Tuesday, 19 May 2015

தேரிக்காடுகள்...
சில தெரிந்தத் தகவல்களும்... 
தெரியாத சேதிகளும்.... 
-வெள் உவன்


தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் காணாத ஒருவகை நிலப்பரப்பை ஒன்றிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் அதாவது இன்றைய நெல்லை-தூத்துக்குடி மாவட்டப் பகுதியில் காணலாம். அவை தேரிக்காடுகள் என்று அறியப்படுகின்றன. சிவந்த மண்ணுடன் பரந்து விரிந்திருக்கும் இந்தத் தேரி காடுகள். விரிந்து பரந்த மணற்பரப்பை கொண்ட இந்த நிலப்பரப்பு தமிழரின் திணைப்பண்பாட்டின் நிலவகையில் ஒன்றான பாலைத்திணையாக சிலரால் கொள்ளப்படுவது உண்டு. 

ஆனால் அது அப்படி அல்ல. பாலை நிலத்திற்கும் இந்தத் தேரிக்காடுகளுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. பாலை நிலம் தண்ணீர் இல்லாத வரண்ட நிலப்பரப்பாகும் ஆனால் இந்தத் தேரிகளின் மணற்குன்றுகள் மழை நீரைத் தேக்கிவைக்கும் இயற்கை அணைகள். பருவத்தில் பெய்யும் மழையைச் சேகரித்து அவை ஆண்டு முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றுகின்றன. மழை மறைவுப் பிரதேசத்தில் அமைந்திருக்கும் இந்த தேரிகள் இல்லை என்றால் இந்த நிலப்பகுதியில் நீர் வளம் கிடையாது. 

இயற்கையின் கொடையான இந்தத் தேரிகள் எப்படி உருவாகுகின்றன? அந்தப் பகுதியின் நிலஅமைப்பும் இயற்கையின் செயல்பாடுகளுமே இவ்வாறான தேரிக்காடுகள் உருவாக காரணமாக அமைகின்றன என்று கருத இடமிருக்கிறது. இந்த நெல்லை பகுதி தேரிகள் உருவாக மேற்குத்தொடர்ச்சி மலைகளே காரணமாகின்றன. மேற்குமலை தொடரில் அமைந்துள்ள முக்கிய கணவாய் ஆரல்வாய்மொழி கணவாய் ஆகும். மேற்கிலிருந்து வலுவான வேகத்தில் விசுகிற காற்று மேற்குத் தொடர்ச்சி மலையை கடந்து செல்ல இருக்கிற ஒரே வழி இந்த ஆரல்வாய்மொழி கணவாய் மட்டுமே. அது கடந்து வருகிற பாதை எங்கும் சிதறி பரந்து கிடக்கிற செம்மணல் துகள்களை வாரி சுருட்டி எடுத்துச் செல்கிறது வலுமிக்க இந்த பருவக்காற்று. வலுவாக மலையை கடந்து வருகிற இந்தக் காற்று கடலை நெருங்க நெருங்க வலுவிழந்து போவதால், தான் சுமந்து வருகிற மணல் துகள்களை மலைக்கும் கடலுக்கும் இடைப்பட்ட நிலப்பகுதியில் தூவிவிட்டு போய் விடுகிறது. 

இந்த நிகழ்வு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இயற்கையினால் பருவகாலங்களில் தொடர்ந்து நிகழ்த்தப்பட்டதன் விளைவே தேரிக்காட்டின் மணல் குன்றுகள். மழை மறைவுப் பிரதேசத்தில் அமைந்திருக்கும் தேரிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்த நம் முன்னோர்கள் முந்திரிக்காடுகளை வளர்த்துக் காற்றால் ஏற்படும் மண் அரிப்பைத் தடுத்துத் தேரிகளைக் காப்பாற்றும் வழியை கைகொண்டு வந்திருக்கின்றனர். முருங்கை, கொய்யா, மா, முந்திரி போன்ற பணப்பயிர்கள் செழித்து வளர்கிற வளமான விவசாய பூமி தான் இந்தத் தேரிக்காடுகள். 

