Wednesday, 28 May 2014

 கைத்திலா 
                         அல்லது 
                                              ஏற்றம்.
-வெள் உவன்
                   ஆறு மற்றும் வாய்க்கால் பாசனம் இல்லாத இடங்களில் வயலுக்குத் தேவையான நீரை கிணற்றில் இருந்து இறைப்பதற்கு அந்தக் காலத்தில்  பயன்படுத்தப்பட்ட நெம்புகோல் வகையைச் சார்ந்த ஒரு பொறி தான் திலா. இதை ஏற்றம் என்றும் சொல்வர். திலாவில் இரண்டு வகைகள் பயன்பாட்டிலிருந்தன. ஒன்று கைத்திலா . இதை பயன்படுத்தி நீர் இறைக்க ஒருவர் மட்டும் போதும். மற்றொன்று ஆளேறும் திலா அல்லது மிதித்திலா. மிதி மரத்தின் மேல் ஒருவர் இங்கும் அங்கும் நடந்து திலாவை மேலும் கீழும் ஏறி இறங்கும் வித்த்தில் இயக்க, கீழே ஒருவர் சால்பிடித்து நீரைக் மடையில் கவிழ்பார். இது தான் மிதித்திலா இயங்கும் விதம்.


 
 
                            அதிக ஆழமில்லாத கிணறுகளில் இருந்து நீரை எடுப்பதற்கு  கைத்திலா சிறப்பாகப் பயன்படும். கைத்திலாவை பற்றி விரிவாகப் பார்ப்போம். நேராகவும் நீளமாகவும் இருக்கும் ஒரு மரத்துண்டைக் கொண்டு துலா அமைக்கப்படுகிறது. இந்த மரத்துண்டு கிணற்றை ஒட்டி செங்குத்தாக நடப்பட்டிற்கும் மரத்தடியின் மேல் முனையில் மூன்றில் இரண்டு பங்கு கிணற்றை நோக்கியபடியும் மீதியிருக்கும் ஒரு பங்கு எதிர்புறத்திலும் நீளுகிற விதத்தில் இருபக்கமும் ஆடும் தோதில் பொருத்தியிருப்பார்கள். இதில் மேலும் கீழுமாக ஆடும் மரத்துண்டு அச்சுலக்கை எனபடும். அச்சின் இரு முனைகளையும் தாங்குவதற்காகக் உருவாக்கப்படும் செங்குத்தாக நடப்பட்டிற்கும் மரத்தடி ஆடுகால் எனவும் அழைக்கப்படும். கிணற்றை நோக்கி இருக்கும் நீளமான பக்கத்து முனை கிணற்றுக்கு நேராக வரக்கூடியதாகவும் திலா ஆடுகாலில் மீது தாங்கப்படும். கிணற்றுக்கு நேராக இருக்கும் துலாவின் முனையில் நீளமான கயிறு அல்லது இரும்பு சங்கிலி ஒன்றின் ஒரு முனையைக் கட்டி மறு முனையில் ஒரு பாத்திரம் கட்டப்பட்டும். திலாவின் இந்தமுனையை தாழக் கொண்டுவரும்போது பாத்திரம் கிணற்று நீருள் அமிழக்கூடியதாகச் சங்கிலியின்  நீளம் இருக்கவேண்டும். பயன்படுத்தாதபோது திலாவின் கயிறு பொருத்திய முனை மேல் நோக்கி இருப்பதற்கு ஏதுவாகத் துலாவின் மறு முனையில் பாரமான கல் அல்லது  இரும்புத் துண்டுகள் மூலம் சுமை ஏற்றப்பட்டிருக்கும். நீர் எடுப்பதற்குச் சங்கிலியை இழுத்து அதன் முனையில் இருக்கும் பாத்திரத்தை நீருக்குள் அமிழ்த்தி அதனுள் நீரை நிரப்புவர். திலாவின் மறுமுனையில் சுமை இருப்பதால் குறைந்த விசையைப் பயன்படுத்திக் சங்கிலியை மேலே இழுத்து நீர் நிரம்பிய பாத்திரத்தை மேலே கொண்டுவரலாம். இவ்வாறு திலாவின் மூலம் நீர் இறைக்கையில் கிணற்றுக்கு வெளியிலிருந்து நீர் இறைப்பதில்லை. கிண்ற்றின் உட்பகுதியில் ஓர் ஆள் நின்று நீர் இறக்க தோதுவாக கிணற்றின் உட்பகுதியில் குறுக்கு வசத்தில் ஒரு கல் பதிக்கப்பட்டிருக்கும். அதில் நின்று கொண்டு தான் நீர் இறைப்பார்கள். அதற்கு மிதிக்கல் என்று பெயர். கிணற்றிலிருந்து கைத்திலாவை பயன் படுத்தி நீர் இறைக்கும் முறை நமது மரபில் நெடுநாளாய் இருந்து வருகிறது.
 
