Monday, 31 August 2015


தென்னை மர நிழடியில் புதையுண்டு தூங்கும் தொன்மை நகரம்.
-வெள் உவன்.

  உலகின் தொன்மையான மொழிகளில் தமிழ் மொழி முதன்மையானது. அது போலவே தமிழர்களின் நாகரிகமும் பண்பாடும் தொன்மையானதே. இவற்றை நிரூபிக்கும் இலக்கியச் சான்றுகளும் வெளிநாட்டவரின் குறிப்புகளும் நிறையவே உள்ளன. கூடவே தொல்லியல் சான்றுகளும் பல கிடைத்துள்ளன. உலக நாகரிகங்களில் சிறப்பானதும் பழைமையானதுமான சிந்து வெளி நாகரிகத்தை ஹாரப்பாவில் நடத்தப்பட்ட அகழ்வாய்வுகளே வெளிக் கொணர்ந்துள்ளன. அது போலவே தமிழர்களின் நாகரிகத்தின் தொன்மையை நிறுவ தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட அகழ்வாய்வுகள் துணை புரிந்திருக்கின்றன. தமிழ்நாட்டில் நடந்த அகழ்வாய்வுகளில் தலையானது ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வுகளே. அவை தமிழர்களின் நாகரிகத் தொன்மையைப் பலவாறு நிறுவி உள்ளன. அது போலவே கொடுமணல், அழகன்குளம், மாமல்லபுரம், பூம்புகார், பொருந்தல், மாங்குடி, உக்கிரன்கோட்டை என்று தமிழ்நாட்டின்  பல்வேறு இடங்களில் தொடர்ந்து அகழ்வாய்வுகள் நடந்து வந்து கொண்டிருக்கின்றன. இந்த அகழ்வாய்வுகள் மூலம் கிடைத்துள்ள தொல்லியல் சான்றுகள் பல தமிழரின் தொன்மையை நிறுவ உதவி வருகின்றன.
  தமிழ் நாட்டில் நெடுங்காலமாக சிறப்புப் பெறுகிற நகரங்கள் பல உள்ளன. அவற்றில் மதுரை நகர் முக்கிய இடத்தைப் பெறும்.   மதுரை நகரின் தொன்மையை ஏராளமான எழுத்துச் சான்றுகள் பேசுகின்றன. கிரேக்க அறிஞர்களான பிளினி, தாலமி மற்றும் மாவீரன் அலெக்ஸாண்டரின் தூதரான மெகஸ்தனிஸ் போன்ற வெளி நாட்டவரின் எழுத்துக் குறிப்புகளிலும் நமது சங்க இலக்கியங்களின் பாடல் வரிகளிலும் காணப்படுகிற தகவல்கள் இந்நகரம் 2500 ஆண்டுகளுக்கும் மேலான பழமையையும் இந்தியாவின் தொன்மை நகரங்களில் ஒன்று என்பதையும் காட்டித் தருவது உண்மை தான். இருந்தாலும் மதுரை மாநகரைப்   பற்றிய  சொல்லும்படியான தொல்லியல் புதைபொருள் சான்றுகள் இதுவரை எதுவும்  கிடைக்கவில்லை என்றே சொல்லப்பட்டு வருகிறது. இன்று மதுரை நகர் சார்ந்து நமக்குக் கிடைக்கக் கூடிய பெரும்பாலான வரலாற்றுச் சான்றுகள் அந்நகரின் வரலாற்றைக் கி.பி. பத்தாம் நூற்றாண்டுக்கு முந்தைய காலக் கட்டத்திற்கு நகர்த்துவற்குத் தோதான வலுவான ஆதாரங்கள் எதையும் கொண்டிருக்கவில்லை என்பதே அதிகமான வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து.

  இதுவரை மதுரையிலோ அல்லது அதைச் சுற்றிய பகுதியிலோ பெரிய அளவிலான அகழ்வாய்வுகள் எதுவும் நடைபெறவில்லை. அதற்குக் காரணம் அந்நகரத்தின் நீண்ட நெடிய தொடர்ந்த உயிர்துடிப்பும் வளர்ச்சிப் போக்கின் விளைவாய் உண்டாகும் வரலாற்றுச் சான்றுகளின் குலைவும் ஆகும்.