மேற்கிலிருந்து வேகமாக வீசி கடக்கிற இந்தக் காற்று ஒரு குறிப்பிட்ட வழியிலேயே செல்கிறது. பல்லாயிரம் ஆண்டுகள் தொடர்ந்து செல்கிற அந்த வழி எங்கும் தேரிக்காடுகளை உருவாக்கிச் செல்கிறது. இந்தப் பாதையில் உள்ள முக்கிய ஊர்களின் பெயர்களில் ஓர் ஒற்றுமையை நம்மால் காணமுடிகிறது. இந்தக் காற்று வழியில் காணப்படுகிற அநேக ஊர்கள் மொழி என்றே முடிகின்றன. இந்தக் காற்று வழி தொடங்குகிற கணவாய் ஊர் ஆரல்வாய் மொழி. தொடர்ந்து காற்று செல்லும் வழியெங்கும் காணப்படும் முக்கியமான சில ஊர்களின் பெயர்கள் இட்டமொழி, காயாமொழி, குதிரைமொழி என்பதாக இருக்கின்றன. இப்படி மொழியில் முடிகிற இன்னும் சில ஊர்களும் உண்டு. 

இந்தக் காற்று வழியெங்கும் இன்றைய நாளில் மின் உற்பத்தி செய்யும் காற்றலைகள் உருவாகி இந்தக் காற்றுப் பாதையை நாம் எளிதாக அடையாளம் கொள்ள வழி வகுத்திருக்கின்றன. வரலாற்றோடு தொடர்புடைய ஒரு மொழி ஊரும் உண்டு. சோனகம் என்பதற்கு அரபுநாடு என்றும் சோனகர் என்றால் அரேபியர் என்றும் பொருள் சொல்கிறது தமிழ் லெக்சிகன். திருச்செந்துரை ஒட்டி இன்றும் சோனகன்விளை என்ற ஊர் உண்டு. கிழக்கு கடற்கரை துறைமுகத்தில் அரேபியாவில் இருந்து இறக்குமதியாகிற குதிரைகளை சோனகர் வளர்த்து வந்த ஊர் தான் சோனகன்விளையாகும். அவர்கள் அந்தக் குதிரைகளை மேய்த்த ஊர் தான் குதிரைமொழியாகும். குதிரைமொழித் தேரியில் செழித்த வளர்ந்த புல்வெளிகளே மேய்ச்சல் காடாக இருந்திருக்கின்றன. இந்த செய்தியை உறுதி செய்கிறது திருநெல்வேலி மாவட்டம் திருபுடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில் உள்ள சுவர் ஓவியங்கள்.

