Tuesday, 2 June 2015


 அம்ருதா மே 2015 இதழில் வெளியான கட்டுரை

எட்டிப் பார்க்கும் பிசாசு
                                             
 -வெள் உவன்

தங்க நாற்கர சாலையில் நான் பயணித்த வண்டி விரைந்து 
கொண்டிருக்கிறது. முழுவதுமாக ஏற்றப்பட்ட கண்ணாடிகளுக்கு வெளியே பக்கவாட்டில் சாலையின் எல்லயை தாண்டி விரிகிறது நிலப்பரப்பு. கண்ணுக்கு எட்டிய வரை கட்டாந்தரையாய் விரிகிற பூமியில் ஒரு மரம் கூட இல்லை. ஆனால் குட்டி குட்டியாய் vவெள்ளை அடிக்கப்பட்டு நடப்பட்டிருக்கும் நடுகற்களை நினைவுக்குக் கொண்டுவரும் எல்லை கற்கள், நிலம் மனைப்பிரிவுகளாய் பிரிக்கப்பட்டிருப்பதை காட்டிக் கொண்டிருந்தன. சாலையின் இரு பக்கமும் இது தான் கதை. இந்த நகர், அந்த நகர் என்ற பெயர் பலகைகள் மட்டும் விர் விரென்று கடந்து கொண்டிருந்தன. ஒன்று மட்டும் எனக்குப் புரியவில்லை. இந்த மனைபிரிவுகளுக்கு அருகில்...அருகில் என்ன கண்ணுக்கு எட்டிய தூரம் வரையிலும் எந்த குடியிருப்போ ஊரோ தெரியவில்லையே. அத்துவான காடாய் இருக்கிறதே. எப்படி இங்கே வீடு கட்டி குடியிருப்பார்கள்? என்ற கேள்வி என்னுள் எழுந்தது. கேள்வியை ஒட்டி சில சிந்தனைகளும் கூடவே வந்தன.அந்த காலத்தில் ஓர் ஊரின் அமைப்பு எப்படி இருந்தது தெரியுமா? 
ஓர் ஊர் அமைப்பை பல காரணிகள் நிர்ணயித்தன. அதிலுள்ள மண்ணின் அமைப்பு, முக்கிய பாத்திரம் வகித்தது. மண்ணின் அமைப்புக்கேற்ப நிலத்தை நம் முன்னோர்கள் மூன்று வகைகளாகப் பிரித்திருந்தார்கள். உயர்தரம், நடுத்தரம், கடைத்தரம் என்பனவே அவை. இதை கண்டறிய ஓர் எளிய முறையை கையாண்டனர். நிலத்தில் ஒரு குழிபறித்து மண்ணை வெளியே எடுத்து மீண்டும் அதே மண்ணால் அந்தக் குழியை நிரப்ப வேண்டும். குழி நிறைந்து மண் மீதமிருந்தால் அந்த நிலம் உயர்தரம் என்பதாகவும், மண் மீதமில்லாமல் குழி நிரப்பப்பட்டால் அது நடுத்தரம் என்பதாகவும், தோண்டி வெளியே எடுத்த மண் முழுவதையும் குழிக்குள் கொட்டிய பின்னும் குழி நிரம்பவில்லை என்றால் அது கடைத்தரம் என்பதாகவும் கொள்ளபட்டது. மண்ணின் நிறம், மணம், அது எழுப்பும் ஒலி, அதன் சுவை போன்றவையும் ஊர் அமைப்பில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன.பொதுவாக அந்தக் காலத்தில் சற்று மேடிட்ட இடத்தில் தான் ஊர்கள் உருவாக்கப்பட்டன. ஊரெல்லைக்கு பின் நிலம் சிறிது தாழ்ந்திருக்கும். அதே நேரத்தில் நில அமைப்பின் சாய்வும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. வடக்கை அல்லது வடகிழக்கை நோக்கிச் செல்லும் சாய்வைக் கொண்ட மண்ணின் மீதே குடியிருப்புகள் அமைக்கப்பட்டன. நமது எல்லா ஊர்களிலும் ஒரு பொதுத் தன்மை உண்டு. நகரமாக இருந்தாலும் சிற்றூராக இருந்தாலும் அதன் எல்லையில் ஆறு, ஓடை போன்ற ஏதாவது ஒன்று அந்த ஊரின் சாலையை ஊடறுத்துச் செல்லுவதை நாம் காண முடியும்.வை.கணபதி ஸ்தபதி இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டுக் கையேட்டில் ஊரமைப்புக்கலை' பற்றியொரு விரிவான கட்டுரை எழுதியுள்ளார். அதில் மயமதத்தினொரு பிரிவான சிற்பநூல் சொல்கிற நகரமைப்புப் பற்றியும் விவரிக்கிறார். மயமத அடிப்படையிலமைந்த ஊரமைப்பானது அதன் சுற்றளவின் அடிப்படையில் ஐந்து வகைகளாகப் பிரிக்கப்பட்டிருந்ததையும் அறிய முடிகிறது. 20,000தண்டங்களைச் சுற்றளவாகக் கொண்ட கிராமம் (ஒரு தண்டமென்பது நான்கு தச்சுமுழங்களை அதாவது பதினொரு அடிகளை குறித்தது)., 40,000 தண்டங்களை சுற்றளவாகக் கொண்ட கிராமம், 60,000 தண்டங்களை சுற்றளவாகக் கொண்ட கிராமம், 80,000 தண்டங்களைச் சுற்றளவாகக் கொண்ட கிராமம், 1,00,000 தண்டங்களை சுற்றளவாகக் கொண்ட கிராமம் என கிராமங்கள் பல்வேறு அளவுகளில் அமைக்கப்பட்டன. இவ்விதமான கிராமங்களின் இருபதில் ஒரு பாகத்தில் மட்டுமே வீடுகள் கட்ட ஒதுக்கப்பட்டன. எஞ்சியவற்றில் விளைநிலங்கள், நீர்நிலைகள், மேய்ச்சல் நிலங்கள், விருட்சங்கள், தோப்புகள் போன்றவற்றுக்கென ஒதுக்கப்பட்டன.இவ்விதமாக நகர அமைப்பானது கிராமம், கேடம், கர்வடம், துர்க்கம், நகரம் ,கோநகர் எனபதாக பரிணாம வளர்ச்சியுற்று வந்ததை மேற்படிக் கட்டடக்கலை/நகரமைப்பு நூல்கள் குறிக்கின்றன. மேலும் தெருக்கள் எப்படி எந்த அளவுகளில் இருக்க வேண்டும் என்பது பற்றிய குறிப்புகளும் கிடைக்கின்றன.     

