியாவில் தயர்ரிக்கப்பட்டதற்கான சான்றுகள் அகழாய்வுகள் மூலம் கிடைத்திருக்கின்றன. இந்த இரும்பு மத்தியகிழக்கு நாடுகள், ஐரோப்பா மற்றும் அரபு நாடுகளுக்கு அந்தக் காலத்திலேயே ஏற்றுமதி செய்யப்பட்டதாம். அந்த நாடுகளில் இந்த இரும்பு ‘டமாஸ்கஸ் இரும்பு இரும்பு என்ற பெயரில் புகழ் பெற்று விளங்கியதாம். போரஸ் மன்னன் அன்பளிப்பாக கொடுத்த முப்பது பவுண்ட் ஊட்ஸ் இரும்பை மாவீரன் அலெக்ஸாண்டர் மதிப்புமிக்கப் பரிசாக கருதியதாக சொல்லும் ஒரு வரலாற்று செய்தி உண்டு.
  
                                                 இரும்புக்கம்பிகளை மரம் அல்லது இரும்புச்சட்டங்களில் குறிப்பிட்ட இடைவெளி விட்டு பொருத்தி கட்டடங்களுக்கும் கதவுகளும், சன்னல்களும் உருவாக்கும் பழக்கம் நெடு நாள்களாக இருந்து வருகிறது. இவற்றை உருவாக்கும் போது சட்டங்களில் நெடுக்குவசத்தில் கம்பிகளை பொருத்தும் வழக்கமே. சிறைக்கதவுகளில் நெடுக்குவசத்தில் கம்பிகள் பொருத்தப்பட்டிருப்பதாலேயே சிறைவாசத்தை கம்பி எண்ணுதல் என்ற சொல்லால் குறிக்கும் வழக்கு ஒன்று இங்கு உண்டு.   


                     சில காலம் முன்பு வரை வீடு போன்ற கட்டடங்களில் அமைக்கப்பட்ட சன்னல்களின் கம்பிகள் நெட்டுவசத்தில் பொருத்துப்பட்டு இருந்தன. மேலும் சன்னல்கள் சுவரின் வெளி விளிம்பிலிருந்து மூன்று நான்கு அங்குலம் உள்வாங்கிய நிலையில் பொருத்தப்பட்டிருந்தன. சன்னலின் கதவுகள் வீட்டின் உட்புறமாக இருக்கும்படி அமைக்கப்பட்டன. ஆனால் இன்றைக்குக் கட்டப்படும் வீடுகளில் சன்னல் கதவுகள் வெளிப்பக்கம் இருக்கும். இப்படி சன்னல் கதவுகளை வெளிப்புறமாக அமைத்ததில் ஒரு செய்தி புதைந்து கிடக்கிறது.
                       பழைய காலத்தில் சன்னல் கம்பிகள் நெட்டுவசத்தில் பொருத்தப்பட்டது. தென்னிந்திய மரபு வழியில் தயாரிக்கப்பட்ட ஊட்ஸ் இரும்பை பயன்படுத்தி இப்படி நெட்டுவசத்தில் பொருத்தப்படும் வரையில் எந்த பிரச்சனையும் இல்லை. 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பாவில் இரும்பு தயாரிக்கப் புதிய தொழில் நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டது அந்த்த் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட இரும்பில் உருவாக்கப்பட்ட கம்பிகளை சன்னலுக்குப் பயன்படுத்தத் தொடங்கியதிலிருந்து சன்னல்களில் நெட்டுவசத்தில் கம்பிகள் வைப்பதில் பிரச்சனை உருவாகியது. உட்புறமாக கதவுகள் அமைக்கப்பட்ட சன்னல்களில்ன் கம்பிகள் கதவை மூடியபின்னும் மழையில் நனையும் நிலை இருந்த்து. இப்படி மழையில் ந்னைவதால் அந்தக் கம்பிகள் காலப்போக்கில் துருப்பிடிக்கத் தொடங்கின. துருபிடித்து கம்பிகள் வீங்கியதன் விளவாக கம்பிகள் பொருத்தப்பட்டிருந்த மரச்சட்டங்கள் வெடிக்கத் தொடங்கின.  