  இந்தப் பெரும் குறையைப் போக்கும் வகையில் மதுரைக்கு அருகில் உள்ள கீழடி என்னும் இடத்தில்  மத்திய தொல்லியல் துறைlயினரால் (Archaeological Survey of India) நடத்தப்பட்ட அகழ்வாய்வில் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு புதையுண்ட நகரத்தின் பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டம் திருபுவனம் வட்டம் சிலைமான் அருகில் கீழடி சந்தை புதூரில்  ஊரிலிருந்து கிழக்கே ஒரு கிலோமீட்டர் தூரத்தில் மணலூர் கண்மாயின் மேற்குக் கரையில் பள்ளிசந்தை திடல் என்று அழைக்கப்படும் இடத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கிற அகழ்வாய்வில் தான் புதையுண்டு போன தொன்மை நகரத்தைப் பற்றிய உண்மைகள் தெரிய வந்து கொண்டிருக்கின்றன..

  அகழ்வாய்வுகள் நடந்து கொண்டிருகிற இந்தப் பகுதி தரையிலிருந்து சுமார் இரண்டரை மீட்டர் உயரத்திற்கு மேடிட்டுக் காணப்படுகிறது. இந் நிலப்பகுதி இன்றைக்குத் தென்னை மரங்கள் அடர்ந்த தோப்புகளாக இருக்கின்றன. தென்னை மரங்கள் விரித்திருக்கிற நிழற்போர்வைக்குக் கீழே அடி ஆழத்தில் உறங்கிக்கொண்டிருக்கிறது இந்தத் தொன்மை நகரம் .  ஆம்,  தென்னந்தோப்புகள் நிறைந்திருக்கிற இந்தப் பகுதி ஏறத் தாழ 90 ஏக்கர் பரப்பளவைக் கொண்டதாக இருக்கிறது. இத்தனை பெரிய பரப்பில் எங்கு அகழ்ந்தாலும் தொல்லியல் எச்சங்கள் ஏராளமாகக் கிடைப்பதாகச் சொல்கிறார் இந்த அகழவாராய்ச்சியைத் தலைமை ஏற்று நடத்தி வரும்  தொல்லியல் அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணன்.
  இந்த இடம் என்ன காரணத்தினால் அகழ்வாய்வுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது என்ற கேள்விக்கு அவரின் பதில் ‘பொதுவாக நதிக்கரை ஓரங்களில் தான் நாகரிகங்கள் செழித்து வளர்ந்திருக்கின்றன. இது உலக அளவில் உணரப்பட்ட ஓர் உண்மை. அந்த அடிப்படையில் தமிழகத்தின் முக்கிய நீராதரங்களில் ஒன்றான வைகை நதி மேற்குத் தொடர்ச்சி மலை வெள்ளிமலை அருகில் உற்பத்தியாகி தேனி மதுரை சிவகங்கை ராமநாதபுரம் மாவட்டங்களின் வழியே பாய்ந்தோடுகிறது. தொல்லியல் பெருமைகள் பலவற்றை உள்ளடக்கிய இந்தப் பள்ளத்தாககில் குறிப்பிடும்படியான அகழ்வாய்வுகள் இதுவரை நடத்தப்படவில்லை. இந்தப் பள்ளதாக்குப் பகுதியில் மத்திய தொல்லியல் துறை (ASI) 2013-14-ல் நடத்திய கள ஆய்வில் கிட்டத்தட்ட 293 தொல்லியல் எச்சங்களைக் கொண்ட இடங்கள் அடையாளம் காணப்பட்டன. அவற்றுள் மதுரை அருகிலுள்ள கீழடி கிராமத்தில் நிலத்தின் மேற்பரப்பிலேயே காணப்பட்ட தொல்லியல் எச்சங்களின் செழுமையின் காரணமாக தொல்லியல் ஆய்விற்கு இந்த இடம் தேர்வு செய்யப்பட்டது என்பதாக இருந்தது.

  மேலும் இந்த அகழ்வாய்வில் இது வரை கண்டெடுக்கப்பட்ட பொருட்கள், அதன் தன்மை இயல்பு மற்றும் புதையுண்டு போன நகரத்தின் சிறப்பு என்று பலவற்றை அவர் விளக்கினார்.  90 ஏக்கர் அளவில் பரந்து கிடக்கிற இந்த தென்னந்தோப்பு பகுதியில் ஏறத்தாழ ஒன்று முதல் இரண்டு ஏக்கர் பரப்பு தான் அகழந்து ஆய்வு செய்யப்பட்டிருக்கின்றது. இந்த சிறிய பரப்பிலேயே ஏராளமான தொல்பொருட்கள் கிடைத்திருக்கின்றனவாம்.