1. நகரைச் சுற்றி மதில் அமைக்கப்படும்.

2. வடக்கு தெற்காகவும், கிழக்கு மேற்காகவும் செல்லும் வீதிகளால் பிரிக்கப்பட்ட பல சிறு சிறு சதுரங்களை உள்ளடககிய பெரிய சதுரமாக நகர் காணப்படும்.

3. நகரமானது வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்காகச் செல்லும் அகன்ற இரு இராஜ வீதிகளால் பிரிக்கப்பட்டிருக்கும்.

4. இவ்விதம் அமைக்கப்படும் இராஜபாட்டையானது நகரின் தன்மைக்கேற்ப அளவில் வேறுபடும். உதாரணமாக மாநகர்களைப் பொறுத்தவரையில் இந்த இராஜபாட்டை 40 அடி அகலமுடையதாகவும், சாதாரண நகரங்களைப் பொறுத்தவரையில் 30 அடி அகலமுடையதாகவும், வெறும் சந்தையை மட்டுமே கொண்டதாகவிருக்கும் நகரமாயின் 25 அடி அளவுடையதாகவுமிருக்கும்.

5. நகரினைச் சுற்றிவர மதிலின் உட்புறமாகவும் பாதையொன்று அமைக்கப்படும். இராஜபாட்டையின் அகலத்தையொத்ததாக இப்பாதையிருக்கும்.அந்தக் காலத்தில் ஒரு நகரம் அல்லது கிராமம் என்பதில் ஒரு அரண்மனை, கோட்டை, கோவில் ஆகியவற்றைச் சுற்றியே சுகாதாரமான குடியிருப்புகள் அமைத்திருந்தன. கடம்பவனம், புன்னைவனம், சம்பகவனம், பாரிஜாதவனம், அரசவனம், இலுப்பைவனம், மகிழவனம், வேங்கைவனம், அசோகவனம், வன்னிவனம், வேப்பவனம், தில்லைவனம், வில்வவனம், தாழைவனம், மருதவனம் என்ற பெயர்களில் ஊரிலும் ஊரை சுற்றிலும் ஏராளமான நந்தவனங்கள் இருந்தன.

