Tuesday, 18 March 2014

மரபுவழி சுண்ணாம்பு சாந்தில் நவீன தொழில்நுட்பம்

-வெள் உவன்


                       தமிழ் நாட்டில் கருங்கல் கட்டடங்களுக்கு முன்னர்ச் செங்கல் கட்டடங்கள் இருந்துள்ளன. ஏழாம் நூற்றாண்டுக் கருங்கல் கட்டடங்கள் அதற்கு முன் இருந்த செங்கல் கட்டடங்களின் மாதிரிகள் தான் என்பதில் ஐயமில்லை.அந்த வகையில் மாமல்லையில் உள்ள கூரை குறிப்பிடத்தக்கது. இது போன்ற கூரைகள் தமிழ் நாட்டில் ஏராளமாக காணப்படுகின்றன. கூரையில் செடி, கொடிகள் முளைக்காமல் பார்த்துக் கொண்டால் இது பல நூறு ஆண்டுகள் திடமாக இருக்கும். கருங்கல் சுவருக்கு அதன் மேல் சுண்ணாம்புக் காரையால் பூச வேண்டிய தேவை இல்லை. ஆனால் செங்கல் சுவர்களுக்கு சுண்ணாம்பு பூச்சு பூசுவது இன்றியமையாதது. சுண்ணாம்புடன் மணல் கலந்து அதனைக் காரை ஆலையில் அரைப்பர். 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட நடைமுறையில் இருந்து வந்த இந்த முறை சிமெண்டின் வருகையால் வழக்கொழிந்து விட்டது. அரைத்த சுண்ணாம்புக் காரை சில நாள் புளிக்க வைக்கப்பட்டு பின்னரே பயன் படுத்தப்படும். இவ்வாறு அரைக்கப்படும் சுண்ணாம்பு காரை ஆலையின் சுற்றுகளின் எண்ணிக்கைக்கேற்ப அரைத்தீர்வை, முக்காத்தீர்வை, முழுத்தீர்வை என மூன்று வகைப்படும். முழுத்தீர்வை காரையில் மணல் முழுமையாக அரைப்பட்டிருக்கும். சுண்ணாம்பு, பசைத் தன்மையும் பிடிப்புத் தன்மையும் அதிகம் கொண்டது.  

அதனுடன் கடுக்காய் நீர், பதநீர், அல்லது சர்க்கரை நீர் கலந்து காரை தயாரித்தால் அதன் பிடிப்புத் தன்மை அதிகமாகும். சுண்ணாம்பு காலப்போக்கில் காற்றிலுள்ள கரியமில வாயுவை உட்கொண்டு மிகவும் கெட்டியாகிறது என்பதை இன்றைய அறிவியல் உலகம் இப்போது தான் கண்டறிந்துள்ளது ஆனால் இந்த அறிவியல் உண்மையை பல ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் தெரிந்து வைத்திருந்தனர். இவ்வாறு காரை செக்கிலோ சுண்ணாம்பு அரவை அம்மியிலோ அரைத்துத் தயாரிக்கப்படுகிற சுண்ணாம்பு சாந்தையே சுதை சிற்பங்களை உருவாக்கப் பயன்படுத்தி வந்தனர் 


நமது சிற்பிகள். கோயில் கோபுரங்களில் சுதை உருவங்களை உருவாக்க இன்றும் இந்த முறையில் தான் சுண்ணாம்பு சாந்தை தயாரிக்கிறார்கள். 

இன்றைய சிற்பிகள் பண்டைய முறையில் சுண்ணாம்பு சாத்தை உருவாக்க நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி வருகின்றனர்.  சுண்ணாம்பு அரைக்க நவீன இட்லி கிரைண்டரை பயன்படுத்த தொடங்கி இருக்கின்றனர். ஆனால் கலவை முறையில் எந்த மாற்றமும் இல்லாமல் கருப்பட்டி, கடுக்காய் நீர், புளிக்க வைத்தல் போன்ற பழைய முறையினை தொடர்ந்து பின் பற்றி வருகின்றனர்.