                       நமது பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்ட ஊட்ஸ் இரும்பு கம்பிகளில் துருபிடிக்கும் தன்மை குறைவாக இருந்ததால் அவை மழையில் நனைந்தாலும் எந்தப் பாதிப்பும் அடையாமல் இருந்தன. ஆனால் நவீன தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இரும்பில் இந்தத் தன்மை இல்லாததால் அவை கால்ப்போக்கில் துருபிடித்துக் கெட்டுப் போயின.                    

                      இந்தப்பிரச்சனைக்குத் தீர்வாக சன்னல் கம்பிகளை நெட்டுவசத்தில் வைப்பதற்குப் பதில் குறுக்குவசத்தில் வைக்கும் முறையினை கைக் கொண்டனர். மேலும் சன்னல் சட்டத்தை கட்டடத்தின் உட்பக்க சுவர் விளிம்பிலும் வைக்கும் வழக்கத்தை கைகொண்டனர். இந்த முறையில் சன்னல் கதவுகள் வெளிப்பக்கம் இருக்குமாறு பொறுத்தப்பட்டன. இந்தமுறையினால் சன்னல் கதவுகள் மூடப்படும் போது கம்பிகள் மழை நீரில் நனைவதும் பெரும் அளவில் தடுக்கப்பட்டன. 
                     
இதனால் கம்பிகள் விரைவில் துரு பிடிப்பதும் ஓரளவுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. இப்படியாக தொலைத்து விட்டப் பரம்பரிய முறையில் இரும்பு தயாரிக்கும் தொழில் நுட்பத்தை மீட்டெடுக்க முடியாமல் செருப்புக்கு ஏற்றவாறு காலை தரித்த கதையாக எப்படியோ சமாளித்து வருகிறோம்.

                     
உட்பக்கமாக மூடும் சன்னல் கதவுகள் காற்றில் திறந்து கொள்ளாமல் இருக்க கதவின் பின் புறத்தில் ஒரு தாழ் பயன்பாட்டில் இருந்து வந்தது. சன்னல் கதவுகள் தாளிடப் பயன்படும் ‘பெரடையை படத்தில் காணலாம். இன்று இந்தத் தாழ் பற்றி எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை. எனவே அந்தத் தாழை குறிக்க வழக்கில் இருந்த சொல்லை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்தத் தாழைக் குறிக்க ‘பெரடை என்ற என்ற சொல் வழக்கில் இருந்தது. புற அடை என்ற செவ்விய வடிவத்தின் திரிந்த வடிவம் தான் இந்த பெரடை என்ற வடிவம். புற அடை என்ற சொல்லுக்கு புறத்தே அதாவது கதவின் பின் புறத்தில் அடைக்கப்படும் அடைப்பு என்று பொருள்.
                 இந்த பெரடை என்ற சொல் இதுவரை ஏடேறவில்லை என்ற கருத்தை பாவாணரின் செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி தயாரிப்பு பணியில் பாவாணருடன் இணைந்து பணியாற்றியவரான திரு. ஆல்துரை அவர்கள் தெரிவிக்கிறார். இப்படி இதுவரை உருவாகியுள்ள எந்த அகராதியிலும் இடம் பெறாத இந்த பெரடை என்ற சொல் என்னால் தொகுக்கப்பட்டிருக்கும் “நெல்லை வட்டார வழக்குச் சொல் தொகை என்னும் வட்டார வழக்குச் சொல் அகராதியில் இடம் பெற்றிருப்பதை அந்த நூலுக்கான நூல் மதிப்புரையில் திரு.ஆல்துரை சுட்டிக்காட்டி இருக்கிறார்.