 
 


Tuesday, 20 May 2014

நெல்லு காய்க்கும் மரம்......!

                                                                                                                      வெள் உவன்                  அரிசி எந்த மரத்தில் காய்க்கிறது? என்று இன்றைய மெட்ரிக் பள்ளி மாணவன் கேட்டான் என்று வேடிக்கையாய் சொல்வது உண்டு. வேடிக்கைக்காக  சொல்லப்பட்டது என்றாலும் அதில் உண்மை இல்லாமல் இல்லை.   நகரங்களில் வாழும்குழந்தைகள் பலரும் நெல் விளையும் விதம் பற்றி ஏதும் தெரிய வாய்பில்லாமல் தான் இருக்கின்றனர். .    அந்த மாணவனுக்காவது மரத்தில் விளைகிறது என்ற அளவில் தெரிந்திருப்பது கொஞ்சம் ஆறுதலான ஒன்று. ஏனென்றால் அரிசி எந்த ஃபேக்டரியில் செய்கிறார்கள் என்று கேட்பவர்களும் இங்கு இருக்கிறாகளே .விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாத நிலை தான் பெரும்பாலும் இன்று இருக்கிறது.  
  
எனது சிறு வயது கிராமத்து விவசாயம் சார்ந்தவாழ்க்கையின் பசுமை நினைவுகள் மென் காற்றில் அசையும் நெல் நாற்று வயலின் பச்சை அலையாய் எங்கும் பரவுகிறது. . விவசாயத்தில் அதிகம் ஆர்வம் ஊட்டுவத நெல் நடவு தான். . நெல் நடவுக்கான தயாரிப்பே இனிமையானதொரு அனுபவம். மழை பெய்து குளமெல்லாம் நிரம்பும் போது தான் நாற்று பாவுவதற்கான ஆயத்தங்களை செய்ய தொடங்குவர். நடவு செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட மொத்த நிலத்தில், வசதியான ஒரு வயல் நாற்று பாவுவதற்காக தேர்ந்தெடுக்கப்படும். . நாற்றாங்காலின் வரப்புகள் முதலில் மேம்படுத்தப்படும். உறுதியான வரப்புகளை உருவாக்கிய பிறகு, தண்ணீர் நிரப்பப்படும். . வயலில் நன்றாக நீர் ஊறிய பிறகு, வயல் முழுதும் நீர் தேக்கி ஏர் கொண்டு இரண்டு மூன்று முறை சேறு குழையக் குழைய தொழி உழவு உழுவர். . அதன் பின் பனங்கை அல்லது மரப்பலகையை கொண்டு உருவாக்கபட்டிருக்கும் மரம் என்கிற உழவு கருவி கொண்டு நேர்த்தியாக சிறிதும் மேடு பள்ளம் இல்லாமல் சேற்று வயல் சமன் படுத்தப்படும். இதை மரம் அடித்தல் என்பர். பின் கரிநாள், அட்டமி, நவமி, சூலம் ஆகியவை பார்த்து ஒரு நல்ல நாளை தேர்ந்தெடுத்து நாத்து பாவுவார்கள். . முதல் விதையை தூவியதும் அந்த விதை கன்னி மூலையில் ஒதுங்கினால் அது விளைச்சலின் செழுமையை காட்டும் ஒரு நல்ல அறிகுறியாய் கொள்ளப்படுவது மரபு  .


இப்படி தூவிய விதை நெல் சேற்றில் படிந்து மூழ்கியபின், அடுத்த நாள் தேக்கி வைத்த நீர் முழுதும் வடிக்கப்படும். ஈரத்தில் உறங்கும் நெல் சுள்ளென சூரிய ஒளி பட விழித்தெழுந்து தன் இதழ் உடைத்து புதிதாய் ஒரு உயிராய் பிறப்பெடுக்கும். அதன் பின்வரும் நாட்களில் திட்டுத்திட்டாய் இளம் பச்சையாய் முளைக்கும் பயிர், அடுத்து அடுத்த வாரங்களில் அடர்த்தியாய், மிக நெருக்கமாய் பச்சைபசேலென ஆடையுடுத்தி மிக அழகாய் வளர ஆரம்பிக்கும். இந்த மென்மையான மாற்றத்தை உன்னிப்பாக கவனிக்கையில் மனம் கொள்ளும் பரவசம் இருக்கிறதே அது வார்த்தைகளில் அடங்காத ஒன்று. நாற்று வளர்ந்து குறிப்பிட்ட நாளுக்கு பின் நடக்கும் தொடர் செயல்பாடுகளான நடவு, களை எடுப்பு, அறுவடை என்று ஒவ்வொன்றும் சுவராஸ்யமான அனுபவங்கள்.... அனுபவித்தவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் அந்த மன மகிழ்ச்சியை 
.