Sunday, 3 May 2015
தமிழ் சினிமாவில் ஜே.கே


                                                                                                                             -வெள்உவன்இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட பாரம்பரியம் கொண்டது தமிழ் இலக்கியம். சங்க இலக்கியம் தொடங்கி நீதி நூல்க்ள் காப்பியங்கள் பக்தி இலக்கியம் நாட்டார் இலக்கியம் என்று பல பரிமாணங்களை கொண்ட அது ஐரோபியர் வருகைக்குப் பின் உரைநடை இலக்கியம் என்கிற புதிய வடிவத்தையும் உள்வாங்கிக் கொண்டு அதிலும் சிறக்கலாயிற்று. தமிழின் தற்கால புனைவு இலக்கிய முன்னோடிகள் பலர் இருப்பினும் புதுமைபித்தனுக்கான இடம் என்பது தனியானது. புதுமைபித்தனுக்குப் பின் அந்த இடத்தை நெருங்கி வந்தது ஜேகே என்று நெருக்கமான நண்பர்களால் அழைக்கப்பட்ட ஜெயகாந்தன் தான். அவரது எழுத்துகளில் காணப்பட்ட எளிமை அழுத்தம் யதார்த்தம் காட்சி விவரணைத்தன்மை போன்றன அவரை தனியாக அடையாளம் காட்டின.
அவரது சிறுகதையான ஆணும் பெண்ணும் என்னும் புள்ளியிலிருந்து 1953-ல் தொடங்கியது அவரது இலக்கியப் பயணம் என்கிறது ஒரு தகவல். சிறுகதை தொடர்கதை குறுநாவல் நாவல் கட்டுரை கவிதை என்று பல தளங்களில் இயங்கி தற்கால தமிழ் இலக்கியத்தின் தனித்துவமான படைப்பாளியாக உருவானார். தொடக்க காலத்தில் சமரன் சாந்தி சரஸ்வதி தாமரை போன்ற இலக்கிய இதழ்களில் அவரது சிறுகதைகள் வெளி வந்தன. Aஅவரது எழுத்தின் வீச்சு ஆனந்த விகடனில் தொடர்ந்து எழுதும் வாய்ப்பை அவருக்கு உருவாக்கித் தந்தது. அவர் எழுதிய மிகச் சிறந்த சிறுகதைகள் முத்திரைகதைகள் என்ற சிறப்புடன் தொடர்ந்து விகடனில் வெளி வந்தன. அவரது படைப்புகளில் சில பின்நாளில் திரைப்படங்களாகவும் வடிவெடுத்தன.
படைப்பாளியான அவருக்குப் பத்திரிகை ஆசிரியர் என்ற பரிணாமும் உண்டு. 60களில் அவரை ஆசிரியராகக் கொண்டு வெளி வந்த ‘ஞானரதம்’ மாத இதழ் சிற்றிதழ் வரலாற்றில் முத்திரை பதித்த ஒன்று. தலையங்கம் போன்ற சாயல் கொண்ட அவரது உரத்த சிந்தனை பகுதி ஞானரதத்தின் முடி முத்து. அதில் அவர் எழுதிய கருத்துகள் அந்தக் காலத்தில் ரசனையில் சிந்தனையில் படைப்பில் புதிய ரத்தத்தைப் பாய்ச்சியது. அனுபவமும் ஆற்றலும் வாய்ந்த மூத்த படைபாளிகளின் படைப்புகளுக்கு ஊடே இளம் எழுத்தாளர்கள் புதிய எழுத்தாளர்களின் படைப்புகளையும் கொண்டு வெளி வந்தது ஞானரதம். புதுமைபித்தன் காலத்திய மணிக்கொடிக்கு ஒப்பானதாக இருந்தது அது.
ஜெயகாந்தனின் மற்றுமொரு பரிமாணம் சினிமா. சிறந்த எழுத்துலக படைப்பாளிகள் சினிமாவிலும் சாதிக்க எண்ணியது புதுமைபித்தன் காலம் தொடங்கி இருந்து வருகிறது. ஆனால் புதுமைபித்தனால் சினிமாவில் பெரிய அளவில் ஏதும் செய்ய இயலவில்லை. சினிமாவில் நுழைந்த சிறிது காலத்திலேயே அவர் மறைந்தது ஒரு துரதிஷ்டமே. கல்கி விந்தன் போன்ற படைப்பாளிகளும் சினிமாவை தொட்டுப் பார்த்து திரும்பியவர்கள் தான். சினிமாவும் எழுத்தும் படைப்பு ரீதியில் ஒரே தளத்தில் இயங்கினாலும் இயல்பில் இரண்டும் வேறு வேறு திசையில் பயணிக்கும் தனித்தனி ஊடகங்கள என்பது வெளிப்படை. இருந்தும் ஒரு எழுத்துப் படைப்பு திரைப்படமாகும் போது இயக்குநரின் ஆழமான இலக்கியப்பரிச்சயமும் புரிதலும் தான் அந்தப் படைப்பின் வெற்றிக்கு பெரிதும் துணை புரியும் என்பது தவிர்க்க இயலாத ஒரு நிலைமை. தன்னுடைய எழுத்து முன்னோடிகளின் அடி ஒற்றியே ஜெயகாந்தனின் திரைஉலக பிரவேசமும் நடந்தது.