Thursday, 6 March 2014

தொல்தமிழரின் பாசன தொழில்நுட்பங்கள்.
தொல் தமிழர் நிலத்தை திணைபிரித்து அதனடிப்படையில் தமது வாழ்வினை, பண்பாட்டினை கட்டமைத்திருந்தனர். இதுவே           “நடுவண் ஐந்திணை நடுவனது ஒழியப்                               
 படுதிரைவையம் பாத்திய பண்பே                               
என்று தொல்காப்பியம் பேசும் திணைபண்பாடு அல்லது திணைக்கோட்பாடு என்பதாகும்.
பாலை ஒழிந்த நான்கு நிலங்கள் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்பதாகும். இவ்வகை நிலப்பண்பாடு உலகின் எந்த நாகரீகத்திலும் இன்று வரை கிடையாது. இயற்கையின் தெள்ளிய புரிதலுடன் வாழ்வினை கட்டமைத்துக்கொண்டது தமிழ் சமூகம் ஒன்றே.
            தொல்தமிழர்தம் பிரிப்பில் அடங்கிய நால்வகை நிலங்களில் குறிஞ்சியும் முல்லையும் நெய்தலும் இயற்கையாய் அமைந்த நிலவகைகள். மருதம் ஒன்றே மனிதனால் உருவாக்கப்பட்ட நிலப்பகுதியாகும். மிகுதியான நீரையுடைய வயலும் வயல் சார்ந்த பகுதியான மருதம் தொல்தமிழர்தம் கைவண்ணம்.
            உலகில் எங்குமே காணக்கிடைக்காத பாசனமுறையை கைக்கொண்டு உழவு செய்து பயிர் வளர்த்தவன் தமிழன். இங்கிலாந்து மற்றும் ஐரோப்பா போன்ற  நாடுகளில் பாசன அமைப்புகளே கிடையாது. ஏனென்றால் பொதுவாக அங்கு பெய்யும் மழைப்பொழிவை கொண்டே பயிர்களை விளைவிக்கும் முறை மட்டுமே அவர்களுக்குத் தெரியும். ஆனால் நிலத்தின் தன்மை, மழை பொழிவின் அளவு, உபரிநீரின் பயன்பாடு என்று பல்வேறு நுட்பங்கள் மூலம் வேளாண் தொழிலில் சிறந்து விளங்கினர் பண்டைத் தமிழர். இதில் வேடிக்கை என்னவென்றால் பாசன்முறை என்றால் என்னவென்றே அறியாத வெளிநாட்டினர் (ஐரோப்பியர் குறிப்பாக ஆங்கிலேயர்) இங்கு வந்து நமது பாசனமுறைகளைக் கண்டு வியந்து, குறுகிய காலத்தில் நமது பாசன நுட்பங்களை நம்மிடமிருந்தே கற்று தெளிந்து, அதனை ஆங்கில மொழியில் எழுதி நமது பாசனமுறைகளையும், பாசன தொழில் நுட்பங்களையும் அங்கிலத்திலேயே நம்மை கற்கச் செய்து விட்டனர். இதனை படித்து மேல்தட்டுக்கு வந்துவிட்ட சில மேதாவிகள், காகிதபுலிகளாக மாறி நம் மரபுவழித் தொழில் நுட்பங்களை இன்றைய நமது தேவைகளுக்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்ப மேம்படுத்தும் சிந்தனை நமக்கு வந்துவிடாமல் தடுக்கும் சூழ்ச்சியினை இன்று வரை செய்து கொண்டிருக்கின்றனர். இந்தக் கொடுமையை என்னவென்று சொல்வது?
            நிலத்தின் தன்மைக்கேற்றவாறே அதை வன்புலம், மென்புலம், புண்புலம், களர்நிலம் அல்லது உவர்நிலம் என்று வகைப்படுத்தி வேளாண் செய்தவன் கதி இப்படியாக இருக்கிறது.
             பாசனமுறை என்பது நீர் மேலாண்மையை அடிப்படையாக்க் கொண்ட்து ஆகும். மழைக்காலங்களில் பெருகும் மழை நீரை சேமித்து அதை ஆண்டு முழுவதும் பயன்படுத்துவதே பாசனமுறையாகும். இவ்வாறு நீரை சேமிக்க நம்முன்னோர் கண்டுபிடித்த முறை குளம். இதை ஏரி, கம்மா, ஏந்தல், தாங்கல் என்று பல சொற்களில் குறிப்பிட்டனர். இந்த ஒவ்வொரு அமைப்பும் மாறுபட்ட தன்மை கொண்டது. இவை எல்லாவற்றுக்கும் பொதுவான பொருள் மழைநீரை சேமித்து வைக்கும் அமைப்பு என்பதே.