இந்த நேரத்தில் எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தையும் பகிர்ந்துகொள்ள தோன்றுகிறது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தை ஒட்டி அமைந்திருக்கிற கேம்ஸ் வில்லேஜில் இரண்டு நாட்கள் தங்கியிருக்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டது. எனது உறவினர் வீடு அங்கு இருக்கிறது. அங்கு தான் தங்கியிருந்தேன். உண்மையில் சென்னை நகருக்குள் இப்படி குடியிருப்பு பகுதி என்பது சற்று வித்தியாசமான ஒன்று நினைத்தேன். ஏனென்றால் சோலையாக அந்த குடியிருப்பு முழுவது பச்சை பசேல் என்று மரங்கள். ஓங்கி வளர்ந்திருக்கும் மரங்களுக்கு ஊடே தான் ஒளிந்து கொண்டிருந்தன அங்கு இருந்த அடுக்குமாடி கட்டடங்கள்.சென்னையிலா இப்படி? ஆச்சரியம் தான். மனதிற்கு இதமாகவும் இன்பமாகவும் இருந்தது. இரவு உறவினரின் வீட்டில் தான் கழிந்தது. இப்படி ஒரு நிசப்தமான இடம் சென்னை நகருக்குள் என்பது நம்ப முடியாமல் இருந்தது. விடிந்தது. சித்தப்பா காப்பி குடியுங்கள் என்ற மகளின் உபசரிப்பில் எழுந்தேன். காபியை குடித்து முடித்தேன். சுவையான காபியின் ருசி இன்னும் நாக்கில் ஒட்டிக் கொண்டிருந்தது. ஒரு நடை போனால் என்ன என்று தோன்றவே சட்டையை எடுத்து போட்டபடியே வெளியே கொஞ்சம் வாக்கிங் போய்ட்டு வரேன் அம்மா என்று சொல்லிவிட்டு வீட்டை விட்டு கிளம்பினேன். வெளியே சாலைக்கு வந்தேன். இதை சாலை என்பதா? தெரு என்பதா? கொஞ்சம் குழப்பமாக தான் இருந்தது. அந்த விடிகாலைக் காற்று முகத்தை லேசாய் தடவிச் சென்ற தன்மை  இதமாக தான் இருந்தது. ஆனால் ஏதோ குறைவதாகத் தோன்றிக் கொண்டே இருந்தது. என்னவாக இருக்கும்? என்னவாக இருக்கும்? மனதிற்குள் குடைச்சல்.எதிரில் சிலர் கடந்து போய் கொண்டிருந்தனர். நடைப்பயிற்சிக்கு தான் சென்று கொண்டிருக்கிறார்கள் போலும். ஒர் இளம் தம்பதியினர் என்னை கடந்து சென்றனர். அந்த பெண் சேலை உடுத்தியிருந்தாலும் காலில் உயர் ரக கேன்வாஸ் சூ அணிந்திருந்தாள். அது ஏன் வாக்கிங் செல்பவர்களில் பெரும்பாலோர் சூ அணிந்து செல்கிறார்கள் என்ற கேள்வி  நெடுநாளாய் இருந்து கொண்டிருக்கும் ஒன்று. அந்த சூழ்நிலைக்கு ஏதோ ஒன்று குறைகிறதே என்ற கேள்வியை  இன்னும் சுமந்தபடி நடந்து கொண்டு இருந்தேன். எதிர்வரிசையில் பருத்தத் தூருடன் அடர்ந்து படர்ந்து ஓங்கி வளர்ந்திருந்தது அந்த மரம். பிரமிப்புடன் அதை அண்ணாந்து பார்த்தேன். என்ன உயரம். என்ன அடர்த்தி. பிரமிப்பு இன்னும் அதிகமானது. அது என்ன மரமாக இருக்கும். யோசித்துப் பார்த்தேன். இது போன்ற மரத்தை இதுவரை பார்த்த மாதிரி இல்லையே. யோசித்துப் பார்த்தேன். இல்லை தான். இல்லை தான்.