Monday, 30 March 2015(ஏப்ரல் 2015 அம்ருதா இதழில் வெளியானது)
பனிமூட்டத்திற்கு அப்பால் அசையும் நிழலுருவங்கள்
-வெள் உவன்.


                     நமக்குத் தெரிந்த வரையில் உயிரினங்கள் வாழும் ஒரே உயிர்கோள் பூமி என்பதாகத் தான் கொள்ள வேண்டியிருக்கிறது. உயிர் வாழ்தலுக்குரிய அனைத்து அம்சங்களையும் பெற்றிருப்பதாலேயே இந்தப் பெருமை அதற்கு.  பூமிக்கு வெளியேயும் உயிர்கள் வாழும் கோள்களும் இருக்கலாம் என்பது மெலிதான நம்பிக்கைக்குரிய உறுதி செய்யப்படாத தகவலாக இருக்கிறது. மரம் செடி கொடி புழு பூச்சு ஊர்வன பறப்பன விலங்குகள் மனிதன் என்று வகை வகையாய் கோடிக் கணக்கான உயிர்களை சுமந்து சுழலுகிறது இந்தப் புவிக்கோள்
                     
                                                                   இதிலுள்ள உயிர்களுக்கெல்லாம் உயிர் வேட்கைதான் பிரதான நோக்கமாக இருக்கிறது. அதாவது உயிரை காத்துக் கொள்வதிலுள்ள ஆசை எத்தனிப்பு முயற்சி என்பதாக. அடுத்த நோக்கம் தனது இனத்தைப் பெருக்குவது. இவை இரண்டுமே எல்லா உயிருக்கும் தலையானதாக இருக்கின்றன. டார்வின் மொழியில் சொல்வது என்றால் ‘வலிமை உள்ளது பிழைக்கும். புதிய உயிர் உருவாக எல்லா இனத்திலும் ஆண் பெண் என்பதாக  இரண்டு வகைகளை உருவாக்கி அவை ஒன்றுடன் ஒன்று இணைவதன் மூலம் புதிய உயிர் ஒன்று உருவாகும் விதத்தில் இயற்கை ஒரு பொதுவான விதியை உருவாக்கி வைத்திருக்கிறது. பாலுணர்வு என்பது எல்லா உயிருக்கும் இயல்பானது இயற்கையானது என்பது பொதுவில் இருக்கும் தன்மை. ஆனாலும் இணை தேர்வு என்பது சுதந்திரமானது என்று இருந்தாலும் அது சற்று கடினமானதும் கூடுதல் கவனம் தேவைப்படுவதாகவும் இருக்கிறது. இதைக் கொஞ்சம் அகலமாகப் பார்க்கலாம்.

                   மயிலுக்குத் தோகை. குயிலுக்கு இனிமையான குரல். சில வகை குருவிகளின் நீளமான வால் சேவலுக்குக் கொண்டை கிளியின் கழுத்தைச் சுற்றிய மோதிர வளையம் யானைக்கு தந்தம் புலிக்குச் சற்று அழுத்தமான கருங்கோடுகள்  சிங்கத்தின் பிடரி மானுக்குக் கொம்பு என்பதானவற்றை எல்லாம் அழகு என்கிறோம். இதை கவர்ச்சி என்றும் சொல்லலாம். இவையெல்லாம் ஆணினத்திற்கே உரியனவாக இருக்கின்றன. இப்படி எல்லா அழகையும் கவர்ச்சியையும் ஆணுக்கே கடவுளோ அல்லது இயற்கையோ கொட்டிக் கொடுத்திருப்பது சற்று விந்தையாக இருக்கிறது. ஏன் இப்படி? இந்தக் கேள்வி நமக்கே எழும் போது ஆய்வாளர்களுக்கு உண்டாகாமல் இருக்குமா? இது பற்றி நிறையவே ஆய்வுகள் செய்யபட்டிருக்கின்றன. அப்படிப்பட்ட ஆய்வு முடிவுகளின் சாரம் இப்படியாக தான் இருக்கின்றது.
                     