             இப்படியான ஏரி, குளங்களில் மழிநீரை சேமிக்கும் முறையினை இளங்கோ தனது காப்பியத்தில்
             ‘இடியுடை பெருமழை எய்தா ஏகப்
              பிழையாவிளையுள் பெருவளம் தரப்ப
              மழைபிணித்து ஆண்ட மன்னவன்
என்று குறிப்பிடுகிறார். அவர் குறிப்பிடும் மழை பிணித்து ஆண்ட மன்னவன் என்ற அடிக்கு பொருள் முறையாக மழையை தக்கமுறையில் பயன்படுத்தி நாட்டை வளம் பெற செய்த மன்னன் இவன் என்பதாகும்.
             இப்படி குளம் பற்றிய ஏராளமான செய்திகள் தமிழ் இலக்கியத்தில் காணப்படுகின்றன. குளத்தின் தன்மை, அதன் பயன் அது அமைந்திருக்க வேண்டிய விதம் என்று பல்வேறு நுட்பங்களை பழந்தமிழ் பாடல்கள் நமக்குச் சொல்கின்றன. குளத்தின் மிகுதியான நீரை வெளியேற்றும் அமைப்புகள் சறுக்கை, கங்கு, கலுங்கு, கலிங்கல் என குறிப்பிடப்படுகின்றன. இவை பொதுவாக குளக்கரையின் ஒரு கோடியில் (முனையில்)  அமைப்பதால் அதை கோடி என்றும் வழங்கினர். உபரி நீரை கோடி மூலம் வெளியேற்றிய பின் செயற்கையாக ஒரு வாய்க்காலை வெட்டி இயற்கையான ஓடைகளுடன் இணைத்து கீழ்குளங்கள் பயன்பெற வழிவகை செய்வதால் இதை மறுகால் என்றும் சொல்வர். இப்படியான அமைப்பு கொண்ட குளங்கள் நமது மரபில் நிறைய உண்டு. இந்தக் குளங்கள் சங்கிலித்தொடர் குளங்கள் (chain of tanks) என்று குறிப்பிடப்படுகின்றன.
                              மழைப்பொழிவு பற்றிய அளவுமுறைகள் பழந்தமிழ்நாட்டில் எப்படி இருந்தன என்பது கொஞ்சம் பார்ப்போம். மழைப்பொழிவை அளக்க செவி பதனு எங்ங்கிற அடிப்படை அளவுமுறை இங்கு புழக்கத்தில் இருந்து வந்த்து. இது தற்கால 10 மி.மீ. அல்லது 1 சென்டி மீட்டர் மழைக்கு சமமானது. பொதுவாக வேளாண் மக்கள் வீடுகளில் வெளிமுற்றத்தில் ஆட்டுரல் இருப்பது உண்டு. இது கால்நடைகளுக்குத் தேவையான பருத்திக் கொட்டை, புண்ணாக்கு போன்றவறை அரைப்பதற்கு பயன்படுத்தப்பட்டன. அதே நேரத்தில் இது மழைகணிக்கம் (rain gauge)  அல்லது மழைமானியாகவும் பயன்பட்டது. இரவில் பெய்த மழையின் அளவை ஆட்டுரலில் மையத்தில் உள்ள குழியில் உள்ள நீரின் உயரத்தை விரலால் அளந்து தெரிந்து கொள்வர். ஓர் உழவுக்கு அல்லது ஈர் உழவுக்கு ஏற்ற மழை பெய்துள்ளது என அறிந்து கொள்வர். மழையின் அளவுக்கும் நிலத்தின் ஈரப்பதத்திற்கும் தொடர் இருப்பதால் இதனை பதினு என்று குறிப்பிட்டனர். தொழில்நுட்பக் கூறுகளை எளிதாக்கி சாதாரண மக்களும் பயன்படுத்து வகையில் உருவாக்கி வைத்திருக்கின்றனர் நமது முன்னோர்கள். இந்த இட்த்தில் ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. நமது முன்னோர்கள் எல்லாத்துறை தொழில்நுட்பங்களையும் எளிமையாக எல்லோரும் எளிதில் கையாளும் வகையிலும் கட்டமைத்திருந்தனர் என்ற செய்தி நமக்கு வியப்பைத் தருகிறது. இடைகாலத்தில் இத்தன்மை மாறி தொழில்நுட்பங்கள் கடினமானதாகவும் சிக்கலுக்குறியதாகவும் தனிபயிற்சி மேற்கொண்டால்வர்களால் மட்டுமே கையாள கூடியதாகவும் மாறிவிட்ட்து. இதன் விளைவாக எளிய மக்கள் இந்த தொழில் நுட்பங்களிலிருந்து விலகி அந்நியமாகி போயினர்.
   
  யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்

       இனிதாவ தெங்குங் காணோம்.”
இது பராதி மொழி. அவன் கூறுவது போல் இனிய மொழி மட்டும் அல்ல தமிழ். அது தன்னுள் ஏராளாமான அறிவியல் செய்திகளையும் அறிவியல் கூறுகளையும் பொதித்து வைத்திருக்கிறது என்பது கூர்ந்து நோக்கும் போதும் தான் புரிய வருகிறது. இந்த உண்மை நம்மில் பலராலும் இன்றும் சிறிதும் புரிந்து கொள்ளாத ஒன்றாகவே இருக்கிறது. வெறுமனே இலக்கியச் சுவையை மட்டுமே போற்றும் நிலமை தான் இங்கு இருந்து வருகிறது. தமிழில் பொதிந்திருக்கும் அறிவியல் செய்திகளுக்கு ஒரு பதச்சோறு இதோ.
தொல்தமிழர் பாசனமுறையில் ‘பெரும் பாய்ச்சல் பாசனம் (inundation irrigation) என்ற ஒரு முறையும் இருந்து வந்திருக்கிறது. இன்றும் சிலப்பகுதிகளில் இவ்வகை பாசனமுறை நடைமுறையில் இருந்து வருகிறது. ஆறு, கால், ஓடை போன்ற இயல்பான நீர் வழித்தடங்களில் (natural water course) வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது தண்ணீரை நிலங்களில் வெள்ளமாகப் பாய்ச்சி அடைத்து வைக்கப்பட்டிருக்க்கும். நிலத்தடி மண்  அந்த நீரை நன்றாக உறிஞ்சி உட்கொண்டு விடுகிறது. இவ்வாறு வயலடி மண்ணில் தேக்கப்பட்டநீர் (subsoil storage) அவ்வப்போது பெய்யும் மழையின் துணை கொண்டு பயிரை முழுமையாக விளைவிக்கிறது. இதனை வெள்ளப்பாசனம் என்றும் கூறலாம். நைல் நதியின் நீரை இந்த வகையான முறையினை பயன்படுத்தியே எகிப்தியர்கள் பாசனம் செய்தனர் என்று சொல்லப்படுவது உண்டு. இதனையே திருநெல்வேலி மாவட்டத்தில் தொளிசாகுபடி அல்லது தொளிபாசன் என்கிறார்கள். தாமிரபரணி பாசனத்தில் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இன்றும் இம்முறை நடைமுறையில் இருந்து வருகிறது.
ஔவையார் மொழியில் இதனை கொஞ்சம் புரிந்து கொள்வோம்.
‘வரப்புயரநீருயரும்                                                                        நீருயர நெல்லுயரும்                                                   நெல்லுயரகுடியுயரும்                                                             
குடியுயரகோனுயரும்.                                                                   