அப்போது தான் புரிந்தது இது நம்ம ஊர் மரமே இல்லை வெளிநாட்டு மரம் என்று. சுற்றிலும் பார்த்தேன். எல்லாம் வெளிநாட்டு மரம். ஒரு வேப்பமரம் ஒரு புளியமரம் ஒரு மாமரம் ஒரு கொய்யாமரம் என்று ஒன்று கூட அங்கு இல்லை. மருந்துக்கு கூட நம்ம ஊர் மரம் இல்லை. நம்ம ஊரில் ஒரு வேப்பமரம் இருந்தாலே அதில் எத்தனை வகை பறவைகள் வந்து உட்காரும். அணில்கள் எத்தனை மரத்தில் ஏறி ஓடும். இது மாதிரி விடிகாலை நேரங்களில் நம்ம ஊர் மரங்களில் பறவைகளின் கூச்சலும் அணில்களின் கீச்சிடலுமாய் ஒரு இசைக் கச்சேரியே நடந்து கொண்டிருக்குமே.இப்படி எண்ணிக் கொண்டிருக்கும் போது தான் சட்டென்று எனக்கு ஒன்று புரிந்தது. இந்த சூழலுக்கு ஏதோ ஒன்று குறையுதே... குறையுதே என்று குடைந்து கொண்டிருந்த கேள்விக்கு பதிலும் கிடைத்தது. காடாய் கவிந்து கிடக்கிற இந்த இடத்தில் ஒரு பறவையை கூட பார்க்க முடியவில்லையே. எந்தப் பறவையின் சத்தம் கூட இல்லாத நிசப்தமே இந்த சூழலின் குறை என்ற உண்மையும் புரிந்தது. காடாய் இங்கு மரங்கள் மண்டி கிடந்தாலும் ஏன் ஒரு பறவையை கூட காணமுடியவில்லை என்ற கேள்விக்கும் பதில் கிடைத்தது. இங்கு இருக்கும் இத்தனை மரங்களில்  பெருபாலானவை பூக்கவே பூக்காது. அப்படியே பூத்தாலும் காய்க்காது. அப்படியே காய்த்தாலும் பழுக்காது. பின் எப்படி இந்தக் காட்டில் பறவையை பார்க்க முடியும்? வெறும் நிழலுக்கு மட்டும் நம்ம ஊர்களில் மரம் வைப்பது இல்லைங்க. மரம்ன பழம் பழுக்கணும். பறவைங்க நிறைய வரணும். அணில்கள் மரத்தின் ஏறி விளையாடணும். பழம் திங்கணும். பசியாறணும். கூடு கட்டணும். குஞ்சு பொறிக்கணும். இதை எல்லாம் மனதில் வைத்து தான் நம்ம ஊர்களில் மரங்களை வைத்தார்கள். வளர்த்தார்கள். இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் வெளிநாட்டு மரங்களை நட்டு கேம்ஸ் வில்லேஜை காட்டுக்குள் மறைத்து வைத்து ஒரு சிடுகுஞ்சு கூட இல்லாத வனாந்தரமாக்கி என்ன பிரயோஜனம்?      இன்றைய அரசு அலுவலர்கள் போலல்லாமல் மரங்கள் வளர்ப்பதில் நமது முன்னோர்கள் எப்படி திட்டமிட்டும் சில முறைகளை கையாண்டு பல்வேறு வனங்களையும் சிறு காடுகளையும் உருவாக்கி வைத்திருந்தனர் என்பது மேலே கண்ட குறிப்புகளின் மூலம் நம்மால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது. அந்தக் காலத்திலேயே நமது முன்னோர்கள்    சுற்றுச்சூழல் பற்றிய அறிவு அக்கறை விழிப்புணர்வு போன்றவற்றில் எவ்வளவு சிறந்து விளங்கினார் என்பதற்கு சாட்சிகளாய் இருந்து வந்த இந்த வனங்கள் என்கிற சிறு காடுகள் அழிவதற்கு வெள்ளையர் ஆட்சி முக்கிய காரணமாகும்.