                                                                உதாரணத்திற்கு மயில் பற்றிய ஆய்வுகளைப் பார்ப்போம். பறவை இனத்தை எடுத்துக் கொண்டால் இயற்கை அமைப்பில்  பெரும்பாலும் ஆண் பறவையின் விந்து மிகச் சிறியதாகவும் அதே நேரத்தில் பெண்ணின் முட்டையை அதனோடு ஒப்பிட்டுப் பார்த்தால் மிகப் பெரிய அளவுள்ளதாகவும் இருக்கிறது. எனவே ஒரு கரு உருவாக்கத்தில் ஆணின்  பங்கு சிறிதளவே. பெண்ணின் பங்கு மிக அதிகம். ஏனெனில் அது தன் ஆயுட்காலத்தில் குறைந்த எண்ணிக்கையிலேயே முட்டைகள் இடுகின்றன. எனவே தன் குஞ்சுகளின் தகப்பனை அது கடினமாகவே தேர்வு செய்கிறது. ஏனென்றால் ஒரு தகுதியற்ற ஆண்பறவையுடன் பெண்பறவை புணர்வதன்  மூலம்  ஒரு வலுவற்ற சந்ததியை உருவாக்கும் தவறினை செய்யும் சாத்தியங்கள் கூடுதலாகவே இருக்கின்றன.
                        
                                                                                எனவே தான் பெண்ணின் இணைத் தேர்வு கடுமையானதாக இருக்கிறது. பெண்ணின் இந்தக் கடுமையான இணத்தேர்வுப் போட்டியில் வெற்றி பெறவே ஆணுக்கானதாக இருக்கிற சிறப்பு அம்சங்களான தோகை இனிய குரல் கொண்டை தந்தம் பிடரி கொம்பு போன்ற பிறவும். இதைத் தான்  தோகை என்பது இடைஞ்சலாகவும் சவாலாகவும் சில வேளைகளில் உயிருக்கே உலை வைக்கக் கூடியதாகவும் இருக்கும் பட்சத்தில் கூட அதை சுமந்து கொண்டு ஆண்மயில் பெண்ணைக் கவர அதைக் காட்சிப்படுத்துகிறது. பெண்ணைப் பொருத்தவரை இத்தனை இடர்பாடுகளையும் தாண்டி வயதுக்கு வந்த ஆண்பறவை ஜீவித்து இருப்பதே அதன் தகுதியை நிர்ணயிக்கிறது. இதனையே மற்ற வேட்டை மிருகங்களிடமிருந்து இப்பறவை எப்படி தப்பித்ததோ அந்த உணர்வும் புத்திக் கூர்மையும் அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்பட்டு விடும். செரிவான அடர்த்தியான நிறமோ அழகான வாலோ தோகையோ அதன் நோய் எதிர்ப்பு சக்தியை காட்டுகிறது. இவற்றால் ஏற்படும் தொந்தரவுகளில் இருந்து இப்பறவை தாண்டி வந்திருக்கிறது என்றால் அது வலுவுள்ளதாகவும் அதிகம் வேகம் கொண்டதாகவும் இருந்திருக்கிறது. எனவே இத்தனை தகுதிகளையும் கொண்ட ஆணைத் தெரிவு செய்து புணர்ந்து குஞ்சுகளைப் பொரிக்கிறது பெண்பறவை என்கிறார் டார்வின். நாய் காதல் என்று திரைப்படங்களில் கேலி செய்யப்பட்ட ஒரு பெட்டை நாயின் பின்னே அநேக ஆண் நாய்கள் நாக்கை தொங்கவிட்டு திரியும் காட்சி இயற்கையின் இந்த விதியின் வினையே
                        
                                                                                  இப்போது ஒரு கேள்வி எழலாம் மனித குலத்தில் இந்த இயற்கையின் விதி செல்லுபடியாகவில்லையா என்பதாக. இதற்கான விடைக்கு வரலாற்றை பின்னோக்கி வெகு தூரம் நகர்த்த வேண்டியுள்ளது. இனவிருத்தி என்பதில்  எல்லா உயிரினதிற்குமான இயற்கை விதியே மனித இனதிற்குமானதாக இருக்கிறது. ஆணும் பெண்ணும் இணைகையில் ஆணிடமிருந்து வெளியாகும் விந்துவில் இருக்கும் உயிரணுக்களில் ஒன்று பெண்ணின் கருப்பையை அடைந்து அங்கிருக்கும் பெண்ணின் கருமுட்டையுடன் சேருகையில் ஒரு புதிய உயிர் கருக்கொள்கிறது. இது உயிரியல் உணமை.
                          