பளபளப்பு ஆடம்பரம் ஆரவாரம் யதார்த்தை விட்டு வெகுதூரம் விலகிவிட்ட அதீத புனைவு என்கிற அடிப்ப்டையில் இயங்கும் தமிழ் சினிமாவில் வேதனை அவமானம் அசிங்கம் ஏமாற்றம் வலி தோல்வி என்று விளிம்பு நிலை மக்களின் உணர்வுகளையே அதிகம் பேசிய அவரது படைப்புகள் எப்படி பொருந்தி வெற்றியை தொடும் என்பது பொதுவில் எழும் கேள்வி தான். இருந்தாலும் சிறந்த உலக திரைப்படங்கள் பலவற்றின் மூலம் யதார்த்தத்தை எப்படி ரசிக்கும் வகையில் தமிழ் சினிமாவில் கொண்டு வர முடியும் என்கிற நுட்பத்தைப் புரிந்து கொண்ட ஜெயகாந்தன் இயக்கத்தில் வெளி வந்த முதல் திரைப்படம் உன்னைப் போல் ஒருவன். ஏகலைவனாக சினிமாவின் நுட்பத்தைக் கற்றுக் கொண்ட ஜெயகாந்தன் இயக்கிய இந்த முதல் படமே சிறந்த பட்த்துக்கான தேசிய விருதை பெற்று அவரது மகுடத்தில் மேலும் ஒரு வைரத்தைப் பதித்தது.
தொடர்ந்து அவர் இயக்கிய இரண்டாவது படம் யாருக்காக அழுதான். நாகேஷ் கே.ஆர். விஜயா போன்ற பிரபல நட்சத்திரங்களின் நடிப்பில் உருவான அந்தத் திரைப்படமும் தமிழின் மற்றுமொரு தரமான படம் என்று தீவிர சினிமா ரசிகர்களால் கொண்டாடப்ப்பட்டது. ஜெயகாந்தனின் இயக்கத்தின் தனித் தன்மையை புரிந்து கொள்ள இந்தப் படத்தில் அவர் கையாண்ட ஒரு யுக்தியே போதும். அந்தக் காலத்தில் ‘பிளாஷ்பேக்’ காட்சியின் குறியீடாக் கொசுவத்தி சுருள் போன்ற ஒரு வட்டம் சுழலுவது போன்ற . யுக்தியே பொதுவாக எல்லா இயக்குநர்களாலும் பயன்படுத்தபட்டு வந்தது. இப்படியான சூழ்லில் தான் ஜெயகாந்தன் யாருக்காக அழுதான் படத்தில் வரும் ஒரு பிளாஷ்பேக் காட்சியின் குறியீடாக எதிர்மறை படிமங்களை (negative images) பயன்படுத்தியிருப்பார். அதுவரை பிளாஷ்பேக் காட்சியின் குறியீடாக இப்படி ஒரு யுக்தி தமிழ் சினிமாவில் பயன்படுத்தியது இல்லை என்று அன்றைய நாளில் பெரிதாகப் பேசப்பட்டது. ஜெயகாந்தன் இயக்கிய இந்த இரண்டு திரைப்படங்களும் தீவீர திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்களாலும் சிலாகிக்கப்பட்டது என்னவோ உண்மை தான். ஆனாலும் வணிகரீதியில் பெரும் வெற்றி பெறவில்லை என்பது தான் யதார்த்தமாக இருந்தது. இதுவோ அல்லது வேறு காரணமோ தெரியவில்லை ஜெயகாந்தன் திரைத்துறையை விட்டு சில காலம் விலகியே இருந்து வந்தார்.
இந்தச் சூழ்நிலையில் தான் அன்று பிரபலமாக இருந்த வெற்றிப்பட இயக்குநர் ஏ.பீம்சிங் சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற ஜெயகாந்தனின் நாவலை திரைப்படமாக்கும் எண்ணத்தில் அவரை அணுகினார். அதுவரை பாலும் பழமும் பாசமலர் பந்தபாசம் என்று அதீத புனைவு குடும்ப சித்திரங்களையே இயக்கிய அவரால் இந்த நாவலை இயக்க முடியுமா என்ற சந்தேகம் தோன்றியதோ என்னவோ கடுமையான பல நிபந்தனைகளுக்கு உட்படுத்தியே ஜெயகாந்தன் தனது நாவலை படமாக்க சம்மதம் தெரிவித்தார். பீம்சிங்கும் நாவலுக்கான திரைகதை வசனத்தை ஜெயகாந்தனையே எழுத கேட்டுக்கொண்டார்.
