Tuesday, 19 May 2015

தேரிக்காடுகள்...
சில தெரிந்தத் தகவல்களும்... 
தெரியாத சேதிகளும்.... 
-வெள் உவன்


தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் காணாத ஒருவகை நிலப்பரப்பை ஒன்றிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் அதாவது இன்றைய நெல்லை-தூத்துக்குடி மாவட்டப் பகுதியில் காணலாம். அவை தேரிக்காடுகள் என்று அறியப்படுகின்றன. சிவந்த மண்ணுடன் பரந்து விரிந்திருக்கும் இந்தத் தேரி காடுகள். விரிந்து பரந்த மணற்பரப்பை கொண்ட இந்த நிலப்பரப்பு தமிழரின் திணைப்பண்பாட்டின் நிலவகையில் ஒன்றான பாலைத்திணையாக சிலரால் கொள்ளப்படுவது உண்டு. 

ஆனால் அது அப்படி அல்ல. பாலை நிலத்திற்கும் இந்தத் தேரிக்காடுகளுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. பாலை நிலம் தண்ணீர் இல்லாத வரண்ட நிலப்பரப்பாகும் ஆனால் இந்தத் தேரிகளின் மணற்குன்றுகள் மழை நீரைத் தேக்கிவைக்கும் இயற்கை அணைகள். பருவத்தில் பெய்யும் மழையைச் சேகரித்து அவை ஆண்டு முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றுகின்றன. மழை மறைவுப் பிரதேசத்தில் அமைந்திருக்கும் இந்த தேரிகள் இல்லை என்றால் இந்த நிலப்பகுதியில் நீர் வளம் கிடையாது. 

இயற்கையின் கொடையான இந்தத் தேரிகள் எப்படி உருவாகுகின்றன? அந்தப் பகுதியின் நிலஅமைப்பும் இயற்கையின் செயல்பாடுகளுமே இவ்வாறான தேரிக்காடுகள் உருவாக காரணமாக அமைகின்றன என்று கருத இடமிருக்கிறது. இந்த நெல்லை பகுதி தேரிகள் உருவாக மேற்குத்தொடர்ச்சி மலைகளே காரணமாகின்றன. மேற்குமலை தொடரில் அமைந்துள்ள முக்கிய கணவாய் ஆரல்வாய்மொழி கணவாய் ஆகும். மேற்கிலிருந்து வலுவான வேகத்தில் விசுகிற காற்று மேற்குத் தொடர்ச்சி மலையை கடந்து செல்ல இருக்கிற ஒரே வழி இந்த ஆரல்வாய்மொழி கணவாய் மட்டுமே. அது கடந்து வருகிற பாதை எங்கும் சிதறி பரந்து கிடக்கிற செம்மணல் துகள்களை வாரி சுருட்டி எடுத்துச் செல்கிறது வலுமிக்க இந்த பருவக்காற்று. வலுவாக மலையை கடந்து வருகிற இந்தக் காற்று கடலை நெருங்க நெருங்க வலுவிழந்து போவதால், தான் சுமந்து வருகிற மணல் துகள்களை மலைக்கும் கடலுக்கும் இடைப்பட்ட நிலப்பகுதியில் தூவிவிட்டு போய் விடுகிறது. 

இந்த நிகழ்வு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இயற்கையினால் பருவகாலங்களில் தொடர்ந்து நிகழ்த்தப்பட்டதன் விளைவே தேரிக்காட்டின் மணல் குன்றுகள். மழை மறைவுப் பிரதேசத்தில் அமைந்திருக்கும் தேரிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்த நம் முன்னோர்கள் முந்திரிக்காடுகளை வளர்த்துக் காற்றால் ஏற்படும் மண் அரிப்பைத் தடுத்துத் தேரிகளைக் காப்பாற்றும் வழியை கைகொண்டு வந்திருக்கின்றனர். முருங்கை, கொய்யா, மா, முந்திரி போன்ற பணப்பயிர்கள் செழித்து வளர்கிற வளமான விவசாய பூமி தான் இந்தத் தேரிக்காடுகள். 

மேற்கிலிருந்து வேகமாக வீசி கடக்கிற இந்தக் காற்று ஒரு குறிப்பிட்ட வழியிலேயே செல்கிறது. பல்லாயிரம் ஆண்டுகள் தொடர்ந்து செல்கிற அந்த வழி எங்கும் தேரிக்காடுகளை உருவாக்கிச் செல்கிறது. இந்தப் பாதையில் உள்ள முக்கிய ஊர்களின் பெயர்களில் ஓர் ஒற்றுமையை நம்மால் காணமுடிகிறது. இந்தக் காற்று வழியில் காணப்படுகிற அநேக ஊர்கள் மொழி என்றே முடிகின்றன. இந்தக் காற்று வழி தொடங்குகிற கணவாய் ஊர் ஆரல்வாய் மொழி. தொடர்ந்து காற்று செல்லும் வழியெங்கும் காணப்படும் முக்கியமான சில ஊர்களின் பெயர்கள் இட்டமொழி, காயாமொழி, குதிரைமொழி என்பதாக இருக்கின்றன. இப்படி மொழியில் முடிகிற இன்னும் சில ஊர்களும் உண்டு. 

இந்தக் காற்று வழியெங்கும் இன்றைய நாளில் மின் உற்பத்தி செய்யும் காற்றலைகள் உருவாகி இந்தக் காற்றுப் பாதையை நாம் எளிதாக அடையாளம் கொள்ள வழி வகுத்திருக்கின்றன. வரலாற்றோடு தொடர்புடைய ஒரு மொழி ஊரும் உண்டு. சோனகம் என்பதற்கு அரபுநாடு என்றும் சோனகர் என்றால் அரேபியர் என்றும் பொருள் சொல்கிறது தமிழ் லெக்சிகன். திருச்செந்துரை ஒட்டி இன்றும் சோனகன்விளை என்ற ஊர் உண்டு. கிழக்கு கடற்கரை துறைமுகத்தில் அரேபியாவில் இருந்து இறக்குமதியாகிற குதிரைகளை சோனகர் வளர்த்து வந்த ஊர் தான் சோனகன்விளையாகும். அவர்கள் அந்தக் குதிரைகளை மேய்த்த ஊர் தான் குதிரைமொழியாகும். குதிரைமொழித் தேரியில் செழித்த வளர்ந்த புல்வெளிகளே மேய்ச்சல் காடாக இருந்திருக்கின்றன. இந்த செய்தியை உறுதி செய்கிறது திருநெல்வேலி மாவட்டம் திருபுடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில் உள்ள சுவர் ஓவியங்கள்.

No comments:

Post a Comment