                                                                                 இதனை இன்னும் கொஞ்சம் விளக்கமாகப் பார்த்தால் கூடுதலாகப் புரிந்து கொள்ள முடியும். ஆணின் ஒரு தடவையின் விந்து வெளிதள்ளல் 20 மில்லியனிலிருந்து  40 மில்லியன் வரையிலான உயிரணுக்களை கொண்டதாக இருக்கிறது. இதில் ஓர் உயிரணு பெண்ணின் கருமுட்டையுடன் இணைந்தால் போதும் புதிய உயிருக்கான கரு உருவாகி விடும். ஒரு ஆண் தன் வாழ்நாளில் குறைந்தபட்சம் 5000 தடவைக்கு மேல் விந்து  வெளித்தள்ளலை செய்ய முடியும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் பெண்ணின் நிலையோ வேறு விதமாக இருக்கிறது.  முழுமையான உடல் நலத்துடன் இருக்கும் ஒரு  பெண்ணானவள் தன் வாழ்நாள் முழுவதிலும் அதிகப்பட்சம் ஐநூறிலிருந்து அறுநூறு வரையிலான கருமுட்டைகளயே உற்பத்தி செய்யும் ஆற்றல் உள்ளவளாக இருக்கிறாள். இனவிருத்தியில் ஆணோடு ஒப்பிடுகையில் பெண்ணின் சாத்தியம் மிக மிகக் குறைவு. இயற்கையின் இந்த விதி எல்லா உயிரினத்தின் பெண்ணைப் போலவே மனித இனப் பெண்ணுக்கும் ஆனதாக இருகிறது. எனவே இணைத் தேர்வின் சுதந்திரமும் கடுமையும் மானுடப் பெண்ணிற்கும் தவிர்க்க  முடியாத ஒன்று தான். ஆனால் இன்றைய நடை முறை வேறாக இருக்கிறதே.
                           

                                                                           தொடக்க காலத்தில் சமூகம் பெண் தலைமையின் கீழ் இயங்கி வந்தது என்பது மானிடவியலின் கருத்து. அப்படியான நிலையில் ஒரு கால கட்டத்தில் இணைதேர்வு என்பது பெண்ணின் முழு சுதந்திரத்திற்குள்ளானதாக இருந்திருக்கிறது. அது பற்றி இப்படி சொல்லப்படுகிறது.  
                           
                                                                          திருமணமாகாத பெண்ணும் அவளால் தனது இணையாக  தெரிவு செய்யப்பட்ட ஆணுமாக ஊர் பொதுமன்றில் (மந்தை) சில மாதங்கள் தங்கி வாழத் தொடங்குவர். ஊர் மக்களின்  ஒப்புதலுடனேயே இந்தக் குடித்தனம் தொடரும். கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கழிந்த பின் அந்தப் பெண் கருவுற்றால் அவளுடன் தங்கியிருந்த ஆணுடன் அவளுக்குத் திருமணம் நடைபெறும். இந்தத் திருமணம் அவர்கள் இருவரும் பொதுமன்றில் வாழத் தொடங்கிய ஏழாவது அல்லது எட்டாவது மாதமே நடைபெறுமாம். அப்படி பொதுமன்றில் வாழ்ந்து மூன்று மாதத்தில் கருக் கொள்ளவில்லையானால் பொதுமன்றில் வாழ்ந்த பெண்ணுக்கும் ஆணுக்கும் திருமணம் நடைபெறாதாம். மீண்டும் வேறு ஒரு ஆணுடன் பொதுமன்றில் வாழ மறுபடியும் சந்தர்ப்பம் வழங்கவும் சாத்தியம் உண்டு. வடகிழக்கு மாநிலங்களின் சில பகுதிகளில் வாழும் பழங்குடியினர் மத்தியில் இது போன்ற பழக்கம்  இன்றும் கூட இருந்து வருவதாகச் சொல்லப்படுகிறது.
                             