  தமிழி (தமிழ் பிராமி) எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மற்றும் குறியீடுகளைக் கொண்ட மண்பானை ஓட்டுச் சில்லுகளும் கிடைத்திருக்கின்றவாம். தமிழியில் (தமிழ் பிராமி) எழுதபட்ட சில சொற்களை . ஆதன், திசன், இயனன் என்பதாக படித்திருக்கிறார்கள். மேலும் மணிகள், துளையிடப்பட்ட முத்துகள், கிரிஸ்டல், குவார்ட்ஸில் உருவாக்கப்பட்ட காது வளையம் (தண்டட்டி), தந்தத்திலான முத்திரை, சுடுமண்  சதுரங்கக்காய் (chess coin), சங்கு வளையல், அம்மி, குழவி,  என்று ஏராளாமான பொருட்கள் கிடைத்திருக்கின்றன.

  அது போலவே தமிழ் நாட்டில் இதுவரை நடந்த அகழ்வாய்வில் மக்களின் குடியிருப்பு பகுதிகள் அநேகமாக கண்டுபிடிக்கப்படவில்லை. இது வரையில் நடந்திருக்கிற அகழ்வாய்களில் கண்டடைந்தப் பகுதிகள் கோயில்களாகவோ புத்த விகாரைகளாகவோ ஈமக்காடுகளாகவோ வணிகத் தலங்களாவோ தான் இருந்திருக்கின்றன. ஆனால் இந்த முறை மாறுபாடாக பள்ளிசந்தைத் திடல் தென்னந்தோப்பு அகழ்வுக் களம் முற்றிலும் மக்கள் குடியிருப்புப் பகுதியாக அமைந்து விட்டது. அந்த வகையில் தமிழ் நாட்டில் நடந்த முதல் மக்கள் குடியிருப்பு பகுதியின் அகழ்வாய்வு என்று கூட இதைக் குறிப்பிடலாம். இந்தப் பகுதியில் ஒரு சுடுமண் உறை கிணறும் கண்டுபிடிக்கபட்டுள்ளது. குறிப்பாக இந்தப் பகுதியில் புதையுண்டு போன  செங்கல் கட்டுமானங்களும் (brick  structures)  அகழ்ந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தச் செங்கற்கள் ஹாரப்பா செங்கற்களை ஒத்த செங்கற்களாக இருப்பது கூடுதல் சிறப்பு. 

  இந்தப் பகுதியில் தோண்டப்பட்ட ஆய்வு குழிகளில் கருப்பு-சிவப்பு நிறத்தில் சுடுமண்பாண்டங்கள் ஏராளமாகக் கிடைப்பது சற்று வியப்பை உண்டாக்கும் விதத்தில் இருக்கின்றது. கருப்பு-சிவப்பு மட்பாண்டம் என்பது அந்தப் பாண்டம் கருப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் இருப்பதை அந்தப் பாண்டத்தை குறிக்க பயன்படுத்துகிற சொல்லே தெரிவிக்கிறது. தொல்லியலாளர்கள் இதனை black and red ware (BRW) என்றே குறிப்பிடுகின்றனர். 