சில நேரங்களில் சில மனிதர்கள் நாவல் எழுதும் முன் சில சுவராஸ்யமான சம்பவங்களும் உண்டு. ஆனந்தவிகடனில் ஜெயகாந்தன் எழுதிய அக்னிபிரவேசம் என்ற சிறுகதை வெளியான போது அது பரவலான பாராட்டுக்கும் கடுமையான விமர்சனத்துக்கும் உள்ளானது அந்த சிறுகதையின் தொடர்ச்சியே சில நேரங்களில் சில மனிதர்கள் நாவல். அந்த நாளில் தினமணி கதிர் என்ற பெயரில் எழுத்தாளர் சாவியை ஆசிரியராகக் கொண்டு ஒரு வார இதழ் வெளி வந்து கொண்டிருந்தது. ஜெயகாந்தன் எழுதும் காலங்கள் மாறும் என்ற தொடர் கதை குறிப்பிட்ட இதழில் இருந்து வெளிவர இருக்கிறது என்ற விளம்பரம் தினமணி கதிரில் வெளி வந்தது
“காலங்கள் மட்டுமல்ல தலைப்பும் மாறும் என்ற விளக்கத்துடன் சில நேரங்களில் சில மனிதர்கள் என்று மாறிய தலைப்பில் தொடர்கதை குறிப்பிட்ட இதழிலிருந்து வெளிவர தொடங்கியது... இந்த நாவலை எழுதுவதன் மூலம் என்னைப் புதிதாய் ஒரு சோதனையில் நான் ஈடுபடுத்திக் கொண்டேன். காலங்கள் மாறும் போது மனிதர்களும் மாறித்தான் ஆக வேண்டும். மாறிய மனிதர்களைக் காலத்தின் பல மாற்றமே காண வைக்கிறது. மாற்றங்கள் சமுதாய வாழ்வில் புதுமையானைவயாக இருந்தாலும் தனி மனிதர்கள் வாழ்வில் காலங்கடந்த மாற்றங்களாகவே, நிராசைகளின் நிலைத்த சித்திரங்களாகவே உயிரிழந்து வந்து நிற்கின்றன. காலத்தின் அலைகளால் ஏற்றுண்டு மோதி மூழ்கிய போக்கில் மிதந்து எதிர்த்து ஓய்ந்த ஓர் ஆத்மாவின் கதை இது” என்ற ஜெயகாந்தனின் குறிப்புடன் தொடங்கியது தொடர் கதை.
ஜெயகாந்தனின் வலுவான திரைகதை வசனத்திலும் ஏ.பீம்சிங்கின் அனுபவம் மிக்க இயக்கத்திலும் சில நேரங்களில் சில மனிதர்கள் படம் உருவாகி 1977ல் படம் வெளியானது. தரம் சார்ந்து எல்லா தரப்பினரின் பாரட்டையும் பெற்றதுடன் வணிகரீதியிலும் அது ஒரு வெற்றி படமானது. இந்த வெற்றியின் காராணமாக ஜெயகாந்தனின் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் என்ற நாவலையும் திரைப்படம் ஆக்கும் வேலையில் இறங்கினார் பீம்சிங். ஆனால் படதயாரிப்பின் பாதியிலேயே பீம்சிங் காலமானர்.
அவரது மறைவுக்குப் பின் பீம்சிங்கின் உதவியாளர்களான திருமலை-மகாலிங்கம் என்ற இருவரையும் இரண்டாம் யூனிட் இயக்குனராகக் கொண்டு படத்தை முடித்து வெளியிட்டார் ஜெயகாந்தன். ஜெயகாந்தனின் இயக்கத்தில் உருவான உன்னைப் போல் ஒருவன் மற்றும் யாருக்காக அழுதான் என்ற இரண்டு படமும் ஜெயகாந்தனின் வலுவான திரைகதை வசனத்துடன் அனுபவமிக்க இயக்குநர் ஏ. பீம்சிங்கின் இயக்கத்தில் வெளி வந்த சில நேரங்களில் சில மனிதர்கள் மற்றும் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் என்கிற இரண்டு திரைப்படங்களும் நூறு வருடங்கள் கடந்தாலும் தமிழ் சினிமாவில் நிச்சயம் பேசப்படப் போகும் படைப்புகளாகும்.