                                                                                  மேலும் நமது வாழ்க்கை வட்டச் சடங்கில் கூட இதன் தளர்ந்த வடிவத்தினை இன்றும் எச்சமாகக் காணலாம். எழாவது அல்லது எட்டாவது மாதத்தில் கருவுற்ற பெண்ணுக்கு வளைகாப்பு என்ற சடங்கு நடத்தும் பழக்கம் பெரும்பாலான மக்கள் மத்தியில் இன்றும் இருந்து வருகிறது. இந்தச் சடங்கு சீமந்தம் என்ற பெயரிலும் குறிப்பிடப்படுகிறது. இந்தச் சடங்கு ஆதிகாலத்தில் பொதுமன்றில் வாழ்ந்த வாழ்க்கை முறையின் எச்சம் தான் என்று கொள்ள முடியும். மந்தை என்பதற்கு கூடி வாழுதல் கூடுகிற இடம் என்பதான பொருள்களும்  உண்டு. நீலகிரி தோடர்கள் வசிக்கும் குடில் மந்து என்றே இன்றும் அழைக்கப்படுகிறது. மன்றம் மந்தை மந்து போன்ற சொற்களெல்லாம் ஒரே வேரடி சொற்களே. இந்த அடிப்படையிலே சீமந்தம் என்ற சொல்லை புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
                              
                              
                                                                                   மந்தை என்ற சொல்லின் கூடுகை என்ற பொருளின் அடிப்படையில் சீமந்தம் என்ற சொல் உரு பெற்றிருக்கிறது. அதாவது சீமந்தம் என்றால் முதல் கூடல் அல்லது முதல் கூடுகை என்பதாகப் பொருள் கொள்ள முடியும். சீம்பால் சீங்குழல் போன்ற சொற்களின் பொருளை தெரிந்து கொண்டால் இன்னும் எளிமையாக இதைப் புரிந்து கொள்ளலாம். சீம்பால் என்பது கன்று ஈன்ற பசு சுரக்கும் முதல் பாலை குறிக்கிற சொல். அது போல் சீங்குழல் என்பது மூங்கிலில் உருவாக்கப்படும் புல்லாங்குழல் என்பதாகப் பொருள் சொல்கிறது தமிழ் லெக்சிகனான. பேரகராதி. காட்டில் புதராய் வளர்ந்து செழித்திருக்கும் மூங்கிலில் வண்டுகளால் துளைக்கப்படும் துளைகள் வழியே காற்றுப் புகுந்து இன்னிசையாய் வெளியேறும் நிகழ்வே குழல் வாத்திய தோற்றத்திற்கு தூண்டுகோல் என்பர். அதனால் முதல் துளை வாத்திய கருவியான புல்லாங்குழல் சீங்குழல் என்றும் குறிப்பிடப்படுகிறது. மந்தையில் நிகழ்ந்த முதல் கூடலையும்  சீமந்தம் என்பதாக அதாவது முதல் கூடல் என்ற பொருளில் குறிப்பிடலாம். முதல் குழந்தையை சீமந்தபுத்திரன் சீமந்தபுத்திரி என்று குறிப்பிடுவது இன்றும் வழக்கில் இருந்து வருகிற சொற்களே.
                        
                                                                         இந்த இடத்தில் ஒரு நண்பர் சொந்த அனுபவம் என்று சொன்ன நிகழ்வு நினைவுக்கு வருகிறது. நண்பர் உயர்ந்த அரசு பதவி வகிப்பவர். அவருக்கு திருமணம் ஆகி எட்டு பத்து ஆண்டுகள் ஆகியும் குழந்தைப் பேறு இல்லாமல் இருந்தது இது அவரையும் அவரது மனைவி மற்றும் நெருங்கிய உறவினர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. நண்பர் வீட்டாருக்கும் சரி அவரது மனைவி வீட்டாருக்கும் சரி இந்தச் சடங்கு சம்பிரதாயங்களில் பெரிய அளவில்  மரியாதையும் கிடையாது. பெரும்பாலும் இந்தச் சடங்கு சம்பிராதாயங்களை கடைபிடிக்கும் பழக்கம் அவ்வளவாக அவர்களுக்கு இருந்ததும் இல்லை. இப்படியிருக்கையில் அவரது மனைவி நீண்ட நாள்களுக்குப் பின் கருவுற்றாள். அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர். நாள்கள் சென்றன கருவுற்று ஏழு மாதம் நிறைவுற்றது. நீண்ட நாள்களுக்கு பின் உண்டான கரு என்ற காரணத்தால் அந்த நிகழ்வை பிறரை போல் விமர்சையாகவும் மகிழ்வுடனும் கொண்டாட தீர்மானித்து அந்தப் பெண்ணுக்கு சீமந்தம் நடத்த முடிவு செய்தனர் சடங்கு சம்பிரதாயங்களில் நம்பிக்கை இல்லாத அந்தக் குடும்பத்தினர். 
                            