இது அனைவருக்கும் தெரிந்த ஔவை வாக்கு தான் ஆனால் இதனுள் புதைந்திருக்கும் பாசனத் தொழில் நுட்பத்திறன்களை நாம் உள்ளபடியே தெளிந்திருக்கிறோமா? சந்தேகம் தான். பாசனத் தொழில் நுட்பத்தின் அடிப்படையில் ஔவையின் வரிகளை புரிந்துகொள்வோமே. வேளாண் விஞ்ஞானிகள் நெற்பயிருக்கு 2 அங்குல நீர் இருந்தால் போதும் என்பர். பாசனப் பொறியாளர்கள் 4 அங்குலம் நீர் தேவை என்பர். இவர்கள் ஆங்கில வழிக்கல்வி மூலம் கற்றதன் விளைவு இது. ஏன் வரப்பு உயர வேண்டும்? பயிர் உயர வேண்டும் என்கிறார் ஔவை என்று கேட்டால் அந்த கேள்வி எல்லாம் இவர்களுக்கு பொருல் அற்றதாகத் தோன்றும். ஔவையின் பாடல் வரிகளோ ‘பெரும் பாய்ச்சல் பாசனத்தை பற்றி பேசுகிறது என்பது இவர்களுக்குத் தெரியாத ஒன்று. இதில் வியப்படைய ஏதும் இல்லை. நீர் பாசனத்தைப் பொறுத்த வரை கற்றுக்குட்டி ஆங்கிலேயர் ஆங்கிலத்தை ஆங்கிலத்தில் எழுதிய பாடத்தினை ஆங்கில வழியில் கற்றுத் தேர்ந்த இவர்களுக்கு ஔவையின் வரிகள் புரியாது தானே. வயலின் வரப்பை உயர்த்தினால் அதிக அளவு வெள்ள நீரைப்பாய்ச்சி அடைத்து வைக்கலாம்.  அதிக அளவு வெள்ள நீரை வயலடி மண் உறிஞ்சி உட்கொள்ளும். அதிக நீரை உட்கொண்ட்தனால் வயலடி மண்ணில் அதிக நீர் சேமிக்கப்படும். இவ்வாறு அதிக அளவு சேமிக்கப்பட்ட நீருந்தால் வீரிய நெல் வகைகளைப் பயிரிட்டால் விளைச்சல் அதிகமாகும். விளைச்சல் அதிகமானால் நாடு செழிக்கும். மக்கள் மகிழ்ச்சியாய் வாழ்வார்கள் மன்னையும் வாழ்த்துவார்கள். இதை தான் தமிழ் பாட்டி எளியத் தமிழில் அழகாக எடுத்துரைத்திருக்கிறாள். வேளாண் தொழில் நுட்பத்தையும் பொதித்து தந்திருக்கிறாள். இந்த சாகுபடி முறையில் வயலில் ஓரளவு நீரைப் பாய்ச்சிய பின் ஏற்கனவே குவிக்கப்பட்ட தொழு உரத்தை பரப்பி அதன் பின் தளை உரத்தை புதைத்து சேறாக்கி விடுவார்கள் இதற்குத் தொளிக்கலக்குதல் என்று பெயர். பிறகு நீரை வெள்ளமாகப் பாய்ச்சி வயலடி மண் நீரை உறிஞ்சி உட்கொள்ளச் செய்வார்கள். நீர் பலநாள் வயலில் தேங்குவதால் களைகளுக்கு ஆதாரமான களை வித்துக்கள் அழுகி உரத்தோடு உரமாகிவிடும். அது போல் தளைகளும் அழுகி உரமாகி விடும். பின் செமிக்கப்பட்ட உரத்துகள்கள் மண்ணோடு நன்றாகக் கலந்து வயலடி மண் பதப்பட்டுவிடும். இது தான் நிலதடி மண்ணை சீராகப் பண்படுத்தும் பழந்தமிழரின் தொழில் நுட்பம். இப்படிபட்ட தொழில் நுட்பம் சார்ந்ததும் அறிவியல் செய்திகளை உள்ளடக்கியதுமான பலவற்றையும் தன்னுள் கொண்டது தான் தமிழ் மொழியும் அதன் இலக்கியங்களும்.