  இப்படி கருப்பு மற்றும் சிவப்பு நிறங்கள் இரண்டையும் ஒரே பாண்டத்தில் உருவாக்குவது என்பது தமிழருக்கே உரித்தான ஒரு சிறப்பு வாய்ந்த தனித் தன்மையான தொழில் நுட்பத்தால் சாத்தியபட்டிருக்கிறது. ஏனென்றால் இந்தச் சிறப்புத் தன்மை கொண்ட சுட்ட கருப்பு-சிவப்பு மண்பானைகள் தென்னிந்தியாவில் நடத்தப்படுகிற அக்ழாய்வுகளில் மட்டுமே கிடைப்பதாக தொல்லியல் அறிஞர்கள் கருதுகிறார்கள்
.
  மேலும் பிற பகுதிகளில் கிடைக்கிற கருப்பு சிவப்பு பாண்டங்களை இந்த BRW என்கிற கருப்பு-சிவப்பு பாண்டங்களோடு குழப்பிக் கொள்ள கூடாது என்பதும் அவர்களால் எச்சரிக்கைப்படுகிற ஒன்று. குறிப்பாக சிந்து வெளியில் காணப்படுகிற கருப்பு சிவப்பு பாண்டங்களிருந்து வேறுபட்டது தென்னிந்தியாவில் காணப்படும் கருப்பு-சிவப்பு பாண்டங்கள் என்கிறார்கள். பொதுவாகத் தமிழ்நாட்டில் கிடைக்கும் கருப்பு-சிவப்பு பாண்டங்கள் (BRW) உட்பக்கம் கருப்பாகவும் வெளிப்பக்கம் சிவப்பாகவும் இருக்கும். இவ்வாறு ஒரே பாண்டத்தின் உட்பக்கமும் வெளிப்பக்கமும்  வேறு வேறு வண்ணங்களாக இருக்கும்படி உருவாக்க  தலைகீழ் சூடு (inverted firing) என்கிற ஒரு தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். சுட வேண்டிய பாத்திரத்தின் உட்பக்கம் செம்பு (copper) மற்றும் சிலவகை மூலிகைச் சாறுகளை பூசி பாத்திரத்தின் வாயை காற்றுப் புகவோ வெளியேறவோ முடியாதவாறு இறுகப் பொருத்தி அடைத்து உயிர்வளியுடன் இணைவுறச் (oxidization) செய்து இரட்டை சூடுமுறை என்கிற தனித்துவமான முறையில்  சூளையில் தலைகீழாக சுட்டு எடுப்பதே தலைகீழ் சூடு முறையாகும். 

  இந்த முறையில் சுட்டு எடுக்கப்படும் மண் பாத்திரங்கள் மெலியதாகவும் அதே நேரத்தில் உலோகத்தைப் போன்று வலுவுடையதாகவும் இருந்திருக்கின்றன. தமிழர்களுக்கே ஆனதும் இன்று அவர்கள் தொலைத்துப் போக்கியதுமான இந்தச் சிறப்புத் தொழில் நுட்பத்தை மீட்டெடுக்க வழி தெரியாத நிலை தான் தற்போது இருந்து வருவதாகச் சொல்லப்படுகிறது. அதாவது நம் முன்னோர்களின் அரிய தொழில் நுட்பத்தை நாம் தொலைத்துப் போக்கி விட்டோம் என்பது தான் கசக்கும் உண்மை.

  கபாடபுரத்தைக் கடல் கொண்ட பின் வடக்கு நோக்கி நகர்ந்து பொருநை நதிக்கரை மணலூரைத் தலைநகராகக் கொண்டு சில காலம் ஆட்சி செய்த பாண்டியர்கள் பின் மேலும் வடக்காக நகர்ந்து வைகைப் பள்ளத்தாக்கில் மதுரை என்ற நகரை உருவாக்கி அதனையே தலைநகராக்கினர் என்பதான உறுதிபடுத்தப்படாத ஒரு சேதி உண்டு. கூடவே அந்த மதுரை இன்றைய மதுரை அல்ல என்றும் சொல்லும் அந்தச் சேதி. தற்போதைய கீழடி ஊரிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் மணலூர் கண்மாயின் மேல்கரையில் தான் அகழாய்வு நடக்கும் பள்ளிசந்தை திடலின் தென்னந்தோப்பு இருக்கிறது என்பது உள்ளூர் மக்கள் தரும் தகவல். இங்கே தென்னை மர நிழலடியில் புதையுண்டு தூங்குகிற நகரம் தான் மணலூரிலிருந்து வடக்காக நகர்ந்த பாண்டியர்கள் உருவாக்கிய அந்த முதல் மதுரையோ? 
  

   தென்னந்தோப்பில் தொடர்ந்து நடந்து வருகிற அகழாய்வு சான்றுகள் வரும் நாள்களில் முதல் மதுரையை நமக்குக் காட்டித் தரட்டுமே.


 உறைக்கிணறு ஆய்வுக்காக அகழப்பட்டிருக்கும் குழி


மண்ணில் புதையுண்டிருக்கும் கருப்பு-சிவப்பு கிண்ணம்