                     
                                                                           சீமந்தமும் சிறப்பாக நடந்து முடித்தது பத்தாவது மாதம் அந்தப் பெண் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள் அனைவரும் மகிழ்ந்தனர். இதற்கிடையில் நண்பருக்கு வேறு ஊருக்கு வேலை மாற்றாலாகியது  புதிய ஊரில் அடுக்குமாடி குடியிருப்பில்  குடித்தனம். குழந்தை வளர்ப்பில் மனைவிக்கு உதவியாக அவளின் தாயாரும் உடன் இருந்து வந்தார். இரண்டு வருடங்கள் சென்ற பின் அந்தப் பெண் மீண்டும் கர்ப்பமானாள். இரண்டாம் முறை கருவுற்று ஏழு மாதங்கள் முடித்த பின் ஆர்வ கோளாரில் மாமியார் இந்தக் குழந்தைக்கும் சீமந்தம் செய்ய வேண்டும் என்று சொல்ல நண்பரும் அதற்கான ஏற்பாடுகளை செய்தார்.                    
                             அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள பக்கத்து வீட்டார் எல்லாரையும் சீமந்தத்திற்கு அழைப்பது என்றுaஅடுக்குமாடி குடியிருப்பிலிருக்கும் அனைவரையும் சீமந்தத்திற்கு அழைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி நண்பரின் மாமியார்  அடுத்த வீட்டிற்கு சென்று நாளை எனது பெண்ணிற்கு சீமந்தம் நீங்கள் அவசியம் வர வேண்டும் என்று அழைப்பு வைத்தார். உடனே அந்தப் பெண்மணி கேட்டார். விஜய் உங்க பொண்ணு பெத்த பிள்ளை இல்லையா? (நண்பரின் பையன் பெயர் விஜய்) என்று கேட்டவுடன் பதறி போன மாமியார். ஏன் கேக்கிறீங்க? விஜய் என் பொண்ணு பெத்த பிள்ளை தான் என்று பதட்டமாக பதில் சொன்னார். இல்லை இரண்டாவது பிள்ளைக்கு சீமந்தம் வைத்திருக்கிறீர்களே அது தான் கேட்டேன் என்று சொன்னார் அடுத்த வீட்டுப்பெண். தலை பிள்ளைக்கு மட்டும் தான் சீமந்த செய்வது மரபு என்ற விபரமே அதற்கு பின் தான் நண்பரின் மாமியாருக்குத் தெரிய வந்தது.

                             தலை பிள்ளைக்கு மட்டுமே சீமந்தம் செய்யும் மரபு நம்மிடையே இன்றும் இருந்து வருவது   என்பது மந்தையில் கூடிய முதல் கூடலின் நீட்சியாக வந்தது தான் சீமந்தம் செய்வது என்று நினைக்க வைக்கிறது.  படிப்படியான சமுக மாற்றங்களை தொடர்ந்து  பெண் தலைமை வீழ்ந்து ஆணாதிக்க சமுகம் உருவானாது. சொத்துக்கு வாரிசை பெற்றுக் கொடுக்க மனைவி எனற பந்தம் உண்டானது. வலுவான சந்ததியை உருவாக்க  அனைத்து இன பெண்பாலுக்கு இயற்கையால் உருவாக்கப்பட்ட  இணையை தெரிவு செய்யும் சுதந்திரமும் கடுமையான தேர்வும் பொறுப்பும்  ஆணாதிக்கத்தால் பெண்களுக்கு மறுக்கப்பட பெண் ஒரு போகப் பொருளாக மாறியதும் மாதொருபாகன்களும் நிர்பயாக்களும்  பனிமூட்டத்திற்கு  அப்பால் அசையும் நிழலுருவங்களாய் ஆகிப் போனதும் மனித சமூகத்தின் பரிணாம வளர்ச்சியின் ஒரு பகுதியா? பெண்ணினம் சந்தித்த பெரும் விபத்தா? ஆணாதிக்க சாதி சமய அடிப்படைவாதிகளின் சதியா? கேள்வியாகவே நிற்கிறது.