வீரப்பாண்டிய கட்டபொம்மன் புதுக்கோட்டை பகுதியில் காடுகளில் பதுங்கி இருக்கும் போது எவ்வளவு தேடியும் அன்றைய் வெள்ளை அரசால் அவரை பிடிக்க முடியவில்லை.. இந்தக் காடுகள் தான் கட்டபொம்மனை பிடிக்க இடையூறாக இருக்கின்றன என்று கருதிய வெள்ளையர் அந்தக் காடுகளை அழிக்க ஒரு தந்திரத்தை கையாண்டனர். காடுகளில் உள்ள மரங்களை வெட்டி அழித்தால் வெட்டுபவர்களுக்கு சன்மானம் கொடுக்கப்படும் என்று அறிவித்தனர். மக்களும் இந்த அறிவிப்பில் மறைந்திருந்தத் தந்திரத்தைப் புரிந்து கொள்ளாமல் பணத்திற்கு ஆசைப்பட்டு மரங்களை வெட்டி சாய்த்தனர். இப்படி பல்வேறு காரணங்களினால் நமது ஊர்களை சுற்றி அமைந்திருந்த காடுகள் கொஞ்சம் கொஞ்சமாக காலப்போக்கில் அழிக்கப்பட்டன.இதன் விளைவாய் சுற்றுச்சூழலில் இருந்த சமன் நிலை  குழைந்தது.. இந்தக்  குலைவு மழைக் குறைவு மற்றும் மழை பொய்ப்பு  போன்ற பருவ நிலை மாற்றங்களுக்கு காரணமானது. அன்றைக்கு தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்ள ஊர் வனங்களை அழித்தனர் வெள்ளையர்கள். இன்றோ இயற்கை வனங்களையும் வளங்களையும் சுயநலனுக்காகக் கொள்ளையடிக்கின்றனர் அரசியல்வதிகள் என்ற போர்வையில்  மறைந்திருக்கும் சிலர். இதை நம் கொடும்விதி என்றே எண்ண வேண்டியிருக்கிறது. இப்படி நமது மரபில் இருந்த எத்தனையோ அறிவியல் சார்ந்த நடைமுறைகள் எல்லாம் உதாசீனப்படுத்தப்பட்டு கட்டாந்தரையாய்  கண்ட இடத்தில் எல்லாம் அது களிபூமி கரடு பூமி என்ற எந்தவிதமான வேறுபாடு இல்லாமல் கற்களை நட்டு மனை பிரிவுகளாக ஆக்கிக் கொண்டிருக்கிறோம். இப்படி வரைமுறையற்று உருவாக்கப்படுகிற குடியிருப்புகளில் வாழ்ந்தால் என்ன என்ன கேடுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்குமோ தெரியவில்லை?

எட்டு பேய் தலை விரிச்சி ஆடுற வீட்டுக்குள்ளே எட்டிப் பாத்ததாம் பத்து பிசாசு என்பது போல் கட்டாந்தரையிலும் கல்லை நட்டு வீட்டுமனையாக்கி கூத்தடிக்கும் இங்கே மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்திருக்கிற  நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டம் பகாசுர கார்பரேட்காரர்களின் என்னென்ன கொள்ளைக்கு வழிவகுக்கப் போகிறதோ?